யாக்கோபு 2:3-13
யாக்கோபு 2:3-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்கள் பளபளப்பான உடை அணிந்துவந்த அந்த மனிதனைப் பார்த்து, “இங்குள்ள நல்ல இருக்கையில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று, அவனுக்கு விசேஷ கவனிப்பைக் கொடுத்து, அந்த ஏழையைப் பார்த்தோ, “நீ அங்கே நில்” அல்லது, “எனது காலடியில், தரையில் உட்கார்ந்துகொள்” என்றும் சொன்னால், நீங்கள் உங்களுக்குள்ளே வேறுபாடு காண்பிக்கிறீர்கள் அல்லவா? இதனால் நீங்கள் அவர்களைத் தீய எண்ணத்துடன் மதிப்பிடுகிறீர்களே! எனக்கு பிரியமானவர்களே, கேளுங்கள்: உலகத்தாரின் பார்வையில் ஏழைகளாய்க் காணப்பட்டவர்களை, விசுவாசத்தில் செல்வந்தர்களாய் இருக்கும்படி, இறைவன் தெரிந்துகொள்ளவில்லையா? அவர்கள் இறைவனில் அன்பாயிருக்கிறவர்களுக்கு வாக்குப்பண்ணிய அரசை உரிமைச்சொத்தாகக் கொடுக்கும்படியும், ஏழைகளையே தெரிந்துகொண்டாரே. ஆனால் நீங்களோ, ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்கள் அல்லவா உங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள்? அவர்கள் அல்லவா உங்களை நீதிமன்றத்துக்கு இழுத்துச்செல்கிறார்கள்? உங்களை உரிமையாகக் கொண்டிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய சிறப்பான பெயருக்கு அவர்கள் அல்லவா அவமதிப்பைக் கொண்டுவருகிறார்கள். “உன்னில் அன்பாயிருப்பதுபோல், உன் அயலவனிலும் அன்பாயிரு” என்று வேதவசனத்தில் கூறப்பட்டிருக்கின்ற, இந்த அரச சட்டத்தை நீங்கள் உண்மையாகக் கைக்கொள்வீர்களானால், நீங்கள் நல்லதைச் செய்கிறவர்களாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் பாரபட்சம் காட்டுவீர்களானால், நீங்கள் பாவம் செய்கிறீர்கள்; சட்டத்தை மீறியவர்கள் என்று மோசேயின் சட்டத்தினால் குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படுவீர்கள். ஏனெனில், யாராவது ஒருவன் மோசேயின் சட்டத்தை முழுவதும் கைக்கொண்டு, ஒன்றில் மட்டும் தவறினால், அவன் முழு சட்டத்தையும் மீறிய குற்றவாளியாகிறான். “விபசாரம் செய்யாதே” என்று சொன்னவர், “கொலை செய்யாதே” என்றும் சொல்லியிருக்கிறார். எனவே நீ விபசாரம் செய்யாவிட்டாலும், கொலை செய்தால், நீ மோசேயின் சட்டத்தை மீறியவனாகின்றாய். விடுதலை அளிக்கும் சட்டத்தின் அடிப்படையிலேயே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படப் போகிறபடியால் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள். ஏனெனில், இரக்கம் காட்டாமல் நடந்து கொள்கிறவனுக்கு, இரக்கமற்ற நியாயத்தீர்ப்பே கிடைக்கும். நியாயத்தீர்ப்பிற்கு மேலாக, இரக்கமே வெற்றிபெறும்.
