நெகேமியா 8:1-9

நெகேமியா 8:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஜனங்கள் எல்லாரும் தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள். அப்படியே ஏழாம் மாதம் முதல் தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து, தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள். வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள். எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயர நின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத் திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள். அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென், ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புற விழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள். யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள். அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள். ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்ட போது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.

நெகேமியா 8:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எல்லா மக்களும் தண்ணீர் வாசலின் முன்னேயுள்ள சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள். யெகோவா இஸ்ரயேலருக்கென கட்டளையிட்டிருந்த மோசேயின் சட்டப் புத்தகத்தைக் கொண்டுவரும்படி சட்ட ஆசிரியர் எஸ்றாவிடம் கூறினார்கள். எனவே ஏழாம் மாதம் முதலாம் நாளில், ஆண்களும் பெண்களும் விளங்கிக்கொள்ளக்கூடிய எல்லோரும் கூடியிருந்த சபைக்குமுன் மோசேயின் சட்ட புத்தகத்தை ஆசாரியன் எஸ்றா கொண்டுவந்தான். எஸ்றா தண்ணீர் வாசலின் முன்னால் இருந்த சதுக்கத்தைப் பார்த்தபடி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் விளங்கிக்கொள்ள ஆற்றலுள்ளவர்களுக்கு, அதிகாலையிலிருந்து நண்பகல்வரை மோசேயின் சட்டப் புத்தகத்தைச் சத்தமாக வாசித்தான்; எல்லா மக்களும் அதைக் கூர்ந்து கவனித்துக் கேட்டார்கள். அந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மரத்தாலான உயர்ந்த மேடையின்மேல் சட்ட ஆசிரியன் எஸ்றா ஏறி நின்றான். அவனருகில் வலப்பக்கத்தில் மத்தித்தியா, செமா, அனாயா, உரியா, இல்க்கியா, மாசெயா என்பவர்கள் நின்றார்கள். இடப்பக்கத்தில் பெதாயா, மீசயேல், மல்கியா, ஆசூம், அஸ்பதனா, சகரியா, மெசுல்லாம் ஆகியோர் நின்றார்கள். எஸ்றா புத்தகத்தைத் திறந்தான். அவன் அவர்களைவிட உயரத்தில் நின்றபடியால், எல்லா மக்களுக்கும் அவனைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவன் புத்தகத்தைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். எஸ்றா மேன்மையுள்ள இறைவனாகிய யெகோவாவைத் துதித்தான்; மக்கள் யாவரும் தங்கள் கைகளை உயர்த்தி, “ஆமென்! ஆமென்!” என்று சொன்னார்கள். பின்பு அவர்கள் தரையில் முகங்குப்புற விழுந்து யெகோவாவை வழிபட்டார்கள். மக்கள் அங்கு நின்றுகொண்டிருக்கையில், லேவியர்களான யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கெலித்தா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா ஆகியோர் அவர்களுக்கு சட்டத்திலிருந்து அறிவுறுத்தினார்கள். அவர்கள் இறைவனுடைய சட்டப் புத்தகத்தை வாசித்து அதில் உள்ளவற்றை மக்கள் விளங்கிக்கொள்ளத்தக்கதாக தெளிவுபடுத்தினார்கள். அதனால் எல்லா மக்களும் அதை விளங்கிக்கொண்டனர். எல்லா மனிதரும் இறைவனுடைய சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதார்கள். அதனால் ஆளுநரான நெகேமியாவும், ஆசாரியனும், சட்ட ஆசிரியருமான எஸ்றாவும், மக்களுக்குக் போதித்துக்கொண்டிருந்த லேவியர்களும் எல்லா மக்களிடமும், “இந்த நாள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள். ஆகவே நீங்கள் துக்கப்படவோ, அழவோ வேண்டாம்” என்றார்கள்.

