பிரசங்கி 5:11-20

பிரசங்கி 5:11-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதைக் காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன? வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும், அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது. சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம். அந்த ஐசுவரியம் விக்கினத்தால் அழிந்துபோகிறது; அவன் ஒரு புத்திரனைப் பெறுகிறான்; அவன் கையில் யாதொன்றும் இல்லை. தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை. அவன் வந்த பிரகாரமே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்குப் பிரயாசப்பட்டதினால் அவனுக்கு லாபம் என்ன? அவன் தன் நாட்களிலெல்லாம் இருளிலே புசித்து, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான். இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன்அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம். அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு அநுக்கிரகம் பண்ணுகிறபடியினால், அவன் தன் ஜீவனுள்ள நாட்களை அதிகமாய் நினையான்.

பிரசங்கி 5:11-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பொருள்கள் அதிகரிக்கிறபோது, அதைப் பயன்படுத்துவோரும் அதிகரிக்கிறார்கள். அவற்றைத் தமது கண்களால் பார்த்து மகிழ்வதைத் தவிர, எஜமானனுக்கு வேறு என்ன பயன்? தொழிலாளி கொஞ்சம் சாப்பிட்டாலும், அதிகம் சாப்பிட்டாலும் அவனுடைய நித்திரை இனிமையாயிருக்கும். ஆனால் பணக்காரனின் நிறைவோ அவனுக்கு நித்திரையைக் கொடுப்பதில்லை. சூரியனுக்குக் கீழே பெருந்தீமை ஒன்றை நான் கண்டேன்: அதாவது, செல்வம் தன் எஜமானனுக்கே கேடுண்டாகும்படி சேர்த்து வைக்கப்படுவதும், அவல நிகழ்வினால் அந்தச் செல்வம் தொலைந்துபோகிறதுமே. அதினால் அந்த எஜமானனுக்கு ஒரு மகன் இருந்தும் அவனுக்குக் கொடுப்பதற்கு ஒன்றுமிருப்பதில்லை. மனிதன் தன் தாயின் கருப்பையிலிருந்து நிர்வாணியாய் வருகிறான்; வருவதுபோலவே போகிறான். அவன் தன் உழைப்பிலிருந்து தன் கைகளில் ஒன்றும் எடுத்துக் கொண்டுபோவதில்லை. இதுவும் ஒரு கொடுமையான தீமையே: மனிதன் தான் வருவதுபோலவே புறப்பட்டுப் போகிறான்; இதினால் அவன் பெறுவது என்ன? அவனுடைய கஷ்ட உழைப்பும் வீணே. அவன் தனது வாழ்நாட்களில் விரக்தியுடனும், நோயுடனும், கோபத்துடனும், இருளில் சாப்பிடுகிறான். ஆகவே ஒரு மனிதன் சாப்பிட்டுக் குடித்து சூரியனுக்குக் கீழே தனது கடும் உழைப்பில் திருப்தி காண்பதே நல்லது என நான் கண்டேன்; இறைவன் அவனுக்குக் கொடுத்திருக்கும் குறுகிய வாழ்நாள் காலத்தில் இது தகுதியானது. ஏனெனில் இதுவே அவன் பங்கு. மேலும் இறைவன் எவனுக்காவது செல்வத்தையும், சொத்தையும் கொடுத்து, அத்துடன் அவற்றை அனுபவிக்கவும், தன் பங்கை ஏற்றுக்கொண்டு தன் உழைப்பில் மகிழ்ச்சியாய் இருக்கவும் செய்வது இறைவனின் ஒரு கொடையே. இறைவன் அவனுடைய இருதயத்தை மகிழ்ச்சியின் எண்ணங்களால் நிரப்பியிருப்பதினால், அவன் தனது வாழ்நாட்கள் கடந்துபோவதைக் குறித்து நினைப்பதில்லை.

