1 கொரிந்தியர் 8
8
8 அதிகாரம்
1விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
2ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.
3தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.
4விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
5வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேகக் கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,
6பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
7ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.
8போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.
9ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.
10எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?
11பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
12இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.
13ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
1 கொரிந்தியர் 8: TAOVBSI
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil O.V. Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
Copyright © 2017 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.