யோவான் 13:18-38

யோவான் 13:18-38 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். இயேசு இவைகளைச் சொன்னபின்பு. ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார். அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன் பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை. யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது. அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார். பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார். பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 13:18-38 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நான் உங்கள் எல்லோரைக் குறித்தும் பேசவில்லை; நான் எவர்களைத் தெரிந்துகொண்டேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் ‘என்னோடு உணவு உண்டவனே எனக்கு விரோதமாய் இருக்கிறான்’ என்ற வேதவசனம் நிறைவேற வேண்டும். “அது நிகழும் முன்பதாகவே இப்போது நான் அதை உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அது நிகழும்போது, நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் அனுப்புகிற எவனையாவது ஒருவன் ஏற்றுக்கொண்டால், அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். யாராவது என்னை ஏற்றுக்கொண்டால் அவன் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கிறான்” என்றார். இயேசு இதைச் சொன்னபின்பு, அவர் உள்ளம் கலங்கியவராய், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான்” என்று வெளிப்படையாகச் சொல்கிறேன். அவருடைய சீடர்களோ அவர் யாரைக்குறித்துச் சொல்கிறார் என்று புரியாதவர்களாய், குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்தார்கள். இயேசுவின் அன்பிற்குரிய சீடன் உணவுப் பந்தியிலே அவருக்கருகில் நெருங்கி உட்கார்ந்திருந்தான். சீமோன் பேதுரு அவனுக்குச் சைகை காட்டி, இயேசு யாரைக்குறித்துப் பேசுகிறார் என்று அவரிடத்தில் கேட்கும்படி அவனுக்குச் சொன்னான். எனவே அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நான் இந்த அப்பத் துண்டை பாத்திரத்தில் தோய்த்து யாருக்குக் கொடுக்கிறேனோ, அவனே” என்றார். பின்பு அந்த அப்பத் துண்டைத் தோய்த்து, சீமோனின் மகனான யூதாஸ் ஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். யூதாஸ் அந்த அப்பத் துண்டை வாங்கிப் புசித்தான். பிறகு சாத்தான் அவனுக்குள்ளே புகுந்தான். இயேசு அவனிடம், “நீ செய்யப் போகிறதை விரைவாய்ச் செய்” என்றார். ஆனால் இயேசு ஏன் இப்படி அவனுக்குச் சொன்னார் என்று சாப்பாட்டுப் பந்தியிலிருந்த ஒருவருக்கும் விளங்கவில்லை. யூதாஸ் பணத்துக்குப் பொறுப்பாயிருந்தபடியால், பண்டிகைக்குத் தேவையானதை வாங்கும்படியோ, அல்லது ஏழைகளுக்கு எதையாவது கொடுக்கும்படியோ இயேசு அவனுக்குச் சொல்கிறார் என்று சிலர் நினைத்தார்கள். அப்பத்தை வாங்கிக்கொண்டதும் யூதாஸ் புறப்பட்டுப் போனான். அப்பொழுது இரவு நேரமாயிருந்தது. யூதாஸ் போனபின்பு இயேசு அவர்களிடம், “இப்பொழுது மானிடமகனாகிய நான் மகிமைப்படுகிறேன்; இறைவனும் என்னில் மகிமைப்படுகிறார். இறைவன் என்னில் மகிமைப்பட்டால், மானிடமகனாகிய என்னை இறைவனும் தம்மிலே மகிமைப்படுத்துவார்; சீக்கிரமாய் என்னை மகிமைப்படுத்துவார். “பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் போகிற இடத்துக்கு உங்களால் வரமுடியாது; இதை நான் யூதத்தலைவர்களுக்குச் சொன்னேன். இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.” நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறேன்: “ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும். நீங்கள் இப்படி ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்” என்றார். அப்பொழுது சீமோன் பேதுரு அவரிடம், “ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டான். இயேசு அதற்கு மறுமொழியாக, “நான் போகிற இடத்துக்கு என்னைப் பின்தொடர்ந்துவர உன்னால் இப்போது முடியாது. பிறகு என்னைப் பின்தொடர்வாய்” என்றார். அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, ஏன் என்னால் இப்போது வரமுடியாது? நான் உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றான். அதற்கு இயேசு, “உண்மையிலேயே நீ எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயோ? மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார்.

யோவான் 13:18-38 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உங்கள் எல்லோரையும் குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆனாலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பத்தை சாப்பிடுகிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். அது நடக்கும்போது நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பதற்கு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். இயேசு இவைகளைச் சொன்னபின்பு ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார். அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீடர்கள் சந்தேகப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள். அந்தச் நேரத்தில் அவருடைய சீடர்களில் இயேசுவிற்கு அன்பானவனாக இருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். இயேசு மறுமொழியாக: நான் இந்த அப்பத்துண்டைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துண்டைத் தோய்த்து, சீமோன் மகனாகிய யூதாஸ்காரியோத்திற்குக் கொடுத்தார். அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய் என்றார். அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் யாருக்கும் புரியவில்லை. யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன்போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் வாங்குவதற்காவது, ஏழைகளுக்கு ஏதாவது கொடுப்பதற்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். அவன் அந்த அப்பத் துண்டை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இரவு நேரமாக இருந்தது. அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாக அவரை மகிமைப்படுத்துவார். பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடு இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்று நான் யூதர்களிடம் சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு உள்ளவர்களாக இருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள் என்றார். சீமோன்பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் போகிற இடத்திற்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார். பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 13:18-38 பரிசுத்த பைபிள் (TAERV)