பிரசங்கி 5:11-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பொருள் பெருகினால் அதை சாப்பிடுகிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்களுடைய கண்களினால் அதைக் காண்பதைத் தவிர அவர்களுக்கு பலன் என்ன? வேலைசெய்கிறவன் கொஞ்சமாக சாப்பிட்டாலும், அதிகமாக சாப்பிட்டாலும் அவனுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்; செல்வந்தனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவிடாது. சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடு உண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம். அந்த ஐசுவரியம் துரதிர்ஷ்டத்தினால் அழிந்துபோகிறது; அவன் ஒரு மகனைப் பெறுகிறான்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லை. தன்னுடைய தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாக வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாகத் திரும்பப் போவான்; அவன் தன்னுடைய பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன்னுடைய கையிலே எடுத்துக் கொண்டுபோவதில்லை. அவன் வந்தபடியே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்காக உழைத்ததால் அவனுக்கு லாபம் என்ன? அவன் தன்னுடைய நாட்களிலெல்லாம் இருளிலே சாப்பிட்டு, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான். இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாட்களெல்லாம் மனிதன் சாப்பிட்டுக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் உழைத்த அனைத்தின் பலனையும் அனுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. தேவன் ஐசுவரியத்தையும் செல்வத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே சாப்பிடவும், தன்னுடைய பங்கைப் பெறவும், தன்னுடைய பிரயாசத்திலே மகிழ்ச்சியாக இருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய வெகுமதி. அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு தயவு செய்கிறபடியினால், அவன் தன்னுடைய உயிருள்ள நாட்களை அதிகமாக நினைக்கமாட்டான்.

பிரசங்கி 5:11-20 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒருவன், மிகுதியான செல்வத்தைப் பெறும்போது அதைச் செலவுசெய்ய உதவும் மிகுதியான “நண்பர்” களைப் பெறுகிறான். எனவே அந்த செல்வந்தன் உண்மையில் ஆதாயமடைவது ஒன்றுமில்லை. அவன் தன் செல்வத்தைப் பார்க்க மட்டுமே முடியும். ஒருவன், பகல் முழுவதும் கடுமையாக உழைத்தால் இரவில் சமாதானமாகத் தூங்குகிறான். அவனுக்கு உண்பதற்கு மிகுதியாக உள்ளதா குறைவாக உள்ளதா என்பதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் செல்வந்தன் தன் செல்வத்தைப்பற்றிக் கவலைபட்டுக்கொண்டு தூங்காமல் இருக்கிறான். இந்த வாழ்க்கையில் நிகழும் மிகவும் சோகமான ஒரு காரியத்தை நான் கண்டிருக்கிறேன். ஒருவன் தன் செல்வத்தை எதிர்காலத்திற்காகவே சேமித்து வைக்கிறான். அதன் பிறகு ஏதாவது கெட்ட காரியம் நிகழும்போது எல்லாவற்றையும் இழக்கின்றான். தன் குமாரனுக்குக்கொடுக்க எதுவும் இல்லாமல் போகிறது. ஒருவன் தன் தாயின் உடலிலிருந்து வெளியே வரும்போது எதுவும் இல்லாமலேயே வருகிறான். அவன் மரிக்கும்போதும் எதுவும் இல்லாமலேயே போகிறான். பொருட்களைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைக்கிறான். ஆனால் மரிக்கும்போது எதையும் எடுத்துச் செல்வதில்லை. இது மிகவும் சோகமானது. அவன் வந்ததுபோலவே இந்த உலகைவிட்டு விலகியும் போகிறான். “காற்றைப் பிடிக்கும் முயற்சியால்” ஒருவன் பெறப்போவது என்ன? அவனது வாழ்நாட்கள் சோகத்தாலும் துன்பத்தாலும் நிறைந்துபோகும். முடிவில் அவன் சலிப்பும், நோயும், வெறுப்பும், கோபமும் அடைவான். உண்டு, குடித்து, இவ்வுலகில் வாழும் குறுகிய வாழ்வில் தான் செய்யும் வேலையில் இன்பம் காண்பதுதான் ஒருவன் செய்யும் சிறப்பான செயல்கள் என்று நான் எண்ணுகிறேன். அவனுக்கு இருப்பதெல்லாம் தேவன் கொடுத்த குறுகிய வாழ்க்கை மட்டுமே. அவனுக்கு வேறெதுவும் இல்லை. தேவன், ஒருவனுக்குச் செல்வத்தையும் சொத்துக்களையும் அவற்றை அனுபவிப்பதற்கான உரிமையையும் கொடுத்திருக்கும்போது அவன் அவற்றை அனுபவித்து மகிழவேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு அவன் தனது வேலையில் இன்பம் காண வேண்டும். இது தேவனால் கொடுக்கப்பட்ட பரிசு. ஒருவனால் நீண்டகாலம் வாழமுடியாது. எனவே அவன் இதனை வாழ்வு முழுவதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். ஒருவன் செய்ய விரும்புகிற வேலைகளில் தேவன் அவனைச் சுறுசுறுப்பாக வைத்துள்ளார்.