மாற்கு 2:1-12
மாற்கு 2:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சில நாட்களுக்குப்பின், இயேசு மீண்டும் கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டார்கள். எனவே மக்கள் அங்கு திரளாய் கூடிவந்தார்கள்; இதனால் வீட்டின் வாசலுக்கு வெளியேயும் இடம் இல்லாமல் போயிற்று. இயேசு மக்களுக்கு வார்த்தையைப் போதித்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர்களில் நாலுபேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் அவனை இயேசுவினிடத்தில் கொண்டு வரமுடியவில்லை; எனவே அவர்கள் இயேசு இருந்த இடத்துக்கு மேலாக உள்ள கூரையைப் பிரித்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதக்காரனைப் படுத்திருந்த படுக்கையோடு கீழே இறக்கினார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். அங்கிருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், தங்கள் இருதயங்களில், “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு தமது ஆவியில் அவர்கள் தங்களுடைய இருதயங்களில் இவ்வாறு சிந்திக்கிறார்கள் என அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்? நான் இந்த முடக்குவாதக்காரனிடம், ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வதா, எது எளிது?” என்று கேட்டார். ஆனால், “பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன். பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார். உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக நடந்துபோனான். இதனால் எல்லோரும் வியப்படைந்து, “இப்படிப்பட்ட காரியத்தை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று சொல்லி, இறைவனைத் துதித்தார்கள்.
மாற்கு 2:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சில நாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டு; உடனே அநேக மக்கள் கூடிவந்தார்கள், வாசலுக்குமுன்பு நிற்க இடம் இல்லாமல்போனது; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார். அப்பொழுது நான்குபேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்; மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள். இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அங்கே உட்கார்ந்திருந்த வேதபண்டிதர்களில் சிலர்: இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய மனதில் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறது என்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக தன் வீட்டிற்குப்போனான். அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு: நாம் இதுவரை இப்படிப்பட்ட சம்பவத்தைப் பார்த்தது இல்லை என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
மாற்கு 2:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)
சில நாட்களுக்குப் பின்னர், இயேசு கப்பர்நகூமுக்கு வந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் என்ற செய்தி பரவியது. ஏராளமான ஜனங்கள் இயேசுவின் போதனையைக் கேட்கக் கூடினார்கள். அந்த வீடு நிறைந்துவிட்டது. அங்கு நிற்பதற்கும் இடமில்லை. வாசலுக்கு வெளியேயும் இடமில்லை. இயேசு அவர்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். ஒரு பக்கவாதக்காரனைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். நான்கு பேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்தனர். ஆனால் அவர்களால் அவனை இயேசுவின் அருகில் கொண்டுவர முடியவில்லை. ஏனென்றால் மக்கள் கூட்டம் அவ்வீட்டைச் சூழ்ந்திருந்தது. எனவே அவர்கள் கூரைமீது ஏறி இயேசு இருந்த இடத்துக்கு மேல் கூரையில் ஒரு திறப்பை உண்டாக்கினார்கள். பிறகு பக்கவாதக்காரனின் படுக்கையை வீட்டுக்குள் இறக்கினார்கள். அவர்களது அளவுக்கடந்த விசுவாசத்தை இயேசு பார்த்தார். எனவே பக்கவாதக்காரனைப் பார்த்து இயேசு, “இளைஞனே! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். சில வேதபாரகர்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இயேசு செய்வனவற்றைப் பார்த்து விட்டு தங்களுக்குள், “ஏன் இந்த மனிதர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்? இவர் சொல்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதாகவே உள்ளதே. தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கத்தக்கவர்” என்று சொல்லிக் கொண்டனர். வேதபாரகர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே இயேசு அறிந்துகொண்டார். எனவே, இயேசு அவர்களிடம், “ஏன் இப்படி யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? பக்கவாதக்காரனைப் பார்த்து, ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வது எளிதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட’ என்று சொல்வது எளிதா? இரண்டில் எது எளிதாகும்? ஆனால் மனித குமாரனுக்குப் பூமியிலே பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் உண்டு என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறேன்” என்று கூறி பிறகு பக்கவாதக்காரனைப் பார்த்து, “நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திரு, உனது படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போ” என்றார். பக்கவாதக்காரன் எழுந்து, அவனது படுக்கையை எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். அனைத்து மக்களும் அவனைப் பார்த்தார்கள். அவர்கள் சந்தோஷப்பட்டு தேவனைப் புகழ்ந்தார்கள். அவர்கள், “இதுபோல ஆச்சரியம் மிக்க ஒன்றை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை!” என்றனர்.
மாற்கு 2:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு; உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார். அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள். இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.