1 சாமுயேல் 25:1-35

1 சாமுயேல் 25:1-35 TCV

சாமுயேல் மரணமடைந்தபோது முழு இஸ்ரயேலரும் ஒன்றுசேர்ந்து அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். அவர்கள் அவனை ராமாவிலுள்ள அவனுடைய வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள். பின்பு தாவீது அவ்விடமிருந்து புறப்பட்டு பாரான் பாலைவனத்துக்குப் போனான். அப்போது கர்மேலில் சொத்துக்களுள்ள செல்வந்தனான ஒரு மனிதன் மாகோனில் இருந்தான். ஆயிரம் வெள்ளாடுகளும், மூவாயிரம் செம்மறியாடுகளும் அவனுக்கு இருந்தன. அப்பொழுது அவன் கர்மேலில் தன் செம்மறியாடுகளை மயிர் கத்தரித்துக் கொண்டிருந்தான். அவன் பெயர் நாபால். அவன் மனைவியின் பெயர் அபிகாயில். அவள் மிகவும் அழகுள்ளவளும், புத்திக் கூர்மையுள்ளவளுமாய் இருந்தாள். ஆனால் காலேபியனான அவள் கணவனோ, முரடனும் தன் செயல்களில் கீழ்த்தரமானவனுமாய் இருந்தான். தாவீது பாலைவனத்தில் ஒளித்திருந்தபோது நாபால் தன் செம்மறியாடுகளை மயிர் கத்தரிப்பதற்கு வந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டான். அப்பொழுது தாவீது பத்து வாலிபரை அழைத்து அவர்களிடம், “நீங்கள் கர்மேலுக்குச் சென்று என் பெயரால் நாபாலை வாழ்த்துங்கள். நீங்கள் அவனை, ‘நீர் நீடித்து வாழ்வீராக. உமக்கும் உமது குடும்பத்துக்கும் நல்வாழ்வு உண்டாவதாக. உமக்குரிய அனைத்திற்கும் நல்வாழ்வு உண்டாவதாக’ என்று வாழ்த்துங்கள். “ ‘அதன்பின் இது ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் காலம் என்று கேள்விப்படுகிறேன். உம்முடைய ஆட்டு மேய்ப்பர்கள் எங்களுடன் இருந்தபோதும், நாங்கள் அவர்களைத் துன்புறுத்தவில்லை. கர்மேலில் அவர்கள் இருந்த காலமுழுதும் அவர்களுக்குரிய அவர்களின் ஆடுகளில் ஒன்றேனும் காணாமல் போகவுமில்லை. இதைப்பற்றி உம்முடைய பணியாட்களிடம் கேளும். அவர்கள் உமக்குச் சொல்வார்கள். ஆகவே எனது வாலிபர்களுக்குத் தயவுகாட்டும். நாங்கள் ஒரு சந்தோஷமான விழாக்காலத்தில் வந்திருக்கிறோம். உம்முடைய அடியாருக்கும் உம்முடைய மகனாகிய தாவீதுக்கும் கொடுக்கக்கூடிய எதையாவது கொடும் என்று தயவாகக் கேட்கிறேன்’ என்று சொல்லுங்கள்” என்று சொல்லியனுப்பினான். அவ்வாறே தாவீதின் வாலிபர் அவ்விடத்திற்கு வந்துசேர்ந்து நாபாலிடம் தாவீதின் செய்தியைச் சொன்னார்கள். பின் அவன் பதிலுக்காகக் காத்திருந்தார்கள். நாபாலோ தாவீதின் பணியாட்களிடம், “இந்தத் தாவீது யார்? ஈசாயின் மகன் யார்? இந்நாட்களில் பல வேலையாட்கள் தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிறார்கள். என் அப்பத்தையும் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் சமையலையும், யாரும் அறியாத இடத்திலிருந்து வந்த மனிதருக்கு நான் ஏன் கொடுக்கவேண்டும்?” என்று கேட்டான். எனவே தாவீதின் மனிதரான அந்த வாலிபர் தாங்கள் வந்த வழியே மறுபடியும் திரும்பிப் போனார்கள். அவர்கள் போய் நாபால் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தாவீதுக்குச் சொன்னார்கள். அப்பொழுது தாவீது தன் மனிதரிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள்” என்றான். அவ்வாறே அவர்களும் வாளை எடுத்துக் கட்டிக்கொண்டார்கள். தாவீதும் தன் வாளை எடுத்துக்கொண்டான். ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுடன் சென்றார்கள். இருநூறுபேர் உணவுப் பொருட்களுடன் தங்கியிருந்தார்கள். அதேவேளை நாபாலின் பணியாட்களில் ஒருவன் நாபாலின் மனைவி அபிகாயிலிடம் போய், “நமது தலைவனை வாழ்த்தி உதவிபெற்று வரும்படி தாவீது பாலைவனத்திலிருந்து தூதுவரை அனுப்பினான். ஆனாலும் அவரோ வந்தவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். இந்த மனிதர் எங்களோடு மிக நன்றாய் பழகினார்கள். எங்களைத் துன்புறுத்தவில்லை. நாங்கள் வயல்வெளியில் அவர்களுக்கு அருகே இருந்த காலம் முழுவதும் எங்களுக்குரிய ஒன்றும் காணாமல் போகவுமில்லை. நாங்கள் அவர்களருகே செம்மறியாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த காலமெல்லாம், இரவும் பகலும் அவர்கள் எங்களைச் சுற்றி மதில்போல் இருந்தார்கள். இப்பொழுது யோசித்து நீங்கள் என்ன செய்யலாம் என்று பாருங்கள். ஏனெனில் எங்கள் தலைவனுக்கும், அவர் முழுக் குடும்பத்துக்கும் மேலாகவும் பேராபத்து வந்திருக்கிறது. எங்கள் தலைவனோ யாரும் பேசமுடியாத அளவுக்கு கொடுமையான மனிதனாய் இருக்கிறார்” என்றான். உடனே அபிகாயில் தாமதிக்கவில்லை; அவள் இருநூறு அப்பங்களையும், இரண்டு தோல் குடுவைகளில் திராட்சை இரசத்தையும், தோல் உரித்த ஐந்து செம்மறியாடுகளையும், ஐந்துபடி அளவு வறுத்த தானியத்தையும், நூறு திராட்சை அடைகளையும், இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து அவற்றைக் கழுதைகள்மேல் ஏற்றினாள். அவள் தன் பணியாட்களிடம், “நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள். நான் உங்கள் பின்னே வருகிறேன்” என்றாள். ஆனாலும் தன் கணவன் நாபாலுக்கு அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இவ்வாறு அவள் கழுதைமேல் ஏறி மலையின் கணவாய்க்கு வந்தபோது, தாவீதும், அவன் ஆட்களும் அவளை நோக்கி இறங்கிவந்தார்கள். அவள் அவர்களைச் சந்தித்தாள். தாவீது தன் மனிதரிடம், “இந்த பாலைவனத்திலே இவனுடைய உடமைகளில் ஒன்றேனும் தொலைந்துபோகாமல் அவற்றை நான் பாதுகாத்தது வீணாயிற்று. அவனோ எனக்கு நன்மைக்குப் பதிலாகத் தீமையே செய்திருக்கிறான்” என்று அப்பொழுதுதான் சொல்லியிருந்தான். “அவனுக்குச் சொந்தமான எல்லா ஆண்களிலும் ஒருவனையாவது பொழுது விடியும் முன் உயிரோடு விட்டேனேயானால், இறைவன் தாவீதை எவ்வளவு கடுமையாகவும் தண்டிப்பாராக” என்றும் சொல்லியிருந்தான். அபிகாயில் தாவீதைக் கண்டதும் தனது கழுதையை விட்டு விரைவாக இறங்கி தாவீதுக்கு முன்னால் தரையை நோக்கிக் குனிந்து வணங்கினாள். அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து