தானியேலின் புத்தகம் 11:3-28

தானியேலின் புத்தகம் 11:3-28 TAERV

பிறகு மிகவும் பலமும், வல்லமையும் கொண்ட ராஜா வருவான். அவன் பெரும் வல்லமையுடன் ஆள்வான். அவன் விரும்புகிற எதையும் செய்வான். அதற்குப் பிறகு அவனது இராஜ்யம் உடைந்துபோகும். உலகின் நான்கு பாகங்களாக அவனது இராஜ்யம் பங்கு வைக்கப்படும். அவனது இராஜ்யம் அவனது பிள்ளைகளுக்கோ, பேரப்பிள்ளைகளுக்கோ பங்கு வைக்கப்படமாட்டாது. அவன் பெற்ற வல்லமையை அவனது இராஜ்யம் பெறாது. ஏனென்றால் அவனது இராஜ்யம் பிடுங்கப்பட்டு மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும். “தெற்கிலுள்ள ராஜா பலமுள்ளவனாவான். ஆனால் அவனது தளபதிகளில் ஒருவன் தெற்கிலுள்ள ராஜாவைத் தோற்கடிப்பான். அந்தத் தளபதி ஆளத்தொடங்குவான். அவன் மிகவும் வல்லமையுடையவனாக இருப்பான். “பிறகு சில ஆண்டுகள் கழிந்ததும் தென் பகுதி ராஜாவும் அந்தத் தளபதியும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். தென் பகுதி ராஜாவின் குமாரத்தி, வடபகுதி ராஜாவை மணந்துகொள்வாள். அவள் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக இதனைச் செய்வாள். ஆனால் அவளும், தென் பகுதி ராஜாவும் போதுமான வல்லமையுடைவர்களாக இருக்கமாட்டார்கள். ஜனங்கள் அவளுக்கு எதிராகவும், அவளை அந்நாட்டுக்குக் கொண்டுவந்தவனுக்கு எதிராகவும் திரும்புவார்கள். அந்த ஜனங்கள் அவளது குழந்தைக்கு எதிராகவும், அவளுக்கு உதவியவனுக்கு எதிராகவும் திரும்புவார்கள். “ஆனால் அவளது குடும்பத்திலிருந்து ஒருவன் வந்து தென்பகுதி ராஜாவின் இடத்தைப் பிடிக்க வருவான். அவன் வடபகுதி ராஜாவின் படையைத் தாக்கி, அவனது பலம்வாய்ந்த கோட்டைக்குள் நுழைவான். அவன் போர் செய்து வெல்வான். அவன் அவர்கள் தெய்வங்களின் விக்கிரகங்களை எடுப்பான். அவன் அவர்களின் உலோக விக்கிரகங்களை எடுப்பான். வெள்ளியாலும், பொன்னாலுமான விலைமதிப்புள்ளவற்றையும் எடுப்பான். அவன் அவற்றை எகிப்துக்கு எடுத்துச்செல்வான். அவன் சில ஆண்டுகள் வடபகுதி ராஜாவுக்குத் தொல்லை கொடுக்கமாட்டான். வடபகுதி ராஜா, தெற்கு இராஜ்யத்தைத் தாக்குவான். ஆனால் அவன் தோல்வியடைந்து தனது சொந்தநாட்டிற்குப் போவான். “வடபகுதி ராஜாவின் குமாரர்கள் போருக்குத் தயார் செய்வார்கள். அவர்கள் ஒரு பெரும் படையைச் சேர்ப்பார்கள். அந்தப் படை நாட்டை வெள்ளம்போல் வேகமாகக் கடக்கும். அந்தப் படை தெற்கத்தி ராஜாவின் பலமான கோட்டை வரை தாக்கும். பிறகு தென்பகுதி ராஜா மிகவும் கோபங்கொள்வான். அவன் வடபகுதி ராஜாவோடு போரிட படையை நடத்திச் செல்வான். வடபகுதி ராஜாவுக்குப் பெரும்படை இருக்கும். ஆனால் அவன் போரில் தோல்வியடைவான். வடபகுதி படை தோற்கடிக்கப்படும். அவ்வீரர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள். தென்பகுதி