யாக்கோபு 2:3-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பட்சபாதத்துடன், தகாத சிந்தனைகளோடு தீர்ப்பளிக்கிறவர்களாக இருப்பீர்களல்லவா? என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள்? உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ நிந்திக்கிறார்கள்? உன்னிடத்தில் நீ அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீகப்பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். நீங்கள் பட்சபாதமுள்ளவர்களாக இருந்தால், பாவம்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயந்தீர்க்கப்படுவீர்கள். எப்படியென்றால், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான். ஏனென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரம் செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய். சுதந்திரப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்பு அடையப்போகிறவர்களாக அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள். ஏனென்றால், இரக்கம் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
யாக்கோபு 2:3-13 பரிசுத்த பைபிள் (TAERV)
நீங்கள் செல்வந்தனிடம் அதிகம் அக்கறை காட்டுகிறீர்கள். “நல்ல ஆசனத்தில் அமருங்கள்” என்று கூறுகிறீர்கள். ஆனால் ஒரு ஏழை வந்தால் அவனை நிற்கவைக்கிறீர்கள். அல்லது தரையிலே உட்காரும்படி கூறுகிறீர்கள். இப்படிச் செய்யும்போது சிலர் மற்றவர்களைவிட மிகவும் முக்கியமானவர்கள் என்பது போல உங்களில் சிலரை நடத்துகிறீர்கள். அப்போது தகாத நோக்கங்கள் உள்ள நீதிபதியாக நீங்கள் ஆகிறீர்கள். அன்பான சகோதர சகோதரிகளே, உலகம் ஏழையாகப் பார்க்கிற ஒருவனை விசுவாசத்தில் செல்வந்தனாக தேவன் தேர்ந்தெடுத்தார் என்பது உண்மையில்லையா? தான் நேசிப்பவர்களுக்குத் தருவதாக தேவன் வாக்களித்த இராஜ்யத்தை அந்த ஏழை மக்கள் பெறுவார்கள். ஆனால் நீங்கள் ஏழைகளை மதிக்கவில்லை என்பதைப் புலப்படுத்தினீர்கள். செல்வந்தர்களே உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்கிறார்கள் என்பது உண்மை இல்லையா? நீதிமன்றத்திற்கு உங்களை இழுப்பது அவர்கள் அல்லவா? நீங்கள் எந்தப் பெயரால் அழைக்கப்படுகிறீர்களோ அந்த நல்ல பெயரைப் பழித்துப் பேசுகிறவர்கள் அவர்கள் அல்லவா? ஒரு சட்டம் மற்ற சட்டங்களை ஆளுகின்றது. “நீ உன்னை நேசிப்பது போன்று மற்றவர்களையும் நேசிப்பாயாக” என்று வேத வாக்கியங்களில் எழுதப்பட்ட சட்டம்தான் மிகச் சிறந்த சட்டமாகும். நீ இச்சட்டத்தின்படி செய்தால் பிறகு நீ சரியானதைச் செய்கிறாய். ஆனால் நீ ஒருவனை மற்றவர்களை விட முக்கியமாக நடத்தினால் பிறகு நீ பாவம் செய்தவன் ஆகிறாய். நீ மிக உயர்ந்த தேவனின் சட்டத்தை உடைத்த குற்றவாளி ஆகிறாய். ஒருவன் தேவனின் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பவனாக இருக்கலாம், ஆனால் அவன் ஒரே ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு அவன் அனைத்துக் கட்டளைகளையும் உடைத்தவனாகிறான். “விபசாரம் செய்யாமல் இருப்பாயாக” என்று தேவன் கூறினார். அதோடு “கொலை செய்யாமல் இருப்பாயாக” என்றும் கூறியுள்ளார். எனவே, நீ விபசாரம் செய்யாமல் இருந்து, கொலை மட்டும் செய்வாயானால், பிறகு நீ சட்டத்தில் கட்டளைகளை உடைத்தவன் ஆகிறாய். உங்களை விடுவிக்கிற சட்டத்தால் நியாயந்தீர்க்கப்பட்ட மக்களைப்போல நீங்கள் பேசவும் வாழவும் வேண்டும். மற்ற மனிதர்கள் மீது கருணை காட்ட ஒருவன் தவறினால், அவனை நியாயந்தீர்க்கும்போது தேவன் அவன் மீது கருணை காட்டத் தவறுவார். மனிதர்கள் மீது கருணை காட்டுகிறவன் நியாயத்தீர்ப்பு நாளில் பயமின்றி நிற்க முடியும்.
யாக்கோபு 2:3-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா? என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? நீங்களோ தரித்திரரைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்? உங்களுக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ தூஷிக்கிறார்கள்? உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள். எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான். ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய். சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப் போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள். ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.