நெகேமியா 8:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மக்கள் எல்லோரும் தண்ணீர் வாசலுக்கு முன்பாக இருந்த திறந்த வெளியிலே ஒருமனப்பட்டுக் கூடி, யெகோவா இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள். அப்படியே ஏழாம் மாதம் முதல் தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தை ஆண்களும் பெண்களும், கேட்டு அறிந்துகொள்ளக்கூடிய அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து, தண்ணீர் வாசலுக்கு முன்பாக இருந்த திறந்தவெளிக்கு எதிரே காலைதுவங்கி மதியம்வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும், கேட்டு அறிந்துகொள்ளக்கூடிய மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; எல்லா மக்களும் நியாயப்பிரமாண புத்தகம் வாசிக்கப்பட்டதை கவனமாகக் கேட்டார்கள். வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனருகில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசயேலும், மல்கியாவும், ஆசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள். எஸ்றா எல்லா மக்களுக்கும் உயர நின்று, எல்லா மக்களும் காணப் புத்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத் திறந்தபோது, மக்கள் எல்லோரும் எழுந்துநின்றார்கள். அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய யெகோவா வை ஸ்தோத்தரித்தான்; மக்களெல்லோரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென், ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புற விழுந்து, யெகோவாவை தொழுதுகொண்டார்கள். யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சப்பேதாயி ஒதியா, மாசெயா, கெலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியர்களும், நியாயப்பிரமாணத்தை மக்களுக்கு விளங்கச்செய்தார்கள்; மக்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள். அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தை விளக்கமாக வாசித்து, அர்த்தம்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கச்செய்தார்கள். மக்கள் எல்லோரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுததால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், மக்களுக்கு விளக்கிக்காட்டின லேவியர்களும் எல்லா மக்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.

நெகேமியா 8:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆண்டின் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அவர்கள் ஒன்றாயிருந்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டு தண்ணீர் வாசலுக்கு முன்னால் திறந்தவெளியில் அனைவரும் கூடினார்கள். அந்த ஜனங்கள் அனைவரும் எஸ்றா எனும் வேதபாரகனிடம் மோசேயின் சட்டப் புத்தகத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டார்கள். அதுதான் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்ட சட்டப் புத்தகம். எனவே, ஆசாரியனான எஸ்றா அங்கே கூடியுள்ள ஜனங்களின் முன், சட்டப் புத்தகத்தைக் கொண்டுவந்தான். இதுவே அம்மாதத்தின் முதல் நாளாகும். இது அந்த ஆண்டின் ஏழாவது மாதமாகும். அக்கூட்டத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கவனித்துக்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தனர். எஸ்றா அதிகாலையிலிருந்து மதியம்வரை சட்டப்புத்தகத்திலிருந்து உரத்த குரலில் வாசித்தான். அவன் ஆண்களும் பெண்களுமாய் கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தவர்களிடம் வாசித்தான். அனைத்து ஜனங்களும் கவனமாகக் கேட்டனர். சட்டப் புத்தகத்தில் கவனம் வைத்தனர். எஸ்றா மரத்தால் ஆன மேடையின் மேல் நின்றான். அது இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்தது. எஸ்றாவின் வலது புறத்தில் மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், நின்றனர். அவனது இடது புறத்தில் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள். எனவே எஸ்றா புத்தகத்தைத் திறந்தான். ஜனங்கள் எல்லோரும் அவனைப் பார்க்க முடிந்தது. ஏனென்றால் அவன் உயர்ந்த மேடையில் நின்றுக்கொண்டிருந்தான். எஸ்றா சட்ட புத்தகத்தைத் திறந்ததும் ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றனர். எஸ்றா உன்னத தேவனாகிய கர்த்தரைத் துதித்தான். ஜனங்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி அதற்கு மறுமொழியாக “ஆமென்! ஆமென்!” என்று சொன்னார்கள். பிறகு ஜனங்கள் அனைவரும் குனிந்து முகங்குப்புற விழுந்து கர்த்தரை தொழுதுகொண்டார்கள். லேவியர் கோத்திரத்திலுள்ள இம்மனிதர்கள் அங்கே நின்றுக்கொண்டிருந்த ஜனங்களிடம் சட்டத்தைப் பற்றி ஜனங்களுக்குப் புரியும்படிச் செய்தனர். அவர்கள் யெசுவா, பானி, செரேபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா ஆகியோர்களாவார்கள். அந்த லேவியர்கள் தேவனுடைய சட்டப்புத்தகத்தை வாசித்தனர். அவர்கள் அதனைப் புரியும்படிச் செய்தனர். அதன் பொருளையும் விளக்கினார்கள். அவர்கள் இதனைச் செய்ததால் ஜனங்கள் வாசிக்கப்பட்டது என்னவென்று புரிந்துக்கொண்டனர். பிறகு ஆளுநராகிய நெகேமியா, ஆசாரியனுமான, வேதபாரகனாகிய எஸ்றா மற்றும் ஜனங்களுக்குப் போதித்த லேவியர்களும் ஜனங்களிடம், “இந்நாள் சிறப்புக்குரிய நாளாக உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உள்ளது. எனவே துக்கப்படவும் அழவும் வேண்டாம்” என்றனர். ஏனென்றால் ஜனங்கள் தேவனுடையச் செய்திகளைச் சட்டத்தில் கேட்டதும் அழுதனர்.