மாற் 14:1-9

மாற் 14:1-9 IRVTAM

இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும், அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள். ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள். அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள். அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு: இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன்? இதை முந்நூறு வெள்ளிக்காசுகளுக்கு அதிகமான விலைக்கு விற்று, ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைப்பற்றி முறுமுறுத்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன். இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள். இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.