பிரச 5:11-20

பிரச 5:11-20 IRVTAM

பொருள் பெருகினால் அதை சாப்பிடுகிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்களுடைய கண்களினால் அதைக் காண்பதைத் தவிர அவர்களுக்கு பலன் என்ன? வேலைசெய்கிறவன் கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் அவனுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்; செல்வந்தனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவிடாது. சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடு உண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம். அந்த ஐசுவரியம் துரதிர்ஷ்டத்தினால் அழிந்துபோகிறது; அவன் ஒரு மகனைப் பெறுகிறான்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லை. தன்னுடைய தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாக வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாகத் திரும்பப் போவான்; அவன் தன்னுடைய பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன்னுடைய கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை. அவன் வந்தபடியே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்காக உழைத்ததால் அவனுக்கு லாபம் என்ன? அவன் தன்னுடைய நாட்களிலெல்லாம் இருளிலே சாப்பிட்டு, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான். இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாட்களெல்லாம் மனிதன் சாப்பிட்டுக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் உழைத்த அனைத்தின் பலனையும் அனுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. தேவன் ஐசுவரியத்தையும் செல்வத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே சாப்பிடவும், தன்னுடைய பங்கைப் பெறவும், தன்னுடைய பிரயாசத்திலே மகிழ்ச்சியாக இருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய வெகுமதி. அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு தயவு செய்கிறபடியினால், அவன் தன்னுடைய உயிருள்ள நாட்களை அதிகமாக நினைக்கமாட்டான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிரச 5:11-20