லூக் 8:49-56

லூக் 8:49-56 IRVTAM

அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய மகள் மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான். இயேசு அதைக்கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும்தவிர வேறொருவரையும் உள்ளே வர அனுமதிக்காமல், எல்லோரும் அழுது அவளைக்குறித்துத் துக்கப்படுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்றார். அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார். அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.