மாற் 2:1-12

மாற் 2:1-12 IRVTAM

சில நாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டு; உடனே அநேக மக்கள் கூடிவந்தார்கள், வாசலுக்குமுன்பு நிற்க இடம் இல்லாமல்போனது; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார். அப்பொழுது நான்குபேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்; மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள். இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அங்கே உட்கார்ந்திருந்த வேதபண்டிதர்களில் சிலர்: இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய மனதில் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறது என்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக தன் வீட்டிற்குப்போனான். அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு: நாம் இதுவரை இப்படிப்பட்ட சம்பவத்தைப் பார்த்தது இல்லை என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.