மாற்கு 2:1-12

மாற்கு 2:1-12 TCV

சில நாட்களுக்குப்பின், இயேசு மீண்டும் கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டார்கள். எனவே மக்கள் அங்கு திரளாய் கூடிவந்தார்கள்; இதனால் வீட்டின் வாசலுக்கு வெளியேயும் இடம் இல்லாமல் போயிற்று. இயேசு மக்களுக்கு வார்த்தையைப் போதித்தார். அப்பொழுது சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர்களில் நாலுபேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் அவனை இயேசுவினிடத்தில் கொண்டு வரமுடியவில்லை; எனவே அவர்கள் இயேசு இருந்த இடத்துக்கு மேலாக உள்ள கூரையைப் பிரித்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதக்காரனைப் படுத்திருந்த படுக்கையோடு கீழே இறக்கினார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். அங்கிருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், தங்கள் இருதயங்களில், “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு தமது ஆவியில் அவர்கள் தங்களுடைய இருதயங்களில் இவ்வாறு சிந்திக்கிறார்கள் என அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்? நான் இந்த முடக்குவாதக்காரனிடம், ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வதா, எது எளிது?” என்று கேட்டார். ஆனால், “பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன். பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார். உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக நடந்துபோனான். இதனால் எல்லோரும் வியப்படைந்து, “இப்படிப்பட்ட காரியத்தை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று சொல்லி, இறைவனைத் துதித்தார்கள்.