அதற்குக் யெகோவா: நான் உன்னோடு இருப்பேன்; ஒரே மனிதனை முறியடிப்பதுபோல நீ மீதியானியர்களை முறியடிப்பாய் என்றார். அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும். நான் உம்மிடத்திற்கு என்னுடைய காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்கும் வரை, இந்த இடத்தை விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பி வரும்வரை நான் இருப்பேன் என்றார். உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, குழம்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதை வெளியே கர்வாலி மரத்தின் கீழே இருக்கிற அவரிடம் கொண்டுவந்து வைத்தான். அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து குழம்பை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான். அப்பொழுது யெகோவாவுடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எரித்துப்போட்டது; யெகோவாவின் தூதனோ. அவனுடைய கண்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது கிதியோன், அவர் யெகோவாவுடைய தூதன் என்று அறிந்து: ஐயோ, யெகோவாவாகிய ஆண்டவரே, நான் யெகோவாவுடைய தூதனை முகமுகமாக பார்த்தேனே என்றான். அதற்குக் யெகோவா: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். அங்கே கிதியோன் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது. அன்று இரவிலே யெகோவா அவனை நோக்கி: நீ உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழுவயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகிலுள்ள தோப்பை வெட்டிப்போட்டு.
இந்தக் கற்பாறையின் உச்சியிலே சரியான ஒரு இடத்தில் உன் யெகோவாவுடைய யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடவேண்டும் என்றார். அப்பொழுது கிதியோன், தன்னுடைய வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன்னுடைய தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனிதர்களுக்கும் பயந்ததினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான். அந்த ஊர் மனிதர்கள் காலையில் எழுந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டும், அதின் அருகிலியிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டு இருக்கிறதையும் அவர்கள் பார்த்து; ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள். அப்பொழுது ஊர்க்காரர்கள் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகே இருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள். யோவாஸ் தன்னை எதிர்த்து நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வாதாடுவீர்கள்? நீங்களா அதைக் காப்பாற்றுவீர்கள்? அதற்காக வாதாடுகிறவர்கள் இன்று காலையிலே சாகட்டும்; அது தேவனானால் தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால், அதுவே தனக்காக வாதாடட்டும் என்றான். தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால் பாகால் அவனோடு வாதாடட்டும் என்று சொல்லி, அந்த நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயர் சூட்டப்பட்டது. மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்கு பகுதியை சேர்ந்த மக்கள் எல்லோரும் ஒன்றாக கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டார்கள். அப்பொழுது யெகோவாவுடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியர்களைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, மனாசே நாடெங்கும் தூதுவர்களை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என்னுடைய கையினாலே இஸ்ரவேலை காப்பாற்றவேண்டுமானால், இதோ, நான் முடியுள்ள ஒரு தோலை கதிரடிக்கும் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மட்டும் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என்னுடைய கையினால் காப்பாற்றுவீர் என்று அதினாலே அறிவேன் என்றான். அப்படியே ஆனது. அவன் மறுநாள் காலையில் எழுந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான். அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு முறை மட்டும் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் வராமல் இருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே முறை மட்டும் சோதனைசெய்கிறேன்; தோல் மட்டும் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான். அப்படியே தேவன் அன்று இரவு செய்தார்; தோல்மட்டும் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.