ராஜா மிகவும் பெருமைகொள்வான். அவன் வடபகுதிப் படையில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வான். ஆனால் அவன் தொடர்ந்து வெற்றி பெறமாட்டான். வடபகுதி ராஜா இன்னொரு படையைப் பெறுவான். அப்படை முந்திய படையைவிட மிகப் பெரியதாக இருக்கும். பல ஆண்டுகளுக்குப்பிறகு அவன் தாக்குவான். அப்படைக்கு ஏராளமான ஆயுதங்கள் இருக்கும். அப்படை போரிடத் தயாராக இருக்கும். “அந்தக் காலங்களில், பல ஜனங்கள் தென்பகுதி ராஜாவுக்கு எதிராக மாறுவார்கள். உனது சொந்த ஜனங்களில் சிலர் போரை நேசிப்பவர்கள் தென் பகுதி ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்வார்கள். அவர்கள் வெல்லமாட்டார்கள். ஆனால், அவர்கள் இதைச் செய்யும்போது இந்தத் தரிசனத்தை உண்மையாக்குவார்கள். பிறகு வடபகுதி ராஜா வந்து நகரத்தின் மதில்களுக்கெதிராகக் கொத்தளங்களைக் கட்டுவான். பிறகு பலமான நகரத்தைப் பிடிப்பான். தென் பகுதி படைக்குத் திரும்பவும் போரிட வல்லமை இராது. தென்பகுதிப் படையிலுள்ள சிறந்த வீரர்களும் வடபகுதிப் படையைத் தடுக்கிற வல்லமை இல்லாமல் இருப்பார்கள். “வடபகுதி ராஜா தான் விரும்பியதையெல்லாம் செய்வான். எவரும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் வல்லைம பெற்று அழகான நாட்டை தன் அதிகாரத்திற்குள் கொண்டுவருவான். அவன் அதை அழிக்கிற வல்லமையையும் பெற்றிருப்பான். வடபகுதி ராஜா தனது வல்லமை அனைத்தையும் பயன்படுத்தி தென்பகுதி ராஜாவோடு போரிட முடிவு செய்வான். அவன் தென்பகுதி ராஜாவோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். வடபகுதி ராஜா தனது குமாரத்திகளுள் ஒருத்தியைத் தென்பகுதி ராஜாவை மணந்துகொள்ளச் செய்வான். வடபகுதி ராஜா தென்பகுதி ராஜாவைத் தோற்கடித்து விடலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்வான். ஆனால் அத்திட்டங்கள் வெற்றியடையாது, அவன் திட்டங்கள் அவனுக்கு உதவாது. “பிறகு வடபகுதி ராஜா தன் கவனத்தை மத்தியத் தரைக்கடல் கரையோர நாடுகளுக்கு நேராகத் திருப்புவான். அங்குள்ள பல நகரங்களை அவன் தோற்கடிப்பான். ஆனால் பிறகு ஒரு தளபதி அவனது பெருமைக்கும், கலகச் செயல்களுக்கும் ஒரு முடிவு காண்பான். அந்த தளபதி, வடபகுதி ராஜா வெட்கமடையும்படிச் செய்வான். “அது நடந்தபிறகு, வடபகுதி ராஜா பலமான அரண்களுடைய தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப்போவான். ஆனால் அவன் பலவீனமுடையவனாக இருப்பான். அவன் விழுவான். அவன் முடிவடைவான். “அந்த வடபகுதி ராஜாவுக்குப்பிறகு ஒரு புதிய ராஜா வருவான். அந்த ராஜா ஒரு வரிவசூலிப்பவனை அனுப்புவான். அந்த ராஜா தான் வளமான வழியில் வாழ போதிய செல்வம் உடையவனாக இருக்க இதனைச் செய்வான். ஆனால் சில