லூக்கா எழுதிய சுவிசேஷம் 8
8
இயேசுவின் குழுவினர்
1மறுநாள் இயேசு சில பெரிய பட்டணங்களுக்கும், சில சிறு நகரங்களுக்கும் பிரயாணம் செய்தார். தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு கூறி மக்களுக்குப் போதித்தார். பன்னிரண்டு சீஷர்களும் அவரோடு கூட இருந்தனர். 2சில பெண்களும் அவரோடு கூட இருந்தனர். இயேசு இந்தப் பெண்களை நோய்களில் இருந்தும் பிசாசின் அசுத்த ஆவிகளில் இருந்தும் குணமாக்கி இருந்தார். இப்பெண்களுள் ஒருத்தி மரியாள். அவள் மக்தலா என்னும் நகரத்திலிருந்து வந்திருந்தாள். ஏழு அசுத்த ஆவிகள் அவளிடமிருந்து விரட்டப்பட்டிருந்தன. 3இப்பெண்களோடுகூட கூசாவின் (ஏரோதுவின் பொருளாளர்களுள் ஒருவனாக இருந்தவன்) மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும் வேறுபல பெண்களும் இருந்தனர். இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் இவர்கள் தங்கள் பணத்தின் மூலம் சேவை செய்தனர்.
விதைத்தலின் உவமை
(மத்தேயு 13:1-17; மாற்கு 4:1-12)
4கூட்டமாகப் பலர் சேர்ந்து வந்தனர். ஒவ்வொரு நகரத்திலிருந்தும் மக்கள் இயேசுவிடம் வந்தனர். இயேசு பின்வரும் உவமையை மக்களுக்குக் கூறினார்.
5“ஓர் உழவன் விதை விதைப்பதற்குச் சென்றான். உழவன் விதைத்துக்கொண்டிருந்தபோது, பாதையின் ஓரமாகச் சில விதைகள் விழுந்தன. மக்கள் அவற்றின்மீது நடந்து சென்றனர். பறவைகள் அவற்றைத் தின்றன. 6சில விதைகள் பாறையின்மீது விழுந்தன. அவை முளைக்க ஆரம்பித்தன. நீர் இல்லாததால் மடிந்தன. 7முட்புதர்கள் நடுவே சில விதைகள் விழுந்தன. அவை முளைத்தன. ஆனால் பின்னர், அவை முளைக்காதபடி புதர்கள் தடுத்தன. 8சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து நூறு மடங்கு தானியத்தைத் தந்தன.”
இயேசு இந்த உவமையைக் கூறி முடித்தார். பின்பு இயேசு, “நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற மக்களே, கவனியுங்கள்” என்றார்.
9இயேசுவின் சீஷர்கள் அவரை நோக்கி, “இந்த உவமையின் பொருள் என்ன?” என்று கேட்டனர்.
10இயேசு, “தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ள நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஆனால், நான் பிற மக்களோடு பேசுவதற்கு உவமைகளைப் பயன்படுத்துகிறேன். நான் இவ்வாறு செய்வது ஏனென்றால்:
“‘அவர்கள் பார்ப்பார்கள்,
ஆனால் எதையும் காணமாட்டார்கள்.
அவர்கள் கவனிப்பார்கள்:
ஆனால் எதையும் புரிந்துகொள்ளமாட்டார்கள்’”#ஏசா. 6:9
என்றார்.
உவமையின் விளக்கம்
(மத்தேயு 13:18-23; மாற்கு 4:13-20)
11“இந்த உவமை இவ்வாறு பொருள்படுகிறது: விதை தேவனுடைய வசனமாகும். 12பாதையோரத்தில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய போதனையைக் கேட்கிற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால் பிசாசு வந்து அவர்கள் இதயத்தில் இருந்து அந்த போதனையை எடுத்துப் போகிறான். எனவே அந்த மனிதர்கள் போதனையை நம்பி, இரட்சிப்படைய முடியாது. 13பாறையில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? தேவனுடைய போதனையைக் கேட்டு, மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால், இந்த மனிதர்கள் ஆழமாக வேர் விடுவதில்லை. கொஞ்ச நேரம் நம்பிக்கை வைப்பர். ஆனால் பின்பு தொல்லைகள் வரும். நம்புவதை விடுத்து, தேவனை விட்டு விலகிச் செல்வர்.
