நெகே 8:1-9

நெகே 8:1-9 IRVTAM

மக்கள் எல்லோரும் தண்ணீர் வாசலுக்கு முன்பாக இருந்த திறந்த வெளியிலே ஒருமனப்பட்டுக் கூடி, யெகோவா இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள். அப்படியே ஏழாம் மாதம் முதல் தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தை ஆண்களும் பெண்களும், கேட்டு அறிந்துகொள்ளக்கூடிய அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து, தண்ணீர் வாசலுக்கு முன்பாக இருந்த திறந்தவெளிக்கு எதிரே காலைதுவங்கி மதியம்வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும், கேட்டு அறிந்துகொள்ளக்கூடிய மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; எல்லா மக்களும் நியாயப்பிரமாண புத்தகம் வாசிக்கப்பட்டதை கவனமாகக் கேட்டார்கள். வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனருகில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசயேலும், மல்கியாவும், ஆசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள். எஸ்றா எல்லா மக்களுக்கும் உயர நின்று, எல்லா மக்களும் காணப் புத்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத் திறந்தபோது, மக்கள் எல்லோரும் எழுந்துநின்றார்கள். அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய யெகோவா வை ஸ்தோத்தரித்தான்; மக்களெல்லோரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென், ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புற விழுந்து, யெகோவாவை தொழுதுகொண்டார்கள். யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சப்பேதாயி ஒதியா, மாசெயா, கெலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியர்களும், நியாயப்பிரமாணத்தை மக்களுக்கு விளங்கச்செய்தார்கள்; மக்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள். அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தை விளக்கமாக வாசித்து, அர்த்தம்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கச்செய்தார்கள். மக்கள் எல்லோரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுததால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், மக்களுக்கு விளக்கிக்காட்டின லேவியர்களும் எல்லா மக்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.