சங் 78
78
சங்கீதம் 78
ஆசாபின் மஸ்கீல் என்னும் போதகப் பாடல்.
1என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்;
என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள்.
2என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்;
ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன்.
3அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்;
எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
4பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல்,
யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும்,
அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.
5அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி,
இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி,
அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி
நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
6இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு,
அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;
7தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து,
தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;
8இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும்,
தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய
தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.
9ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள்
யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.
10அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும்,
அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும்,
11அவருடைய செயல்களையும்,
அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
12அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே,
அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
13கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து,
தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார்.
14பகலிலே மேகத்தினாலும்,
இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
15பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து,
மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
16கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து,
தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
17என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து,
பாலைவனத்திலே உன்னதமான தேவனுக்குக் கோபம் மூட்டினார்கள்.
18தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு,
தங்களுடைய இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
19அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி:
தேவன் பாலைவனத்திலே உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?
20இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது;
அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ?
தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள்.
21ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்;
அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும்,
அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
22யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது;
இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கோபம் மூண்டது.
23அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு,
வானத்தின் கதவுகளைத் திறந்து,
24மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து,
வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
25தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்;
அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார்.
26வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து,
தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
27இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து,
28அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார்.
29அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்;
அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்.
30அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை;
அவர்களுடைய உணவு அவர்களுடைய வாயில் இருக்கும்போதே. 31தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி,
அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார்.
32இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல்,
பின்னும் பாவஞ்செய்தார்கள்.
33ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும்,
அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார்.
34அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து,
அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
35தேவன் தங்களுடைய கன்மலையென்றும்,
உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.
36ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி,
தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
37அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை;
அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை.
38அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்;
அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல்,
அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
39அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
40எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி,
பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள்.
41அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து,
இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள்.
42அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள்.
43அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும்,
சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
44அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய
ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார்.
45அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும்,
அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
46அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும்,
அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
47கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும்,
ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
48அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும்,
அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
49தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும்,
பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
50அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல்,
அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
51எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும்,
காமின்#78:51 காமின் எகிப்து தேசத்தை குறிக்கிறது. காம் நோவாவின் குமாரன், எகிப்தின் மூதாதையர் என்று ஆதியாகமம் 10:6 ல் சொல்லியிருக்கிறது கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து;
52தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து,
அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
53அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்;
அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது.
54அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும்,
தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
55அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு,
தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு,
அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
56ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து,
அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய்,
57தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி,
துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
58தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி,
தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.
59தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து,
இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
60தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள#78:60 சீலொவோம் எருசலேமின் வடக்கே 32 கிமீ தூரத்தில் இருக்கிறது. இஸ்ரவேலின் ஆரம்ப நாட்களில் தேவனுடைய உடன்பட்டிக்கைபெட்டி சீலோவோமில் வைக்கப்பட்டிருந்தது. வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
61தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
62தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
63அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது,
அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள்.
64அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள்,
அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
65அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும்,
திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து,
66தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து,
அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார்.
67அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்;
எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
68யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
69தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும்,
என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
70தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு,
ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.
71கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை,
தம்முடைய மக்களாகிய யாக்கோபையும்
தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக,
அழைத்துக்கொண்டுவந்தார்.
72இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து,
தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
சங் 78: IRVTam
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.