லூக்கா 8:49-56
லூக்கா 8:49-56 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் யவீருவின் வீட்டில் இருந்து ஒருவன் வந்தான். அவன் யவீருவிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். இனிமேலும் போதகரைத் தொந்தரவு செய்யவேண்டாம்” என்றான். இயேசு இதைக் கேட்டதும் யவீருவிடம், “பயப்படாதே; விசுவாசமுள்ளவனாய் மட்டும் இரு. அவள் பிழைப்பாள்” என்றார். அவர் யவீருவினுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோருடன், அந்தப் பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தவிர, வேறு ஒருவரையும் தன்னுடன் உள்ளே போக அவர் அனுமதிக்கவில்லை. இதற்கிடையில், அங்கிருந்த மக்களெல்லாரும் இறந்த சிறுமிக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “அழாதீர்கள். இவள் இறந்து போகவில்லை, தூங்குகிறாள்” என்றார். அவள் இறந்துபோனதை அறிந்திருந்த மக்கள், அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் இயேசு அவளுடைய கையைப் பிடித்து, “பிள்ளையே, எழுந்திரு!” என்றார். அப்பொழுது, அவளுடைய உயிர் திரும்பவும் வந்தது. உடனே அவள் எழுந்து உட்கார்ந்தாள். இயேசு அவர்களிடம், அவளுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி சொன்னார். அவளுடைய பெற்றோர்கள் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களிடம், “நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார்.
லூக்கா 8:49-56 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய மகள் மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான். இயேசு அதைக்கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும்தவிர வேறொருவரையும் உள்ளே வர அனுமதிக்காமல், எல்லோரும் அழுது அவளைக்குறித்துத் துக்கப்படுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்றார். அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார். அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
லூக்கா 8:49-56 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் ஜெப ஆலயத்தின் தலைவனின் வீட்டிலிருந்து ஒருவன் வந்து, “உங்கள் குமாரத்தி இறந்துவிட்டாள். போதகரை மேலும் தொல்லைப்படுத்த வேண்டாம்” என்றான். இயேசு அதைக் கேட்டார். அவர் யவீருவை நோக்கி, “பயப்படாதே, விசுவாசத்துடனிரு, உன் குமாரத்தி குணம் பெறுவாள்” என்றார். இயேசு வீட்டை அடைந்தார். பேதுரு யோவான், யாக்கோபு, பெண்ணின் தந்தை, தாய் ஆகியோரை மட்டுமே உள்ளே வர அனுமதித்தார். பிறரை உள்ளே விடவில்லை. எல்லா மக்களும் அச்சிறுமி இறந்ததற்காக அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தனர். ஆனால் இயேசு, “அழாதீர்கள். அவள் இறக்கவில்லை. அவள் உறங்கிக்கொண்டிருக்கிறாள்” என்றார். அச்சிறுமி இறந்தாள் என அறிந்திருந்ததால் மக்கள் இயேசுவைப் பார்த்துச் சிரித்தனர். ஆனால் இயேசு அவளது கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்து நில்” என்றார். அவள் ஆவி அவளுக்குள் திரும்ப வந்தது. அவள் உடனே எழுந்து நின்றாள். இயேசு, “அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். சிறுமியின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். நடந்ததைப் பிறருக்குக் கூறாமல் இருக்கும்படியாக இயேசு அவர்களுக்குக் கூறினார்.
லூக்கா 8:49-56 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான். இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல், எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.