யோவேல் 2:15-25

யோவேல் 2:15-25 IRVTAM

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள். மக்களைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோர்களைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பால் குடிக்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மணவறையையும்விட்டுப் புறப்படுவார்களாக. யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே அழுது: யெகோவாவே, நீர் உமது மக்களைத் தப்பவிட்டு அந்நிய மக்கள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது மக்களை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று அந்நியமக்களுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக. அப்பொழுது யெகோவா தமது தேசத்திற்காக வைராக்கியங்கொண்டு, தமது மக்கள்மேல் இரக்கம் காட்டுவார். யெகோவா மறுமொழி கொடுத்து, தமது மக்களை நோக்கி: இதோ, நான் உங்களை இனி அந்நிய மக்களுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள். வடதிசைப் படையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்படையை கீழ்க்கடலுக்கும், அதின் பின்படையை மத்திய தரைக் கடலுக்கு, நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்நாற்றம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது. தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; யெகோவா பெரிய செயல்களைச் செய்வார். வெளியின் மிருகங்களே பயப்படாதேயுங்கள்; வனாந்திரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; மரங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சைச்செடியும் பலனைத்தரும். சீயோன் மக்களே, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; சரியான அளவுபடி அவர் உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே பெய்யச்செய்வார். களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சைரசமும் எண்ணெயும் வழிந்தோடும். நான் உங்களிடத்திற்கு அனுப்பின என் பெரிய படையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருடங்களின் விளைச்சலை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார்.