நீதி 8:1-36

நீதி 8:1-36 IRVTAM

ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ? அது வழியருகே உள்ள மேடைகளிலும், நான்கு சந்திப்புகளிலும் நிற்கிறது. அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என்னுடைய சத்தம் மனுமக்களுக்குத் தொனிக்கும். பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாக இருங்கள். கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும், ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது. என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும். வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். முத்துக்களைவிட ஞானமே நல்லது; ஆசைப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகரல்ல. ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன். ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது. என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள். என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். செல்வமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது. என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். யெகோவா தமது செயல்களுக்குமுன் ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார். பூமி உண்டாவதற்குமுன்னும், ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன். ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன். மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் உருவாக்கப்பட்டேன். அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும், உயரத்தில் மேகங்களை அமைத்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும், சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும், நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்; எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து, எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன். அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன். ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதைவிட்டு விலகாமல் இருங்கள். என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து, என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான். என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான். எனக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனோ, தன்னுடைய ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் எல்லோரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.