1 சாமுவேல் 25:1-35

1 சாமுவேல் 25:1-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான். மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனுஷன் மகாபாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான். அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பேர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான். நாபால் தன் ஆடுகளை மயிர் கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது, தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து, அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி, இப்பொழுது ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற் போனதும் இல்லை. உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான். தாவீதின் வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் நாமத்தினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள். நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு. நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல்பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான். தாவீதின் வாலிபர் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின்சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்து விட்டார்கள். அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்கத் தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார். அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். இப்பொழுது நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான். அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும் இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல்பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்துபடி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி, தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை. அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், இதோ, தாவீதும் அவன் மனுஷரும் அவளுக்கு எதிராக இறங்கி வந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள். தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமை செய்தான். அவனுக்கு உண்டான எல்லாவற்றிலும் சுவரில் நீர்விடும் ஒரு நாயை முதலாய் பொழுதுவிடியுமட்டும் நான் உயிரோடே வைத்தால், தேவன் தாவீதின் சத்துருக்களுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று சொல்லியிருந்தான். அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து, அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும் பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவி கேட்கப் பேசவேண்டும். என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பேர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பேர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை. இப்பொழுதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள். இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக. உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக. உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போகும். கர்த்தர் உம்மைக்குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நேமிக்கும்போது, நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மனஇடறலும் இராது; கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள். அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக. நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவள் தனக்குக் கொண்டு வந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.

1 சாமுவேல் 25:1-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சாமுயேல் மரணமடைந்தபோது முழு இஸ்ரயேலரும் ஒன்றுசேர்ந்து அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். அவர்கள் அவனை ராமாவிலுள்ள அவனுடைய வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள். பின்பு தாவீது அவ்விடமிருந்து புறப்பட்டு பாரான் பாலைவனத்துக்குப் போனான். அப்போது கர்மேலில் சொத்துக்களுள்ள செல்வந்தனான ஒரு மனிதன் மாகோனில் இருந்தான். ஆயிரம் வெள்ளாடுகளும், மூவாயிரம் செம்மறியாடுகளும் அவனுக்கு இருந்தன. அப்பொழுது அவன் கர்மேலில் தன் செம்மறியாடுகளை மயிர் கத்தரித்துக் கொண்டிருந்தான். அவன் பெயர் நாபால். அவன் மனைவியின் பெயர் அபிகாயில். அவள் மிகவும் அழகுள்ளவளும், புத்திக் கூர்மையுள்ளவளுமாய் இருந்தாள். ஆனால் காலேபியனான அவள் கணவனோ, முரடனும் தன் செயல்களில் கீழ்த்தரமானவனுமாய் இருந்தான். தாவீது பாலைவனத்தில் ஒளித்திருந்தபோது நாபால் தன் செம்மறியாடுகளை மயிர் கத்தரிப்பதற்கு வந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டான். அப்பொழுது தாவீது பத்து வாலிபரை அழைத்து அவர்களிடம், “நீங்கள் கர்மேலுக்குச் சென்று என் பெயரால் நாபாலை வாழ்த்துங்கள். நீங்கள் அவனை, ‘நீர் நீடித்து வாழ்வீராக. உமக்கும் உமது குடும்பத்துக்கும் நல்வாழ்வு உண்டாவதாக. உமக்குரிய அனைத்திற்கும் நல்வாழ்வு உண்டாவதாக’ என்று வாழ்த்துங்கள். “ ‘அதன்பின் இது ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் காலம் என்று கேள்விப்படுகிறேன். உம்முடைய ஆட்டு