நியாயாதிபதிகள் 6:16-40
நியாயாதிபதிகள் 6:16-40 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதற்கு யெகோவா, “நான் உன்னுடனே இருப்பேன்; மீதியானியர் எல்லோரையும் ஒரு மனிதனை முறியடிப்பதுபோலவே நீ முறியடிப்பாய்” என்றார். அதற்கு கிதியோன், “இப்பொழுது உமது பார்வையில் எனக்குத் தயவு கிடைக்குமானால், என்னிடம் பேசுபவர் உண்மையாகவே நீர் என்றால் அதற்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும். நான் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உமக்கு முன்பாக வைக்கும்வரையும், தயவுசெய்து இவ்விடம் விட்டு நீர் போகவேண்டாம்” எனக் கேட்டான். அதற்கு யெகோவா, “நீ திரும்பி வரும்வரையும் நான் காத்திருப்பேன்” என்றார். உடனே கிதியோன் போய் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை பிடித்து சமைத்து, ஒரு எப்பா அளவு மாவில் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டான். இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு பானையிலும் ஊற்றி கர்வாலி மரத்தடியில் இருந்தவரிடம் கொண்டுவந்து கொடுத்தான். யெகோவாவின் தூதனானவர் அவனிடம், “இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பத்தையும் எடுத்து இந்த கற்பாறையின்மேல் வைத்து குழம்பை அதன்மேல் ஊற்று” என்றார். கிதியோனும் அப்படியே செய்தான். யெகோவாவின் தூதனானவர் தன் கையிலிருந்த கோலின் நுனியால் இறைச்சியையும், அப்பத்தையும் தொட்டார். அப்பொழுது கற்பாறையிலிருந்து நெருப்பு திடீரென எழுந்து இறைச்சியையும், அப்பத்தையும் சுட்டெரித்தது. யெகோவாவின் தூதனானவரும் மறைந்தார். கிதியோன் தான் கண்டது யெகோவாவின் தூதனானவர் என அறிந்தான்; அப்போது அவன் சத்தமிட்டு, “யெகோவாவாகிய ஆண்டவரே! யெகோவாவின் தூதனானவரை நான் முகமுகமாய்க் கண்டேனே!” என்று வியப்புடன் கூறினான். ஆனால் யெகோவா அவனிடம், “சமாதானமாய் இரு; பயப்படாதே! நீ சாகமாட்டாய்” என்றார். எனவே கிதியோன் அந்த இடத்தில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அவ்விடத்திற்கு யெகோவா ஷாலோம் யெகோவாவே சமாதானம் என்று பெயரிட்டான். அவ்விடம் இந்நாள்வரை அபியேஸ்ரியரின் ஒப்ராவில் இருக்கிறது. அதே இரவில் யெகோவா அவனிடம், “உன் தகப்பனின் மந்தையிலிருந்து, ஏழு வயது நிரம்பிய இரண்டாம் காளையைப் பிடித்து எடு. உன் தகப்பன் கட்டிய பாகால் பலிபீடத்தை இடித்து, உடைத்து அதன் அருகேயுள்ள மரத்தினாலான அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டிப்போடு. அதன்பின் இந்த மேட்டின் உச்சியிலே உன் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகுந்தவிதமான ஒரு பலிபீடத்தைக் கட்டு. அதிலே அந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தை வெட்டிய மரத்துண்டுகளை அடுக்கி, அந்த கொழுத்த இரண்டாவது காளையைத் தகன காணிக்கையாக யெகோவாவுக்கு செலுத்து” என்றார். எனவே கிதியோன் தனது பணியாட்களில் பத்துப்பேரை அழைத்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே செய்தான். ஆனால் கிதியோன் தனது குடும்பத்தவர்களுக்கும், பட்டணத்திலுள்ள மனிதருக்கும் பயந்ததினால் அதை பகலில் செய்யாமல் இரவிலே செய்தான். அதிகாலையில் பட்டணத்து மக்கள் எழுந்தபோது, அங்குள்ள பாகாலின் பலிபீடம் இடிக்கப்பட்டிருப்பதையும், அதற்கு அருகேயுள்ள மரத்தாலான அசேரா தெய்வத்தின் கம்பம் வெட்டப்பட்டிருப்பதையும் கண்டார்கள். அதோடு அங்கே புதிதாகக் கட்டிய பலிபீடத்தின்மேல் ஒரு கொளுத்த காளை