1 கொரிந்தியர் 8:1-11
1 கொரிந்தியர் 8:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
விக்கிரகங்களுக்குப் படைக்கப்படும் உணவைக்குறித்து நான் எழுதுகிறதாவது: அனைவருக்கும் இதைக்குறித்த அறிவு உண்டென்று நமக்குத் தெரியும். ஆனால், ஒருவனில் அறிவு அகந்தையை உண்டுபண்ணுகிறது. அன்போ ஒருவனைக் கட்டியெழுப்புகிறது. தனக்கு ஏதேனும் தெரியும் என ஒருவன் எண்ணினால், அவன் தான் அறியவேண்டிய விதத்தில் இன்னும் அதை அறியவில்லை. ஆனால் இறைவனில் அன்பு செலுத்துகிறவன் இறைவனால் அறியப்பட்டிருக்கிறான். எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதைப்பற்றிய விஷயத்தில்: உலகத்தில் விக்கிரகம் என்பது ஒன்றுமேயில்லை, இறைவன் ஒருவரே; அவரைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்பதையும் நாம் அறிவோம். வானத்திலும் பூமியிலும் தெய்வங்கள் என அழைக்கப்படுபவை உண்டு என்று சிலர் சொல்கிறார்கள். இவ்வாறு அநேக, “தெய்வங்களும்” சுவாமிகளும் உண்டாயிருந்தாலும், நமக்கோ பிதாவாகிய ஒருவரே இறைவன். அவரிடமிருந்தே எல்லாம் வந்தன. அவருக்காகவே நாம் வாழ்கிறோம்; நமக்கு ஒரே ஒரு கர்த்தரே இருக்கிறார். அவரே இயேசுகிறிஸ்து. அவர் மூலமாகவே எல்லாம் வந்தன. அவர் மூலமாகவே நாமும் வாழ்கிறோம். ஆனால் எல்லாக் கிறிஸ்தவர்களும், இந்த அறிவைப் பெற்றிருக்கவில்லை. சிலர் இன்னும் தாம் முன் வழிபட்ட விக்கிரக வழிபாட்டின் எண்ணங்கள் உடையவர்களாய் இருப்பதனால், அப்படியான உணவை அவர்கள் சாப்பிடும்போது, அது ஆற்றலுள்ள விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்ட உணவு என்றே எண்ணுகிறார்கள். அவர்களுடைய மனசாட்சி பலவீனமாய் இருப்பதனால், அது அசுத்தப்படுத்துகிறது. ஆனால் நாங்கள் சாப்பிடும் உணவு, எங்களை இறைவனோடு நெருக்கமாய் கொண்டுவருவதற்கு உதவுவதில்லை. இப்படிப்பட்ட உணவை நாம் சாப்பிடாமல் விடுவதால், நாம் எதையும் இழந்து விடுவதுமில்லை. அதைச் சாப்பிடுவதால், நாம் எதையும் பெற்றுக்கொள்வதுமில்லை. எவ்வாறாயினும், உங்கள் சுதந்தரமான செயற்பாடுகளைக்குறித்து கவனமாயிருங்கள். அது பலவீனருக்கு இடறலாய் இருக்கக்கூடாது. இப்படிப்பட்ட அறிவுள்ள நீங்கள், விக்கிரக வழிபாட்டுக் கோவிலில் இருந்து சாப்பிடுவதை, பலவீனமான மனசாட்சியுடைய ஒருவன் கண்டால், விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடுவதற்கு, அவனும் தூண்டப்படுவான் அல்லவா? பலவீனமான அந்த சகோதரன், உன்னுடைய அறிவின் நிமித்தம் அழிந்துபோகிறானே. கிறிஸ்து அவனுக்காகவும் இறந்தாரே.
