யாக் 2:3-13

யாக் 2:3-13 IRVTAM

அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பட்சபாதத்துடன், தகாத சிந்தனைகளோடு தீர்ப்பளிக்கிறவர்களாக இருப்பீர்களல்லவா? என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள்? உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ நிந்திக்கிறார்கள்? உன்னிடத்தில் நீ அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீகப்பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். நீங்கள் பட்சபாதமுள்ளவர்களாக இருந்தால், பாவம்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயந்தீர்க்கப்படுவீர்கள். எப்படியென்றால், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான். ஏனென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரம் செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய். சுதந்திரப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்பு அடையப்போகிறவர்களாக அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள். ஏனென்றால், இரக்கம் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.