பலியிடப்பட்டிருப்பதையும் கண்டார்கள். அப்பொழுது ஒருவரையொருவர், “யார் இதைச் செய்தார்கள்?” என்று கேட்டனர். பின்பு அவர்கள் மிகக் கவனமாக விசாரித்தபோது, “யோவாசின் மகன் கிதியோனே இதைச் செய்தான்” என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. உடனே பட்டணத்து மக்கள் யோவாசிடம் வந்து, “உன் மகன் எங்கள் பாகாலின் பலிபீடத்தை உடைத்து, அதன் அருகிலிருந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டியிருக்கிறான். ஆகையால் அவன் சாகவேண்டும். எனவே அவனை வெளியே கொண்டுவா” என வற்புறுத்திக் கேட்டார்கள். ஆனால் யோவாஸ் தன்னைச் சுற்றிலும் எதிர்த்து நின்ற கூட்டத்தைப் பார்த்து, “நீங்கள் பாகாலுக்காக பரிந்து பேசப்போகிறீர்களோ? அல்லது நீங்கள் பாகாலைக் காப்பாற்றப் போகிறீர்களோ? பாகாலுக்காகச் சண்டையிடுபவன் காலையிலேயே கொல்லப்படவேண்டும். பாகால் உண்மையான தெய்வமானால் தனது பலிபீடத்தை உடைக்கும்போதே தன்னைப் பாதுகாத்திருக்கலாமே?” என்று சொன்னான். அந்த நாளில் அவர்கள் கிதியோனை, “யெருபாகால்” என அழைத்தார்கள். பாகால் பலிபீடத்தை கிதியோன் உடைத்ததால், “பாகாலே அவனுடன் வாதாடட்டும்” என்று சொல்லி இப்படிப் பெயரிட்டார்கள். சிறிது காலத்தின்பின், மீதியானியர் எல்லோரும், அமலேக்கியரும், கிழக்கு நாட்டு மக்களும் இஸ்ரயேலரை எதிர்த்து ஒன்றுகூடினர். அவர்கள் யோர்தானைக் கடந்துசென்று யெஸ்ராயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்தார்கள். அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் கிதியோன்மேல் வந்தார். எனவே அவன் எக்காளம் ஊதி அபியேசரியரைத் தன்னைப் பின்பற்றும்படி அழைத்தான். பின்பு அவன் மனாசே நாடு முழுவதற்கும் தூதுவர்களை அனுப்பி அவர்களையும் ஆயுதம் தரிக்கும்படி அழைத்தான். அதோடு ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளுக்கும் தூதுவர்களை அனுப்பினான். அவர்களும் அவர்களைச் சந்திக்கப் போனார்கள். அப்பொழுது கிதியோன் இறைவனிடம், “நீர் வாக்குக் கொடுத்தபடி இஸ்ரயேலை எனது கைகளினால் மீட்பது உண்மையானால், நான் கம்பளியை களத்தில் போடுவேன்; பனி, கம்பளியில் மட்டும் பெய்து எல்லா நிலமும் காய்ந்து காணப்பட்டால், நீர் சொன்னபடி இஸ்ரயேலை என் கையினால் மீட்பீர் என்பதை அறிந்துகொள்வேன்” என்றான். கிதியோன் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது அது அப்படியே நடந்திருந்தது. உடனே அவன் கம்பளியைப் பிழிந்து ஒரு கிண்ணம் அளவு தண்ணீரை எடுத்தான். பின்பும் கிதியோன் இறைவனிடம், “நீர் என்னோடு கோபங்கொள்ள வேண்டாம். நான் உம்மிடம் கேட்க இன்னும் ஒரு வேண்டுகோள் இருக்கிறது. கம்பளியைக்கொண்டு இன்னும் ஒருமுறை சோதித்துப்பார்க்க இடங்கொடும். இம்முறை கம்பளி காய்ந்திருக்கவும் நிலமெல்லாம் பனியால் நனைந்திருக்கவும் செய்யும்” என்றான். அந்த இரவும் இறைவன் அவ்வாறே செய்தார். கம்பளி மாத்திரம் காய்ந்தும், நிலமெல்லாம் பனியால் நனைந்தும் இருந்தது.