1 கொரிந்தியர் 8:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லோருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவளர்ச்சியை உண்டாக்கும். ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய விதத்தில் அவன் இன்னும் அறியவில்லை. தேவனிடம் அன்புசெலுத்துகிறவன் யாரோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைச் சாப்பிடுகிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேதவிர வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் எனப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக ஆண்டவன்மார்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்கு உண்டு, அவராலே அனைத்தும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்கு உண்டு; அவர் மூலமாக அனைத்தும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாக நாமும் உண்டாயிருக்கிறோம். ஆனாலும், இந்த அறிவு எல்லோரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டதைச் சாப்பிடுகிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாக இருப்பதால் அசுத்தமாக்கப்படுகிறது. உணவானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது ஏனென்றால், சாப்பிடுவதினால் நமக்கு ஒரு மேன்மையும் இல்லை, சாப்பிடாமல் இருப்பதினால் நமக்கு ஒரு குறைவும் இல்லை. ஆனாலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனர்களுக்கு இடையூறு வராதபடிக்குப் பாருங்கள். எப்படியென்றால், அறிவுள்ளவனாகிய நீ விக்கிரகக் கோவிலிலே சாப்பிடுவதை ஒருவன் பார்த்தால், பலவீனனாக இருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளை சாப்பிடுவதற்குத் துணிவு கொள்ளுமல்லவா? பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
1 கொரிந்தியர் 8:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி குறித்து இப்போது எழுதுவேன். “நாம் அறிவுடையவர்கள்” என்பது நம் அனைவருக்கும் தெரியும். “அறிவு” உங்களைப் பெருமை உடையவர்களாக மாற்றும். ஆனால், அன்பு பிறருக்கு உதவி செய்யுமாறு உங்களை மாற்றும். தனக்கு ஏதோ தெரியுமென எண்ணுகிற ஒருவனுக்கு, இருக்க வேண்டிய அளவுக்கு ஞானம் இருப்பதில்லை. ஆனால், தேவனை நேசிக்கிற மனிதனோ தேவனால் அறியப்பட்டவன். எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி உண்பதைப் பற்றி நான் கூறுவது இதுவே: விக்கிரகமானது இவ்வுலகத்தில் ஒரு பொருட்டல்ல என்பது நமக்குத் தெரியும். ஒரே ஒரு தேவனே உள்ளார் என்பதையும் நாம் அறிவோம். பரலோகத்திலும் பூலோகத்திலும் தேவர்களாக அழைக்கப்படும் பல பொருள்கள் இருக்கின்றன. எனினும் அவை நமக்கு முக்கியமல்ல. “தேவனென்றும்,” “கர்த்தரென்றும்” மனிதர்கள் கருதுகின்ற பல பொருள்கள் உண்டு. ஆனால் நமக்கோ ஒரே ஒரு தேவன் உள்ளார். அவர் நமது பிதாவே. எல்லாம் அவரிலிருந்தே வந்தன. நாம் அவருக்காக வாழ்கிறோம். ஒரே ஒரு கர்த்தரே உண்டு. அவர் இயேசு கிறிஸ்து ஆவார். எல்லாப் பொருள்களும் இயேசுவின் மூலமாக உண்டாக்கப்பட்டன. நாம் அவர் மூலமாகவே உயிரைப் பெறுகிறோம். ஆனால் எல்லோரும் இதனை அறியார். விக்கிரக வழிபாட்டுக்குப் பழகிப்போன சிலர் இருக்கிறார்கள். எனவே இறைச்சி உண்ணும்போது அது விக்கிரகத்துக்குரியது என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகிறது. இந்த இறைச்சியைச் சாப்பிடுவது சரியா என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அதனைச் சாப்பிடும்போது அவர்கள் குற்றமனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இறைச்சியுண்பது தேவனுக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லாது. இறைச்சியுண்ணாமையும் தேவனுக்குக் குறைவான மகிழ்ச்சியைத் தருபவர்களாக நம்மை ஆக்காது. ஆனால், உங்கள் சுதந்திரத்தைக் குறித்துக் கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிமையற்ற மக்களை உங்கள் சுதந்திரம் பாவத்தில் விழக் காரணமாக இருக்கும். உங்களுக்குப் புரிந்துகொள்ளும் திறமை இருக்கிறது. எனவே விக்கிரகங்களுக்குரிய கோயிலில் உண்பதை நீங்கள் இயல்பானதாகக் கருதலாம். ஆனால் விசுவாசம் குறைவுள்ள மனிதன் உங்களை அங்கு பார்க்கக் கூடும். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்பதற்கு அவன் முற்பட இது வழி வகுக்கும். ஆனால், அது சரியானதல்ல என்றும் அவன் நினைப்பான். உங்கள் அறிவினால் பலவீனமான இந்தச் சகோதரன் அழிக்கப்படுவான். ஆனால் இந்தச் சகோதரனுக்காகவும் இயேசு மரித்தார்.
1 கொரிந்தியர் 8:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும். ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை. தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேகக் கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது. போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை. ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள். எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா? பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.