1 கொரிந்தியர் 8:1-11

1 கொரிந்தியர் 8:1-11 TCV

விக்கிரகங்களுக்குப் படைக்கப்படும் உணவைக்குறித்து நான் எழுதுகிறதாவது: அனைவருக்கும் இதைக்குறித்த அறிவு உண்டென்று நமக்குத் தெரியும். ஆனால், ஒருவனில் அறிவு அகந்தையை உண்டுபண்ணுகிறது. அன்போ ஒருவனைக் கட்டியெழுப்புகிறது. தனக்கு ஏதேனும் தெரியும் என ஒருவன் எண்ணினால், அவன் தான் அறியவேண்டிய விதத்தில் இன்னும் அதை அறியவில்லை. ஆனால் இறைவனில் அன்பு செலுத்துகிறவன் இறைவனால் அறியப்பட்டிருக்கிறான். எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதைப்பற்றிய விஷயத்தில்: உலகத்தில் விக்கிரகம் என்பது ஒன்றுமேயில்லை, இறைவன் ஒருவரே; அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்பதையும் நாம் அறிவோம். வானத்திலும் பூமியிலும் தெய்வங்கள் என அழைக்கப்படுபவை உண்டு என்று சிலர் சொல்கிறார்கள். இவ்வாறு அநேக, “தெய்வங்களும்” சுவாமிகளும் உண்டாயிருந்தாலும், நமக்கோ பிதாவாகிய ஒருவரே இறைவன். அவரிடமிருந்தே எல்லாம் வந்தன. அவருக்காகவே நாம் வாழ்கிறோம்; நமக்கு ஒரே ஒரு கர்த்தரே இருக்கிறார். அவரே இயேசுகிறிஸ்து. அவர் மூலமாகவே எல்லாம் வந்தன. அவர் மூலமாகவே நாமும் வாழ்கிறோம். ஆனால் எல்லாக் கிறிஸ்தவர்களும், இந்த அறிவைப் பெற்றிருக்கவில்லை. சிலர் இன்னும் தாம் முன் வழிபட்ட விக்கிரக வழிபாட்டின் எண்ணங்கள் உடையவர்களாய் இருப்பதனால், அப்படியான உணவை அவர்கள் சாப்பிடும்போது, அது ஆற்றலுள்ள விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்ட உணவு என்றே எண்ணுகிறார்கள். அவர்களுடைய மனசாட்சி பலவீனமாய் இருப்பதனால், அது அசுத்தப்படுத்துகிறது. ஆனால் நாங்கள் சாப்பிடும் உணவு, எங்களை இறைவனோடு நெருக்கமாய் கொண்டுவருவதற்கு உதவுவதில்லை. இப்படிப்பட்ட உணவை நாம் சாப்பிடாமல் விடுவதால், நாம் எதையும் இழந்து விடுவதுமில்லை. அதைச் சாப்பிடுவதால், நாம் எதையும் பெற்றுக்கொள்வதுமில்லை. எவ்வாறாயினும், உங்கள் சுதந்தரமான செயற்பாடுகளைக்குறித்து கவனமாயிருங்கள். அது பலவீனருக்கு இடறலாய் இருக்கக்கூடாது. இப்படிப்பட்ட அறிவுள்ள நீங்கள், விக்கிரக வழிபாட்டுக் கோவிலில் இருந்து சாப்பிடுவதை, பலவீனமான மனசாட்சியுடைய ஒருவன் கண்டால், விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதற்கு, அவனும் தூண்டப்படுவான் அல்லவா? பலவீனமான அந்த சகோதரன், உன்னுடைய அறிவின் நிமித்தம் அழிந்துபோகிறானே. கிறிஸ்து அவனுக்காகவும் இறந்தாரே.