நியாயாதிபதிகள் 6:16-40 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அதற்குக் யெகோவா: நான் உன்னோடு இருப்பேன்; ஒரே மனிதனை முறியடிப்பதுபோல நீ மீதியானியர்களை முறியடிப்பாய் என்றார். அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும். நான் உம்மிடத்திற்கு என்னுடைய காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்கும் வரை, இந்த இடத்தை விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பி வரும்வரை நான் இருப்பேன் என்றார். உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, குழம்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதை வெளியே கர்வாலி மரத்தின் கீழே இருக்கிற அவரிடம் கொண்டுவந்து வைத்தான். அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து குழம்பை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான். அப்பொழுது யெகோவாவுடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எரித்துப்போட்டது; யெகோவாவின் தூதனோ. அவனுடைய கண்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது கிதியோன், அவர் யெகோவாவுடைய தூதன் என்று அறிந்து: ஐயோ, யெகோவாவாகிய ஆண்டவரே, நான் யெகோவாவுடைய தூதனை முகமுகமாக பார்த்தேனே என்றான். அதற்குக் யெகோவா: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். அங்கே கிதியோன் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது. அன்று இரவிலே யெகோவா அவனை நோக்கி: நீ உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழுவயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகிலுள்ள தோப்பை வெட்டிப்போட்டு. இந்தக் கற்பாறையின் உச்சியிலே சரியான ஒரு இடத்தில் உன் யெகோவாவுடைய யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடவேண்டும் என்றார். அப்பொழுது கிதியோன், தன்னுடைய வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன்னுடைய தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனிதர்களுக்கும் பயந்ததினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான். அந்த ஊர் மனிதர்கள் காலையில் எழுந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டும், அதின் அருகிலியிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டு இருக்கிறதையும் அவர்கள் பார்த்து; ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள். அப்பொழுது ஊர்க்காரர்கள் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகே இருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள். யோவாஸ் தன்னை எதிர்த்து நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வாதாடுவீர்கள்? நீங்களா அதைக் காப்பாற்றுவீர்கள்? அதற்காக வாதாடுகிறவர்கள் இன்று காலையிலே சாகட்டும்; அது தேவனானால் தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால், அதுவே தனக்காக வாதாடட்டும் என்றான். தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால் பாகால் அவனோடு வாதாடட்டும் என்று சொல்லி, அந்த நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயர் சூட்டப்பட்டது. மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்கு பகுதியை சேர்ந்த மக்கள் எல்லோரும் ஒன்றாக கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டார்கள். அப்பொழுது யெகோவாவுடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியர்களைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, மனாசே நாடெங்கும் தூதுவர்களை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என்னுடைய கையினாலே இஸ்ரவேலை காப்பாற்றவேண்டுமானால், இதோ, நான் முடியுள்ள ஒரு தோலை கதிரடிக்கும் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மட்டும் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என்னுடைய கையினால் காப்பாற்றுவீர் என்று அதினாலே அறிவேன் என்றான். அப்படியே