மாற்கு எழுதிய சுவிசேஷம் 10:1-12

மாற்கு எழுதிய சுவிசேஷம் 10:1-12 TAERV

பிறகு அந்த இடத்தை விட்டு இயேசு வெளியேறினார். அவர் யோர்தான் ஆற்றைக் கடந்து யூதேயா பகுதிக்குள் சென்றார். அங்கு, ஏராளமான மக்கள் அவரிடம் வந்தார்கள். வழக்கம்போல இயேசு அவர்களுக்குப் போதனை செய்தார். சில பரிசேயர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், இயேசுவைத் தவறாக ஏதாவது பேசவைக்க முயன்றார்கள். அவர்கள் அவரிடம், “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களிடம், “மோசே உங்களிடம் என்ன செய்யுமாறு கட்டளை இட்டார்?” என்று கேட்டார். பரிசேயர்களோ, “ஒருவன் விவாகரத்துக்கான சான்றிதழை எழுதி அதன் மூலம் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று மோசே அனுமதித்து இருக்கிறார்” என்றனர். அவர்களிடம் இயேசு, “மோசே உங்களுக்காக அவ்வாறு எழுதி இருக்கிறார். ஏனென்றால் நீங்கள் தேவனின் போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டீர்கள். ஆனால் தேவன் உலகைப் படைக்கும்போது ‘அவர் மக்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்.’ ‘அதனால்தான் ஒருவன் தன் தாயையும் தந்தையையும் விட்டுவிட்டு மனைவியோடு சேர்ந்து கொள்கிறான். இருவரும் ஒருவர் ஆகிவிடுகிறார்கள். எனவே அவர்கள் இருவராயில்லாமல் ஒருவராகி விடுகின்றனர்.’ தேவன் அந்த இருவரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். எனவே, எவரும் அவர்களைப் பிரிக்கக்கூடாது” என்றார். பிறகு இயேசுவும், சீஷர்களும் அந்த வீட்டில் தனியே இருந்தனர். அப்போது சீஷர்கள் இயேசுவிடம் மீண்டும் விவாகரத்து பற்றிய கேள்வியைக் கேட்டனர். அதற்கு இயேசு, “எவனொருவன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறானோ அவன் தன் மனைவிக்கு எதிரான பாவியாகிறான். அத்துடன் விபசாரமாகிய பாவத்துக்கும் ஆளாகிறான். இது போலவே தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவனை மணந்துகொள்கிற பெண்ணும் விபசாரம் செய்யும் பாவியாகிறாள்” என்றார்.