14“முட்புதர்களின் நடுவில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய போதனையைக்கேட்டும், கவலை, செல்வம், இவ்வாழ்வின் களிப்பு ஆகியவற்றால் அப்போதனைகளை வளரவிடாது தடுக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. எனவே, அவர்கள் ஒருபோதும் நல்ல பலன் கொடுப்பதில்லை. 15நல்ல நிலத்தில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனின் போதனைகளை உண்மையான நல்ல இதயத்தோடு கேட்கின்ற மக்களைப் போன்றது. அவர்கள் தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து பொறுமையாக நற்பலனைக் கொடுப்பவர்களாவார்கள்.
கவனிக்கும் முறை
(மாற்கு 4:21-25)
16“எந்த மனிதனும் விளக்கைக் கொளுத்தி, ஒரு பாத்திரத்தினால் மூடி, படுக்கையின் கீழே மறைத்து வைப்பது இல்லை. ஆனால் அம்மனிதன் விளக்கை அதற்குரிய விளக்குத் தண்டின்மேல் உள்ளே நுழையும் மக்கள் அனைவருக்கும் ஒளி தரும்படியாக ஏற்றி வைப்பான். 17மறைக்கப்பட்டவை அனைத்தும் வெளிப்படும். ஒவ்வொரு இரகசியமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். 18எவ்வாறு கவனிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். புரியும் திறன் பெற்ற மனிதன் மிகுதியாக அறிந்துகொள்வான். புரியும் திறனற்ற மனிதனோ தனக்கு இருப்பதாக அவன் நினைக்கும், புரியும் திறனையும் இழந்துவிடுவான்” என்றார்.
இயேசுவின் குடும்பத்தினர்
(மத்தேயு 12:46-50; மாற்கு 3:31-35)
19இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைக் காண வந்தனர். இயேசுவின் தாயும் சகோதரரும் இயேசுவை நெருங்க முடியாதபடி பல மக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். 20ஒருவன் இயேசுவிடம், “உங்கள் தாயும், சகோதரர்களும் வெளியே நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்கள் உங்களைக் காண விரும்புகின்றனர்” என்றான்.
21இயேசு அவர்களுக்கு, “தேவனுடைய போதனையைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிந்து நடக்கிற மக்களே என் தாயும், சகோதரர்களும் ஆவார்கள்” என்று பதிலளித்தார்.
இயேசுவைப் பின்பற்றினோர் அவரது ஆற்றலைக் காணுதல்
(மத்தேயு 8:23-27; மாற்கு 4:35-41)
22ஒரு நாள் இயேசுவும், அவரது சீஷர்களும் ஒரு படகில் அமர்ந்தனர். இயேசு அவர்களிடம், “ஏரியைக் கடந்து அக்கரை செல்ல என்னோடு வாருங்கள்” என்றார். அவர்கள் அவ்வாறே செல்ல ஆரம்பித்தனர். 23படகு செல்கையில் இயேசு தூக்கத்தில் ஆழ்ந்தார். ஏரியின் மீது ஒரு பெரிய புயல் வீசிற்று. படகுக்குள் நீர் நிரம்ப ஆரம்பித்தது. அவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டனர். 24இயேசுவின் சீஷர்கள் அவரிடம் சென்று அவரை எழுப்பினர். அவர்கள், “ஐயா, ஐயா, நாம் மூழ்கிவிடப் போகிறோம்” என்றனர்.
இயேசு எழுந்தார். அவர் காற்றுக்கும், அலைகளுக்கும் கட்டளையிட்டார். உடனே காற்று ஓய்ந்தது. ஏரி அமைதியுற்றது. 25இயேசு தன்னோடு இருந்தவர்களை நோக்கி, “உங்கள் விசுவாசம் எங்கே?” என்றார்.
இயேசுவைப் பின்பற்றி வந்தவர்களோ அச்சமும் ஆச்சரியமும் கொண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் “இம்மனிதர் எப்படிப்பட்டவர்? காற்றுக்கும், நீருக்கும் கட்டளையிட அவை அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று கூறிக் கொண்டனர்.
பிசாசு பிடித்த மனிதன்
(மத்தேயு 8:28-34; மாற்கு 5:1-20)
26இயேசுவும், அவரைப் பின்பற்றியவர்களும் கலிலேயாவில் இருந்து ஓர் ஏரியைக் கடந்து சென்றனர். கதரேனர் மக்கள் வாழ்கின்ற பகுதியை வந்தடைந்தனர். 27இயேசு படகில் இருந்து இறங்கிய போது, அந்த நகரத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அம்மனிதன் பிசாசுகள் பிடித்தவனாக இருந்தான். பல காலமாக அவன் ஆடைகள் எதுவும் அணியவில்லை. வீட்டில் வசிக்காமல் இறந்தவர்களைப் புதைத்த குகைகளில் வசித்தான்.