ஆண்டுகளில் அந்த ராஜா அழிக்கப்படுவான். ஆனால் அவன் போரில் மரிக்கமாட்டான். “அந்த ராஜாவைப் பின்தொடர்ந்து ஒரு கொடுமையான வெறுக்கத்தக்க மனிதன் வருவான். அவனுக்கு அரச குடும்பத்தவன் என்ற பெருமை இருக்காது. அவன் தந்திரமான வழியில் ராஜா ஆவான். ஜனங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரும்போது அவன் இராஜ்யத்தைத் தாக்குவான். அவன் பெரிய வல்லமை மிக்கப் படைகளைத் தோற்கடிப்பான். அவன் ஒப்பந்தம் உடைய தலைவனையும் தோற்கடிப்பான். பல நாடுகள் இந்தக் கொடூரமான வெறுக்கதக்க ராஜாவோடு ஒப்பந்தத்தைச் செய்துகொள்வார்கள். ஆனால் அவன் அவர்களிடம் பொய் பேசி ஏமாற்றிவிடுவான். அவன் பெரும் பலத்தைப் பெறுவான். ஆனால் வெகு சிலர் மட்டுமே அவனுக்கு ஆதரவாக இருப்பார்கள். “வளமான நாடுகள் பாதுகாப்பை உணரும்போது கொடூரமும் வெறுக்கத்தக்கக் குணமும் கொண்ட அந்த ராஜா போய் தாக்குவான். அவன் சரியான காலத்தில் தாக்கி அவனது பிதாக்கள் வெற்றிபெறாத இடங்களில் தான் வெற்றிபெறுவான். அவன் தோற்கடித்த நாடுகளிலிருந்து பொருட்களை எடுத்துக்கொள்வான். அவன் அப்பொருட்களைத் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கொடுப்பான். அவன் பலமான நகரங்களைத் தோற்கடித்து அழிக்கத் திட்டம் போடுவான். அவன் வெற்றிபெறுவான். ஆனால் அது குறுகிய காலத்திற்குத்தான். “அந்த கொடூரமான வெறுக்கத்தக்க ராஜாவுக்கு மிகப்பெரிய படை இருக்கும். அவன் அப்படையைப் பயன்படுத்தி தனது வல்லமையையும் தைரியத்தையும் காட்டி தென் பகுதி ராஜாவைத் தாக்குவான். தென் பகுதி ராஜா மிகப்பெரியதும், வல்லமை உடையதுமான படையைப் பெற்று போருக்குப் போவான். ஆனால் அவனுக்கு எதிரான ஜனங்கள் இரகசிய திட்டங்களை இடுவார்கள். தென்பகுதி ராஜா தோற்கடிக்கப்படுவான். தென்பகுதி ராஜாவுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் அவனை அழிக்க முயற்சி செய்வார்கள். அவனது படை தேற்கடிக்கப்படும். போரில் அவனது படைவீர்களில் பலர் கொல்லப்படுவார்கள். அந்த இரண்டு ராஜாக்களும் ஒருவருக்கு ஒருவர் தீமைச் செய்ய நினைப்பார்கள். அவர்கள் ஒரே பந்தியில் உட்கார்ந்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் பொய் சொல்வார்கள். அதனால் இருவருக்கும் எந்த நன்மையும் விளைவதில்லை. ஏனென்றால் தேவன் அவர்களது முடிவுகாலத்தைக் குறித்திருக்கிறார். “வடபகுதி ராஜா பெருஞ்செல்வத்தோடு தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான். பிறகு அவன் பரிசுத்தமான உடன்படிக்கைக்கு எதிராக தீமைகளைச் செய்ய முடிவுச் செய்வான். அவன் தனது திட்டப்படி செய்தபிறகு, தனது சொந்த நாட்டிற்குத் திரும்பிப் போவான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த தானியேலின் புத்தகம் 11:3-28