யோவேல் 2:15-25

யோவேல் 2:15-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆசாரியர்களே, சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசத்தை அறிவியுங்கள்; பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள். மக்களை ஒன்றுசேர்த்து, சபையை பரிசுத்தம் செய்யுங்கள். முதியோரை ஒன்றுகூட்டுங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். மணமகன் தன் அறையையும், மணமகள் தன் படுக்கையையும் விட்டுப் புறப்படட்டும். யெகோவாவுக்கு முன்பாக ஊழியஞ்செய்யும் ஆசாரியர்கள் புலம்பட்டும்; ஆலய மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழட்டும். அவர்கள், “யெகோவாவே, உமது மக்களைத் தப்புவியும். உமது உரிமைச்சொத்தை பிறநாடுகளின் நடுவே நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதேயும். ‘அவர்களுடைய இறைவன் எங்கே?’ என்று மக்கள் கூட்டங்கள் மத்தியில் அவர்கள் ஏன் சொல்லவேண்டும்?” என்று சொல்வார்களாக. அப்பொழுது யெகோவா தமது நாட்டின்மேல் வைராக்கியங்கொண்டு, தமது மக்களில் அனுதாபங்கொள்வார். யெகோவா தம் மக்களுக்கு மறுமொழியாக கூறியது: “இதோ, நான் உங்களுக்குத் தானியத்தையும், புதிய திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் முழுமையாய் திருப்தியளிக்கும் வகையில் அனுப்புகிறேன்; நான் இனியும் பிற தேசத்தாருக்கு உங்களை நிந்தையாக வைக்கமாட்டேன். “வடதிசைப் படைகளை உங்களைவிட்டுத் தூரமாய்த் விலக்கிவிடுவேன்; பாழடைந்த வறண்ட நாட்டிற்கு அவர்களைத் தள்ளிவிடுவேன். அதன் முன்னணிப் படைகளை கிழக்கே சாக்கடலிலும், அதன் பின்னணிப் படைகளை மேற்கே மத்திய தரைக்கடலிலும் தள்ளுவேன். அங்கே அவற்றின் நாற்றமும் தீய வாடையும் நாட்டின் மேலெழும்பும்.” நிச்சயமாகவே யெகோவா பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். நாடே நீ பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; நிச்சயமாகவே யெகோவா பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். காட்டு மிருகங்களே, பயப்படாதேயுங்கள், வனாந்திரத்தின் மேய்ச்சலிடங்கள் பசுமையாகின்றன. மரங்கள் கனி கொடுக்கின்றன; அத்திமரமும் திராட்சைக்கொடியும் நிறைவாய்ப் பலனளிக்கின்றன. சீயோன் மக்களே, மகிழுங்கள், உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் களிகூருங்கள். ஏனெனில் அவர் தம் நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்திருக்கிறார். முன்போலவே உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் நிறைவாய்ப் பொழிகிறார். சூடடிக்கும் களங்கள் தானியத்தினால் நிரம்பியிருக்கும்; ஆலைகள் புதிய திராட்சை இரசத்தினாலும் எண்ணெயினாலும் நிரம்பிவழியும். நான் உங்களுக்கு மத்தியில் அனுப்பின பச்சைப்புழுக்களும், இளம் வெட்டுக்கிளிகளும், துள்ளும் வெட்டுக்கிளிகளும், வளர்ந்த வெட்டுக்கிளிகளும் தின்று அழித்த வருடங்களுக்குப் பதிலாக, உங்களுக்கு ஈடுசெய்வேன்.

யோவேல் 2:15-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பை அறிவியுங்கள். மக்களைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோர்களைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பால் குடிக்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மணவறையையும்விட்டுப் புறப்படுவார்களாக. யெகோவாவின் ஊழியக்காரர்களாகிய ஆசாரியர்கள் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே அழுது: யெகோவாவே, நீர் உமது மக்களைத் தப்பவிட்டு அந்நிய மக்கள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது மக்களை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று அந்நியமக்களுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக. அப்பொழுது யெகோவா தமது தேசத்திற்காக வைராக்கியங்கொண்டு, தமது மக்கள்மேல் இரக்கம் காட்டுவார். யெகோவா மறுமொழி கொடுத்து, தமது மக்களை நோக்கி: இதோ, நான் உங்களை இனி அந்நிய மக்களுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள். வடதிசைப் படையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்படையை கீழ்க்கடலுக்கும், அதின் பின்படையை மத்திய தரைக் கடலுக்கு, நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்நாற்றம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது. தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; யெகோவா பெரிய செயல்களைச் செய்வார். வெளியின் மிருகங்களே பயப்படாதேயுங்கள்; வனாந்திரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; மரங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சைச்செடியும் பலனைத்தரும். சீயோன் மக்களே, உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; சரியான அளவுபடி அவர் உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே பெய்யச்செய்வார். களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சைரசமும் எண்ணெயும் வழிந்தோடும். நான் உங்களிடத்திற்கு அனுப்பின என் பெரிய படையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருடங்களின் விளைச்சலை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார்.

