மாற்கு 10:1-12

மாற்கு 10:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பின்பு இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, யூதேயா பகுதிக்கும், யோர்தானின் மறுபக்கத்திலுள்ள பகுதிகளுக்கும் சென்றார். மீண்டும் மக்கள் அவரிடம் பெருங்கூட்டமாய் வந்தார்கள். வழக்கம்போல் அவர் அவர்களுக்கு போதித்தார். சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “உங்களுக்கு மோசே என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஒருவன் விவாகரத்துப் பத்திரத்தை எழுதி அவளை விவாகரத்து செய்ய மோசே அனுமதி கொடுத்திருக்கிறார்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, மோசே இந்தச் சட்டத்தை உங்களுக்கு எழுதிக்கொடுத்திருக்கிறான்” என்றார். “ஆனால் படைப்பின் தொடக்கத்திலே இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகவே’ படைத்தார். ‘இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.’ எனவே அவர்கள் இருவராய் இல்லாமல், இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள். ஆகையால், இறைவன் ஒன்றிணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார். மீண்டும் அவர்கள் வீட்டில் இருந்தபோது, சீடர்கள் இதைப்பற்றி இயேசுவிடம் கேட்டார்கள். அதற்கு அவர், “தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிற ஒருவன், அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறான். ஒரு பெண் தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் விபசாரம் செய்கிறாள்” என்றார்.

மாற்கு 10:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இயேசு அந்த இடத்திலிருந்து, யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள தேசத்தின்வழியாக யூதேயாவின் எல்லைகளில் வந்தார். மக்கள் மீண்டும் அவரிடம் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மீண்டும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார். அப்பொழுது பரிசேயர்கள், அவரைச் சோதிக்கவேண்டும் என்று, அவரிடம் வந்து: கணவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா? என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார். அதற்கு அவர்கள் விவாகரத்திற்குரிய விடுதலைப்பத்திரத்தை எழுதிக்கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதி கொடுத்திருக்கிறார் என்றார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான். ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். இதனால் கணவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவர்களும் ஒரே மாம்சமாக இருப்பார்கள்; இவ்விதமாக அவர்கள் இருவர்களாக இல்லாமல் ஒரே மாம்சமாக இருக்கிறார்கள். எனவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார். பின்பு வீட்டில் இருக்கும்போது அவருடைய சீடர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மீண்டும் அவரிடம் விசாரித்தார்கள். அப்பொழுது அவர்: யாராவது தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறவனாக இருப்பான். மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, வேறொருவனை திருமணம்செய்தால், விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார்.

மாற்கு 10:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு அந்த இடத்தை விட்டு இயேசு வெளியேறினார். அவர் யோர்தான் ஆற்றைக் கடந்து யூதேயா பகுதிக்குள் சென்றார். அங்கு, ஏராளமான மக்கள் அவரிடம் வந்தார்கள். வழக்கம்போல இயேசு அவர்களுக்குப் போதனை செய்தார். சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், இயேசுவைத் தவறாக ஏதாவது பேசவைக்க முயன்றார்கள். அவர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களிடம், “மோசே உங்களிடம் என்ன செய்யுமாறு கட்டளை இட்டார்?” என்று கேட்டார். பரிசேயர்களோ, “ஒருவன் விவாகரத்துக்கான சான்றிதழை எழுதி அதன் மூலம் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதித்து இருக்கிறார்” என்றனர். அவர்களிடம் இயேசு, “மோசே உங்களுக்காக அவ்வாறு எழுதி இருக்கிறார். ஏனென்றால் நீங்கள் தேவனின் போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள். ஆனால் தேவன் உலகைப் படைக்கும்போது ‘அவர் மக்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்.’ ‘அதனால்தான் ஒருவன் தன் தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு மனைவியோடு சேர்ந்து கொள்கிறான். இருவரும் ஒருவர் ஆகிவிடுகிறார்கள். எனவே அவர்கள் இருவராயில்லாமல் ஒருவராகி விடுகின்றனர்.’ தேவன் அந்த இருவரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். எனவே, எவரும் அவர்களைப் பிரிக்கக்கூடாது” என்றார். பிறகு இயேசுவும், சீஷர்களும் அந்த வீட்டில் தனியே இருந்தனர். அப்போது சீஷர்கள் இயேசுவிடம் மீண்டும் விவாகரத்து பற்றிய கேள்வியைக் கேட்டனர். அதற்கு இயேசு, “எவனொருவன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறானோ அவன் தன் மனைவிக்கு எதிரான பாவியாகிறான். அத்துடன் விபசாரமாகிய பாவத்துக்கும் ஆளாகிறான். இது போலவே தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை மணந்துகொள்கிற பெண்ணும் விபசாரம் செய்யும் பாவியாகிறாள்” என்றார்.

மாற்கு 10:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார். அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். அவர் பிரதியுத்தரமாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுகொடுத்திருக்கிறார் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான். ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மறுபடியும் அவரிடத்தில் விசாரித்தார்கள். அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான். மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார்.