ஆனது. அவன் மறுநாள் காலையில் எழுந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான். அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு முறை மட்டும் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் வராமல் இருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே முறை மட்டும் சோதனைசெய்கிறேன்; தோல் மட்டும் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான். அப்படியே தேவன் அன்று இரவு செய்தார்; தோல்மட்டும் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.
நியாயாதிபதிகள் 6:16-40 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் கிதியோனிடம், “நான் உன்னோடிருக்கிறேன்! எனவே மீதியானியரை நீ தோற்கடிக்க முடியும்! ஒரே மனிதனை எதிர்த்துப் போரிடுவது போலவே உனக்குத் தோன்றும்” என்றார். கிதியோன் கர்த்தரிடம், “உமக்கு என் மேல் கருணை இருந்தால் என்னிடம் பேசுகிறவர் நீர்தான் என்பதற்கு ஏதேனும் சான்று காட்டும். இங்கேயே தயவுசெய்து காத்திரும். நான் திரும்பி வரும்வரை எங்கும் போகாதிரும். நான் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உம்முன் வைக்க அனுமதியும்” என்றான். கர்த்தர், “நீ வரும்வரைக் காத்திருப்பேன்” என்றார். கிதியோன் உள்ளே சென்று, ஒரு வெள்ளாட்டுக்குட்டியை சமைத்தான். 20 பவுண்டு மாவை எடுத்துப் புளிப்பின்றி அப்பம் செய்தான். இறைச்சியை ஒரு கூடையிலும், அது வேகப் பயன்படுத்திய தண்ணீரை ஒரு பானையிலும் எடுத்துக் கொண்டான். இறைச்சியையும், இறைச்சியை வேகவைத்த தண்ணீரையும், புளிப்பற்ற அப்பத்தையும் கிதியோன் கொண்டு வந்தான். கர்வாலி மரத்தின் கீழே அமர்ந்திருந்த கர்த்தருக்கு அந்த உணவைக் கிதியோன் கொடுத்தான். தேவனுடைய தூதன் கிதியோனை நோக்கி, “இறைச்சியையும், புளிப்பற்ற அப்பத்தையும் அங்கேயிருக்கும் பாறையில் வைத்து அதன் மீது தண்ணீரை ஊற்று” என்றார். கிதியோனும் அவ்வாறே செய்தான். கர்த்தருடைய தூதன் இறைச்சியையும் அப்பத்தையும் தன் கையில் வைத்திருந்த கைத்தடியின் முனையால் தொட்டான். பாறையிலிருந்து நெருப்பு தோன்றி இறைச்சியையும், அப்பத்தையும் எரித்துவிட்டது! பின் கர்த்தருடைய தூதனும் மறைந்து போனான். அப்போது கிதியோன் தான் கர்த்தருடைய தூதனோடு பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்தான். எனவே கிதியோன், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நான் கர்த்தருடைய தூதனை நேருக்கு நேராகச் சந்தித்தேன்!” என்று சத்தமிட்டான். ஆனால் கர்த்தர் கிதியோனிடம், “அமைதியாயிரு! பயப்படாதே! நீ மரிக்கமாட்டாய்!” என்றார். ஆகையால் கிதியோன் அங்கு தேவனை ஆராதிப்பதற்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். கிதியோன் அப்பலிபீடத்திற்கு “கர்த்தரே சமாதானம்” என்று பெயரிட்டான். ஓப்ரா நகரில் அப்பலிபீடம் இன்றும் உள்ளது. அபியேசர் குடும்பம் வாழும் இடம் ஓப்ரா ஆகும். அதே இரவில் கர்த்தர் கிதியோனிடம் பேசினார். கர்த்தர், “உன் தந்தைக்குச் செந்தமான ஏழு வயதுள்ள முழுமையாக வளர்ந்த காளையை எடுத்துக்கொள். பாகால் என்னும் பொய்த் தெய்வங்களுக்கென்று உன் தந்தை அமைத்த பலிபீடம் ஒன்று உள்ளது. பலிபீடத்தினருகே ஒரு மரத்தூணும் இருக்கிறது. அசேரா என்னும் பொய்த் தேவதையை மகிமைப் படுத்துவதற்காக அத்தூண் அமைக்கப்பட்டது. காளையால் பாகாலின் பலிபீடத்தை வீழ்த்தி, அசேராவின் கோவில் தூணை முறித்துவிடு. அதன் பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தருக்காக