28-29பிசாசு அவனை அடிக்கடி ஆக்கிரமித்தது. அம்மனிதனைச் சிறையில் அடைந்தனர். அவனது கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டன. ஆனால் அம்மனிதன் சங்கிலிகளை அறுத்து விலக்கிவிடுவான். மக்களே இல்லாத இடங்களுக்கு அம்மனிதனை அவனுக்குள் இருந்த பிசாசு இழுத்துச் சென்றது. இயேசு அந்த அசுத்த ஆவிக்கு அம்மனிதனை விட்டு வெளியே வருமாறு கட்டளையிட்டார். அம்மனிதன் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, உரத்த குரலில், “இயேசுவே, உன்னத தேவனின் குமாரனே! நீர் என்னிடம் எதிர்ப்பார்ப்பதென்ன? தயவுசெய்து என்னைக் கொடுமைப்படுத்தாதிரும்” என்றான்.
30இயேசு அவனை நோக்கி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அம்மனிதன், “லேகியோன்” என்று பதிலளித்தான். (அவன் பல பிசாசுகள் தன்னைப் பிடித்திருந்தமையால் தனது பெயர் “லேகியோன்” என்று குறிப்பிட்டான்) 31நித்தியமான இருளுக்குத் தங்களை அனுப்பாதவாறு பிசாசுகள் இயேசுவை வேண்டிக்கொண்டன. 32அம்மலையின் மீது ஒரு கூட்டமான பன்றிகள் மேய்ந்துகொண்டிருந்தன. பிசாசுகள் அப்பன்றிக் கூட்டத்தில் செல்வதற்குத் தங்களை அனுமதிக்குமாறு இயேசுவை வேண்டின. இயேசு அவ்வாறே செய்ய அனுமதித்தார். 33பிசாசுகள் அம்மனிதனைவிட்டு வெளியேறி பன்றிகளின் உள்ளே புகுந்தன. பன்றிகள் பாறைகளில் உருண்டு ஏரிக்குள் விழுந்தன. எல்லாப் பன்றிகளும் மூழ்கி மடிந்தன.
34பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்த மனிதர்கள் நடந்ததைப் பார்த்து அங்கிருந்து ஓடிப்போனார்கள். அவர்கள் நடந்ததை வயற்புறங்களுக்கும், நகரங்களுக்கும் சென்று மக்களுக்குக் கூறினர். 35நடந்ததைக் காண விரும்பிய மக்கள் இயேசுவிடம் சென்றனர். அவர்கள் இயேசுவை நெருங்கியபோது இயேசுவின் பாதத்தருகே அம்மனிதன் உட்கார்ந்து இருக்கக் கண்டனர். அம்மனிதன் ஆடைகள் அணிந்தவனாக, மனநலம் பெற்றவனாகக் காணப்பட்டான். பிசாசுகள் அவனைவிட்டு நீங்கி இருந்தன. அதைக் கண்டு அச்சம் கொண்டனர் மக்கள்.
36நடந்தவற்றைக் கண்ட மக்கள் பிறரிடம் இயேசு அந்த மனிதனைக் குணமாக்கிய வகையைக் கூறினர். 37இயேசுவை அங்கிருந்து போய்விடுமாறு கெதரேன பகுதி மக்கள் அனைவரும் கூறினர். அவர்கள் மிகவும் பயந்தவர்களாகக் காணப்பட்டனர். எனவே இயேசு படகில் ஏறி, கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார். 38இயேசுவால் குணம் பெற்ற மனிதன் தானும் கூடவே வர விரும்புவதாக அவரை வேண்டினான்.
ஆனால் இயேசு அந்த மனிதனிடம், 39“வீட்டுக்குப்போய் தேவன் உனக்குச் செய்ததைப் பிறருக்குக் கூறு” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.
ஆகவே அவன் இயேசு தனக்குச் செய்ததை நகரமெங்கும் சென்று மக்களுக்குக் கூறினான்.