யோவேல் 2:15-25 பரிசுத்த பைபிள் (TAERV)

சீயோனில் எக்காளம் ஊதுங்கள். சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள். ஒரு உபவாச காலத்துக்காகக் கூப்பிடுங்கள். ஜனங்களைக் கூட்டிச் சேருங்கள். சிறப்புக் கூட்டத்திற்குக் கூப்பிடுங்கள். வயதானவர்களைக் கூட்டிச் சேருங்கள். குழந்தைகளையும் கூட்டிச் சேருங்கள் இன்னும் தாயின் மார்பில் பால்குடிக்கும் சிறுகுழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு வாருங்கள். தங்களது படுக்கை அறையிலிருந்து புதிதாய்த் திருமணமான மணமகனும் மணமகளும் வரட்டும். மண்டபத்துக்கும் பலிபீடத்திற்கும் இடையில் நின்று ஆசாரியர்களும், கர்த்தருடைய பணியாளர்களும் அழுது புலம்பட்டும். அந்த ஜனங்கள் அனைவரும் இவற்றைச் சொல்லவேண்டும். “கர்த்தாவே, உமது ஜனங்கள் மீது இரக்கம் காட்டும். உமது ஜனங்களை அவமானப்பட விடாதிரும். மற்ற ஜனங்கள் உமது ஜனங்களைக் கேலிச்செய்யும்படி விடாதிரும். மற்ற நாடுகளின் ஜனங்கள் ‘அவர்கள் தேவன் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டுச் சிரிக்கும்படிச் செய்யாதிரும்.” பிறகு கர்த்தர் தனது நாட்டைப்பற்றி பரவசம் கொண்டார். அவர் ஜனங்களுக்காக வருத்தப்பட்டார். கர்த்தர் தமது ஜனங்களிடம், “நான் உங்களுக்குத் தானியம், திராட்சைரசம். எண்ணெய் இவற்றை அனுப்புவேன். உங்களுக்கு ஏராளமாக இருக்கும். நான் உங்களை மற்ற நாடுகளுக்கிடையில் இனிமேல் அவமானம் அடையவிடமாட்டேன். இல்லை. வடக்கிலுள்ள ஜனங்களை உங்கள் நாட்டைவிட்டு போகும்படி வற்புறுத்துவேன். நான் அவர்களை வறண்ட வெறுமையான நாட்டுக்குப் போகச்செய்வேன். அவர்களில் சிலர் கீழ்க்கடலுக்குப் போவார்கள். அவர்களில் சிலர் மேற்கடலுக்குப் போவார்கள் அந்த ஜனங்கள் இத்தகைய பயங்கரச் செயல்களைச் செய்தார்கள். ஆனால் அவர்கள் மரித்து அழுகிப்போனவற்றைப் போலாவார்கள். அங்கே பயங்கரமான துர்வாசனை இருக்கும்!” என்று சொன்னார். தேசமே, பயப்படாதே. சந்தோஷமாக இரு. முழுமையாகக் களிகூரு. கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். வெளியின் மிருகங்களே, பயப்படவேண்டாம். வனாந்திரத்தில் மேய்ச்சல்கள் உண்டாகும். மரங்கள் கனிகளைத் தரும், அத்தி மரங்களும் திராட்சைக் கொடிகளும் மிகுதியான பழங்களைத் தரும். எனவே மகிழ்ச்சியாய் இருங்கள். சீயோன் ஜனங்களே உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் சந்தோஷமாய் இருங்கள், அவர் நல்லவர், அவர் உங்களுக்கு மழையைத் தருவார். அவர் உங்களுக்கு முன்போலவே முன்மாரியையும் பின்மாரியையும் அனுப்புவார். களங்கள் தானியத்தால் நிரம்பும். குடங்கள் திராட்சைரசத்தாலும், என்ணெயாலும் நிரம்பி வழியும். “கர்த்தராகிய நான் உங்களுக்கு எதிராக எனது படையை அனுப்பினேன். உங்களுக்குரிய எல்லாவற்றையும் வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும் முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் தின்றுவிட்டன. ஆனால் கர்த்தராகிய நான், அத்துன்பக் காலத்துக்கானவற்றைத் திருப்பிக் கொடுப்பேன்.

யோவேல் 2:15-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். ஜனத்தைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள்; பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக. கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக. அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார். கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல் உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள். வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும், நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது. தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத்தரும். சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கெனவே வருஷிக்கப்பண்ணுவார். களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும். நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.