முறைப்படி பலிபீடம் கட்டு. மேடான நிலத்தில் அப்பலிபீடத்தைக் கட்டு. பின்பு முழுமையாக வளர்ந்த காளையை அந்தப் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்து. அசேரா தூணின் விறகை உனது பலியை எரிப்பதற்குப் பயன்படுத்து” என்றார். ஆகையால் கிதியோன் தன் வேலையாட்களில் 10 பேரை அழைத்துச்சென்று, தன்னிடம் கர்த்தர் கூறியபடியே செய்தான். அவனது குடும்பத்தாரும் நகர ஜனங்களும் அவன் செய்வதைப் பார்க்கக்கூடும் என்று அவன் பயந்தான். தன்னிடம் கர்த்தர் கூறியபடியே கிதியோன் செய்தான். ஆனால் அதைப் பகலில் செய்யாமல் இரவில் செய்தான். நகர ஜனங்கள் மறுநாள் காலையில் விழித்தபோது, பாகாலின் பலிபீடம் அழிக்கப்பட்டிருப்பதையும், அசேராவின் தூண் முறிக்கப்பட்டிருப்பதையும் பார்த்தனர். முன்னால் பாகாலின் பீடத்தருகே அசேராவின் தூண் இருந்த இடத்தில் கிதியோன் கட்டிய பலிபீடத்தையும், அதில் பலியிடப்பட்டிருந்த காளையையும் அவர்கள் கண்டனர். நகர ஜனங்கள் ஒருவரையொருவர் பார்த்து, “பலிபீடத்தை அழித்தவன் யார்? அசேராவின் தூணை உடைத்தவன் யார்? புதிய பலீபீடத்தில் காளையைப் பலியிட்டவன் யார்?” என்று கேட்டனர். அவர்கள் பல கேள்விகளைக் கேட்டு, அக்காரியங்களைச் செய்தவன் யார் என்பதை அறிய விரும்பினார்கள். ஒருவன் அவர்களுக்கு, “யோவாஸின் குமாரனாகிய கிதியோன் இதனைச் செய்தான்” என்றான். எனவே, நகர ஜனங்கள் யோவாஸிடம் வந்தனர். அவர்கள் யோவாஸிடம், “நீ உனது குமாரனை வெளியே அழைத்து வா. அவன் பாகாலின் பலிபீடத்தைத் தரைமட்ட மாக்கினான். பலிபீடத்தருகிலுள்ள அசேராவின் தூணை உடைத்தான். எனவே உன் குமாரன் மரிக்க வேண்டும்” என்றனர். தன்னைச் சுற்றிலும் கூடியிருந்த ஜனங்களைப் பார்த்து யோவாஸ், “நீங்கள் பாகாலுக்காகப் பரிந்து பேசுகிறீர்களா? பாகாலை மீண்டும் பாதுகாக்கப் போகிறீர்களா? பாகாலைச் சார்ந்திருக்கிறவன் எவனோ, அவன் காலைக்குள் கொல்லப்படக்கடவன். பாகால் உண்மையிலேயே பலமுள்ள தேவனாக இருந்தால் அவனது பலிபீடத்தை ஒருவன் அழிக்கும்போது தன்னை காப்பாற்றிக்கொண்டிருக்கலாமே” என்றான். யோவாஸ், “கிதியோன் பாகாலின் பலிபீடத்தை அழித்திருந்தால், பாகால் அவனோடு வழக்காடட்டும்” என்றான். அந்நாளில் யோவாஸ் கிதியோனுக்கு ஒரு புதிய பெயரிட்டான். அவனை யெருபாகால் என்று அழைத்தான். இஸ்ரவேலரை எதிர்ப்பதற்கு மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கிலுள்ள பிற ஜனங்களும் ஒன்றாகக் கூடி வந்தனர். அவர்கள் யோர்தான் நதியைத் தாண்டி யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டுத் தங்கினார்கள். கர்த்தருடைய ஆவி கிதியோனுக்குள் வந்து மிகுந்த வல்லமை பெற்றான். அபியேசர் குடும்பம் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு கிதியோன் எக்காளம் ஊதி அழைத்தான். மனாசேயின் கோத்திரத்தினரிடம் கிதியோன் செய்தி தெரிவிப்போரை அனுப்பினான். அவர்கள் மனாசேயின் ஜனங்களிடம் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராகும்படி கூறினார்கள். ஆசேர், செபுலோன், நப்தலி கோத்திரத்தினரிடமும் அவன் செய்தி தெரிவிக்கும் ஆட்களை அனுப்பினான். அவர்கள் அதே செய்தியைத் தெரிவிப்பதற்குச் சென்றனர். கிதியோனையும் அவனது ஆட்களையும் சந்திப்பதற்காக அந்தக் கோத்திரத்தினர் சென்றனர். அப்போது கிதியோன் தேவனிடம், “இஸ்ரவேலரைக் காப்பதற்கு எனக்கு உதவுவதாகக் கூறினீர். அதற்குச் சான்று தாரும். நான் தரையில் ஆட்டுத் தோலைப் போடுவேன். தரையெல்லாம் உலர்ந்திருக்க, தோலில் மட்டும் பனி