அவனிடம், “ஐயா இந்தக் குற்றம் என்மேல் மட்டுமே சுமரட்டும். உம்முடைய அடியவளை உம்மிடம் பேசவிடும். உமது அடியவள் சொல்ல இருப்பதைக் கேளும். என் எஜமானே! அந்தக் கொடுமையான மனிதன் நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம். அவர் தன் பெயருக்கேற்றபடி மூடராயிருக்கிறார். மூடத்தனமே அவரோடு இருக்கின்றது. உமது அடியாளாகிய நானோ நீர் அனுப்பிய பணியாட்களைச் சந்திக்கவில்லை. இப்பொழுது, என் ஆண்டவனே, நீர் இரத்தத்தைச் சிந்தாமலும், உம்முடைய கையினால் பழிவாங்காமலும் யெகோவா உம்மைத் தடுத்திருக்கிறார். யெகோவா இருப்பது நிச்சயமெனில், உம் பகைவரும், உமக்குத் தீங்குசெய்ய நோக்கம் கொண்டிருக்கிறவர்களும் நாபாலைப்போல் இருப்பார்களாக. உமது அடியவள் எனது எஜமானுக்குக் கொண்டுவந்திருக்கும் அன்பளிப்பு உம்மைப் பின்பற்றும் மனிதருக்குக் கொடுக்கப்படட்டும். “தயவுசெய்து அடியாளுடைய பிழையை மன்னியும். எனது எஜமான் யெகோவாவின் யுத்தத்தை நடத்துவதனால் யெகோவா நிச்சயமாக எனது எஜமானுக்கு நிலைத்து நிற்கும் சந்ததியைக் கொடுப்பார். உமது வாழ்நாள் முழுவதும் உம்மேல் ஒரு பிழையும் காணப்படாதிருக்கட்டும். ஒருவன் உமது உயிரை வாங்குவதற்கு உம்மைத் தொடர்ந்தபோதிலும், என் ஆண்டவனுடைய உயிர் உமது இறைவனாகிய யெகோவாவினால் உயிருள்ளோர் தொகையில் பத்திரப்படுத்தப்படும். ஆனாலும் உம்முடைய பகைவரின் உயிர்களையோ கவணில் வைத்து வீசப்படும் கல்லைப்போல் அவர் வீசி விடுவார். யெகோவா உம்மைக் குறித்து வாக்குப்பண்ணிய எல்லா நன்மைகளையும் செய்துமுடித்து, உம்மை இஸ்ரயேலரின் தலைவனாக நியமிப்பார். அப்பொழுது தேவையில்லாத இரத்தம் சிந்திய குற்றமோ, உமக்காகப் பழிவாங்கிய குற்றமோ பாரமாக ஆண்டவனுடைய மனசாட்சியை அழுத்தாதிருக்கட்டும். இப்படியாக யெகோவா என் ஆண்டவனுக்கு வெற்றியைக் கொடுக்கும்போது உம்முடைய அடியாளையும் நினைத்துக்கொள்ளும்” என்றாள். அப்பொழுது தாவீது அபிகாயிலிடம், “இன்று என்னைச் சந்திக்கும்படி உன்னை அனுப்பிய இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. உனது நல்ல நிதானிப்புக்காகவும், நான் இரத்தம் சிந்தாமலும், என் சொந்த கையால் பழிவாங்காமலும் இன்று என்னை நீ தடுத்ததற்கு நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக. நீ என்னைச் சந்திக்க விரைந்து வராதிருந்தால், உனக்குத் தீங்கு செய்யாதபடி என்னைத் தடுத்த இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இருப்பது நிச்சயமெனில், நாளை விடியுமுன் நாபாலின் மனிதரில் ஒரு ஆணும் உயிரோடிருந்திருக்க மாட்டான் என்பதும் நிச்சயம்” என்றான். அபிகாயில் கொண்டு வந்தவற்றையெல்லாம் தாவீது ஏற்றுக்கொண்டு அவளிடம், “நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப்போ. நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டேன். உனது வேண்டுகோளின்படியே செய்வேன்” என்றான்.