“நான் உங்கள் எல்லாரையும்பற்றிப் பேசவில்லை. நான் தேர்ந்தெடுத்த மக்களைப் பற்றி நான் அறிவேன். ஆனால் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டும். ‘என்னோடு பகிர்ந்துகொண்டு உண்பவனே எனக்கு எதிராகத் திரும்பிவிட்டான்.’ இது நிறைவேறும் முன்னால் நான் உங்களுக்கு இதை இப்பொழுது சொல்லுகிறேன். இது நடக்கும்போது நானே அவர் என நம்புவீர்கள். நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். என்னை ஏற்றுக்கொள்பவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார். இவற்றைச் சொன்னபிறகு இயேசு மிகவும் கலக்கம் அடைந்தார். வெளிப்படையாக அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார். இயேசுவின் சீஷர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இயேசுவால் குறிப்பிடப்பட்டவன் எவனென்று அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. சீஷர்களில் ஒருவன் இயேசுவுக்கு அடுத்து அமர்ந்திருந்தான். அவனைத்தான் இயேசு பெரிதும் நேசித்தார். சீமோன் பேதுரு அவனிடம் இயேசுவிடம் கேட்கும்படி சாடையாகத் தெரிவித்தான். அவன் இயேசுவின் அருகில் சாய்ந்து, “ஆண்டவரே, உங்களுக்கு எதிரானவன் யார்?” என்று கேட்டான். இயேசு அதற்கு, “நான் இந்தத் தோய்த்தெடுத்த அப்பத்துண்டை எவனுக்குக் கொடுக்கிறேனோ அவனே எனக்கு எதிரானவன்” என்றார். பின்னர் அவர் அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் குமாரனான யூதாஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார். யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான். இயேசு யூதாஸிடம், “நீ செய்யப் போவதைச் சீக்கிரமாகக் செய்” என்றார். அந்த மேஜையைச் சுற்றியிருந்த எவருக்கும் இயேசு யூதாஸிடம் ஏன் அவ்வாறு சொன்னார் என்பது புரியவில்லை. அவர்களில் யூதாஸ் மட்டும் தான் பணப்பெட்டியைப் பாதுகாப்பவன். எனவே அவர்கள், இயேசு யூதாஸிடம் விருந்துக்கான பொருட்களை வாங்கி வரும்படியாக ஏதோ கூறுவதாக எண்ணிக்கொண்டார்கள். அல்லது யூதாஸ் ஏழைகளுக்குக் கொஞ்சம் பணம் கொடுக்குமாறு இயேசு கூறுவதாக நினைத்துக்கொண்டனர். இயேசு கொடுத்த அப்பத்துண்டை யூதாஸ் பெற்றுக்கொண்டான். பிறகு அவன் வெளியேறினான். அப்போது இரவு நேரமாயிருந்தது. யூதாஸ் போனபிறகு இயேசு, “இப்பொழுது மனித குமாரன் தன் மகிமையை அடைகிறார். தேவன் தன் குமாரன் மூலமாக மகிமையைப் பெறுகிறார். அவர் மூலம் தேவன் மகிமையை அடைந்தால், பிறகு தேவன் தன் குமாரனுக்கு அவர் மூலமாகவே மகிமை அளிப்பார். தேவன் விரைவில் அவருக்கு மகிமை தருவார். “எனது பிள்ளைகளே, நான் இன்னும் கொஞ்சக் காலம் மட்டும்தான் உங்களோடு இருப்பேன். என்னை நீங்கள் தேடுவீர்கள். நான் யூதர்களுக்கு சொன்னவற்றையே இப்பொழுது உங்களுக்கும் சொல்கிறேன். நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரமுடியாது. “நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைத் தருகிறேன். நீங்கள் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். நான் உங்களை நேசித்ததுபோன்று நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தால் அனைத்து மக்களும் உங்களை என் சீஷர்களென அறிந்துகொள்வர்” என்றார். சீமோன் பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நான் எங்கே போனாலும் உன்னால் அங்கே பின்தொடர்ந்து இப்போது வர முடியாது. ஆனால் நீ பிறகு என் பின்னே வருவாய்” என்றார். பேதுரு அவரிடம், “ஆண்டவரே, நான் இப்பொழுது ஏன் உங்களைப் பின்தொடர முடியாது? நான் உங்களுக்காக உயிர் தரவும் தயார்” என்றான். இயேசு அதற்கு, “நீ உண்மையிலேயே எனக்காக உன் உயிரையும் தருவாயா? நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். நீ என்னை அறியாதவன் என்று சேவல் கூவுவதற்கு முன்னால் மூன்று முறை மறுதலிப்பாய்” என்றார்.