இறந்த பெண் உயிரடைதலும் நோயாளி குணப்படுதலும்
(மத்தேயு 9:18-26; மாற்கு 5:21-43)
40இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றபோது மக்கள் அவரை வரவேற்றனர். ஒவ்வொருவரும் அவருக்காகக் காத்திருந்தனர். 41யவீரு என்னும் பெயருள்ள மனிதன் இயேசுவிடம் வந்தான். ஜெப ஆலயத்தின் தலைவனாக யவீரு இருந்தான். இயேசுவின் பாதங்களில் விழுந்து வணங்கி யவீரு தன் வீட்டுக்கு வருகை தருமாறு அவரை வேண்டினான். 42யவீருக்கு ஒரே ஒரு குமாரத்தி இருந்தாள். அவளுக்குப் பன்னிரண்டு வயதாகி இருந்தது. அவள் இறக்கும் தருவாயில் இருந்தாள். யவீருவின் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது எல்லா பக்கங்களிலிருந்தும் இயேசுவை மக்கள் சூழ்ந்து கொண்டனர். 43இரத்தப் போக்கினால் பன்னிரண்டு ஆண்டுகள் துன்புற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணும் அவர்களுள் ஒருத்தி ஆவாள். மருத்துவர்களிடம் சென்று அவள் தனது பணத்தை எல்லாம் செலவழித்திருந்தாள். ஆனால் எந்த மருத்துவராலும் அவளைக் குணமாக்க இயலவில்லை. 44அப்பெண் இயேசுவுக்குப் பின்னாக வந்து அவரது அங்கியின் கீழ்ப் பகுதியைத் தொட்டாள். அந்நேரமே அவளின் இரத்தப் போக்கு நின்றுவிட்டது. 45அப்போது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். எல்லாருமே தாம் இயேசுவைத் தொடவில்லை என்று கூறினர். பேதுரு, “குருவே! உங்களைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் நெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது” என்றான்.
46அதற்கு இயேசு, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டது உண்மை. என்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை நான் உணர்ந்தேன்” என்றார். 47தன்னால் ஒளிக்க முடியாததை உணர்ந்த பெண், நடுங்கியவளாய் இயேசுவின் முன்னே விழுந்து வணங்கினாள். மக்கள் அனைவரும் கேட்கும்படி தான் இயேசுவைத் தொட்டதன் காரணத்தைக் கூறினாள். பின்னர் தான் இயேசுவைத் தொட்டவுடன் குணமடைந்ததையும் சொன்னாள். 48இயேசு அவளை நோக்கி, “என் மகளே, நீ விசுவாசித்ததால் குணமாக்கப்பட்டாய். சமாதானத்தோடு போ” என்றார்.
49இயேசு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கையில் ஜெப ஆலயத்தின் தலைவனின் வீட்டிலிருந்து ஒருவன் வந்து, “உங்கள் குமாரத்தி இறந்துவிட்டாள். போதகரை மேலும் தொல்லைப்படுத்த வேண்டாம்” என்றான்.
50இயேசு அதைக் கேட்டார். அவர் யவீருவை நோக்கி, “பயப்படாதே, விசுவாசத்துடனிரு, உன் குமாரத்தி குணம் பெறுவாள்” என்றார்.
51இயேசு வீட்டை அடைந்தார். பேதுரு யோவான், யாக்கோபு, பெண்ணின் தந்தை, தாய் ஆகியோரை மட்டுமே உள்ளே வர அனுமதித்தார். பிறரை உள்ளே விடவில்லை. 52எல்லா மக்களும் அச்சிறுமி இறந்ததற்காக அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தனர். ஆனால் இயேசு, “அழாதீர்கள். அவள் இறக்கவில்லை. அவள் உறங்கிக்கொண்டிருக்கிறாள்” என்றார்.
53அச்சிறுமி இறந்தாள் என அறிந்திருந்ததால் மக்கள் இயேசுவைப் பார்த்துச் சிரித்தனர். 54ஆனால் இயேசு அவளது கையைப் பிடித்து, “சிறுமியே, எழுந்து நில்” என்றார். 55அவள் ஆவி அவளுக்குள் திரும்ப வந்தது. அவள் உடனே எழுந்து நின்றாள். இயேசு, “அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றார். 56சிறுமியின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். நடந்ததைப் பிறருக்குக் கூறாமல் இருக்கும்படியாக இயேசு அவர்களுக்குக் கூறினார்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
லூக்கா எழுதிய சுவிசேஷம் 8: TAERV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International