பெய்திருந்தால், நீர் கூறியபடியே இஸ்ரவேலரை மீட்பதற்கு என்னைப் பயன்படுத்துவீர் என்பதை அறிவேன்” என்றான். அவ்வாறே நடந்தது. கிதியோன் காலையில் எழுந்து செம்மறியாட்டுத் தோலைப் பிழிந்தான். ஒரு கிண்ணம் நிறைய தண்ணீரைப் பிழிந்தெடுக்க முடிந்தது. அப்போது கிதியோன் தேவனை நோக்கி, “என்னிடம் கோபங்கொள்ளாதிரும். இன்னும் ஒரே ஒரு விஷயம் குறித்து மட்டும் உம்மிடம் கேட்டுவிடுகிறேன். ஆட்டுத்தோலால் உம்மை மீண்டும் ஒருமுறை சோதிப்பேன். இம்முறை தரையெல்லாம் பனியால் ஈரமாயிருக்க, தோல் மட்டும் உலர்ந்திருக்கச் செய்யும்” என்றான். அன்றிரவு தேவன் அவ்வாறே நடக்கச் செய்தார். செம்மறியாட்டுத் தோல் உலர்ந்திருந்தது. தரையோ பனியால் ஈரமாயிருந்தது.
நியாயாதிபதிகள் 6:16-40 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார். அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும். நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார். உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, ஆணத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து, அதை வெளியே கர்வாலி மரத்தின்கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான். அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால். அவன் கண்களுக்கு மறைந்துபோனார். அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான். அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது. அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு, இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்கதகனமாகப் பலியிடக்கடவாய் என்றார். அப்பொழுது கிதியோன், தன் வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான். அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டதும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு; ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள். அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள். யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்? அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன்; அது தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம், அது தானே தனக்காக வழக்காடட்டும் என்றான். தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது. மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரர் யாவரும் ஏகமாய்க்கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள். அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, மனாசே நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை இரட்சிக்கவேண்டுமானால், இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின் மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என்கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான். அப்படியே ஆயிற்று. அவன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக்கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான். அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு விசை மாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே விசை சோதனைபண்ணட்டும்; தோல் மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான். அப்படியே தேவன் அன்று இராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.