மாற் 10:1-12

மாற் 10:1-12 IRVTAM

இயேசு அந்த இடத்திலிருந்து, யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள தேசத்தின்வழியாக யூதேயாவின் எல்லைகளில் வந்தார். மக்கள் மீண்டும் அவரிடம் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மீண்டும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார். அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார். அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான். ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள்; இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள். எனவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார். பின்பு வீட்டில் இருக்கும்போது அவருடைய சீடர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மீண்டும் அவரிடம் விசாரித்தார்கள். அப்பொழுது அவர்: யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான். மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, வேறொருவனை திருமணம்செய்தால், விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார்.