உங்கள் எல்லோரையும் குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆனாலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பத்தை சாப்பிடுகிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். அது நடக்கும்போது நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பதற்கு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். இயேசு இவைகளைச் சொன்னபின்பு ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார். அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீடர்கள் சந்தேகப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள். அந்தச் நேரத்தில் அவருடைய சீடர்களில் இயேசுவிற்கு அன்பானவனாக இருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். இயேசு மறுமொழியாக: நான் இந்த அப்பத்துண்டைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துண்டைத் தோய்த்து, சீமோன் மகனாகிய யூதாஸ்காரியோத்திற்குக் கொடுத்தார். அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய் என்றார். அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் யாருக்கும் புரியவில்லை. யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன்போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் வாங்குவதற்காவது, ஏழைகளுக்கு ஏதாவது கொடுப்பதற்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். அவன் அந்த அப்பத் துண்டை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இரவு நேரமாக இருந்தது. அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாக அவரை மகிமைப்படுத்துவார். பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடு இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்று நான் யூதர்களிடம் சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு உள்ளவர்களாக இருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள் என்றார். சீமோன்பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் போகிற இடத்திற்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார். பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் யோவா 13
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யோவா 13:18-38
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்