மேய்ப்பர்கள் எங்களுடன் இருந்தபோதும், நாங்கள் அவர்களைத் துன்புறுத்தவில்லை. கர்மேலில் அவர்கள் இருந்த காலமுழுதும் அவர்களுக்குரிய அவர்களின் ஆடுகளில் ஒன்றேனும் காணாமல் போகவுமில்லை. இதைப்பற்றி உம்முடைய பணியாட்களிடம் கேளும். அவர்கள் உமக்குச் சொல்வார்கள். ஆகவே எனது வாலிபர்களுக்குத் தயவுகாட்டும். நாங்கள் ஒரு சந்தோஷமான விழாக்காலத்தில் வந்திருக்கிறோம். உம்முடைய அடியாருக்கும் உம்முடைய மகனாகிய தாவீதுக்கும் கொடுக்கக்கூடிய எதையாவது கொடும் என்று தயவாகக் கேட்கிறேன்’ என்று சொல்லுங்கள்” என்று சொல்லியனுப்பினான். அவ்வாறே தாவீதின் வாலிபர் அவ்விடத்திற்கு வந்துசேர்ந்து நாபாலிடம் தாவீதின் செய்தியைச் சொன்னார்கள். பின் அவன் பதிலுக்காகக் காத்திருந்தார்கள். நாபாலோ தாவீதின் பணியாட்களிடம், “இந்தத் தாவீது யார்? ஈசாயின் மகன் யார்? இந்நாட்களில் பல வேலையாட்கள் தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிறார்கள். என் அப்பத்தையும் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் சமையலையும், யாரும் அறியாத இடத்திலிருந்து வந்த மனிதருக்கு நான் ஏன் கொடுக்கவேண்டும்?” என்று கேட்டான். எனவே தாவீதின் மனிதரான அந்த வாலிபர் தாங்கள் வந்த வழியே மறுபடியும் திரும்பிப் போனார்கள். அவர்கள் போய் நாபால் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தாவீதுக்குச் சொன்னார்கள். அப்பொழுது தாவீது தன் மனிதரிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள்” என்றான். அவ்வாறே அவர்களும் வாளை எடுத்துக் கட்டிக்கொண்டார்கள். தாவீதும் தன் வாளை எடுத்துக்கொண்டான். ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுடன் சென்றார்கள். இருநூறுபேர் உணவுப் பொருட்களுடன் தங்கியிருந்தார்கள். அதேவேளை நாபாலின் பணியாட்களில் ஒருவன் நாபாலின் மனைவி அபிகாயிலிடம் போய், “நமது தலைவனை வாழ்த்தி உதவிபெற்று வரும்படி தாவீது பாலைவனத்திலிருந்து தூதுவரை அனுப்பினான். ஆனாலும் அவரோ வந்தவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். இந்த மனிதர் எங்களோடு மிக நன்றாய் பழகினார்கள். எங்களைத் துன்புறுத்தவில்லை. நாங்கள் வயல்வெளியில் அவர்களுக்கு அருகே இருந்த காலம் முழுவதும் எங்களுக்குரிய ஒன்றும் காணாமல் போகவுமில்லை. நாங்கள் அவர்களருகே செம்மறியாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த காலமெல்லாம், இரவும் பகலும் அவர்கள் எங்களைச் சுற்றி மதில்போல் இருந்தார்கள். இப்பொழுது யோசித்து நீங்கள் என்ன செய்யலாம் என்று பாருங்கள். ஏனெனில் எங்கள் தலைவனுக்கும், அவர் முழுக் குடும்பத்துக்கும் மேலாகவும் பேராபத்து வந்திருக்கிறது. எங்கள் தலைவனோ யாரும் பேசமுடியாத அளவுக்கு கொடுமையான மனிதனாய் இருக்கிறார்” என்றான். உடனே அபிகாயில் தாமதிக்கவில்லை; அவள் இருநூறு அப்பங்களையும், இரண்டு தோல் குடுவைகளில் திராட்சை இரசத்தையும், தோல் உரித்த ஐந்து செம்மறியாடுகளையும், ஐந்துபடி அளவு வறுத்த தானியத்தையும், நூறு திராட்சை அடைகளையும், இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து அவற்றைக் கழுதைகள்மேல் ஏற்றினாள். அவள் தன் பணியாட்களிடம், “நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள். நான் உங்கள் பின்னே வருகிறேன்” என்றாள். ஆனாலும் தன் கணவன் நாபாலுக்கு அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இவ்வாறு அவள் கழுதைமேல் ஏறி மலையின் கணவாய்க்கு வந்தபோது, தாவீதும், அவன் ஆட்களும் அவளை நோக்கி இறங்கிவந்தார்கள். அவள் அவர்களைச் சந்தித்தாள். தாவீது தன் மனிதரிடம், “இந்த பாலைவனத்திலே இவனுடைய உடமைகளில் ஒன்றேனும் தொலைந்துபோகாமல் அவற்றை நான் பாதுகாத்தது வீணாயிற்று. அவனோ எனக்கு நன்மைக்குப் பதிலாகத் தீமையே செய்திருக்கிறான்” என்று அப்பொழுதுதான் சொல்லியிருந்தான். “அவனுக்குச் சொந்தமான எல்லா ஆண்களிலும் ஒருவனையாவது பொழுது விடியும் முன் உயிரோடு விட்டேனேயானால், இறைவன் தாவீதை எவ்வளவு கடுமையாகவும் தண்டிப்பாராக” என்றும் சொல்லியிருந்தான். அபிகாயில் தாவீதைக் கண்டதும் தனது கழுதையை விட்டு விரைவாக இறங்கி தாவீதுக்கு முன்னால் தரையை நோக்கிக் குனிந்து வணங்கினாள். அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து அவனிடம், “ஐயா இந்தக் குற்றம் என்மேல் மட்டுமே சுமரட்டும். உம்முடைய அடியவளை உம்மிடம் பேசவிடும். உமது அடியவள் சொல்ல இருப்பதைக் கேளும். என் எஜமானே! அந்தக் கொடுமையான மனிதன் நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம். அவர் தன் பெயருக்கேற்றபடி மூடராயிருக்கிறார். மூடத்தனமே அவரோடு இருக்கின்றது. உமது அடியாளாகிய நானோ நீர் அனுப்பிய பணியாட்களைச் சந்திக்கவில்லை. இப்பொழுது, என் ஆண்டவனே, நீர் இரத்தத்தைச் சிந்தாமலும், உம்முடைய கையினால் பழிவாங்காமலும் யெகோவா உம்மைத் தடுத்திருக்கிறார். யெகோவா இருப்பது நிச்சயமெனில், உம் பகைவரும், உமக்குத் தீங்குசெய்ய நோக்கம் கொண்டிருக்கிறவர்களும் நாபாலைப்போல் இருப்பார்களாக. உமது அடியவள் எனது எஜமானுக்குக் கொண்டுவந்திருக்கும் அன்பளிப்பு உம்மைப் பின்பற்றும் மனிதருக்குக் கொடுக்கப்படட்டும். “தயவுசெய்து அடியாளுடைய பிழையை மன்னியும். எனது எஜமான் யெகோவாவின் யுத்தத்தை நடத்துவதனால் யெகோவா நிச்சயமாக எனது எஜமானுக்கு நிலைத்து நிற்கும் சந்ததியைக் கொடுப்பார். உமது வாழ்நாள் முழுவதும் உம்மேல் ஒரு பிழையும் காணப்படாதிருக்கட்டும். ஒருவன் உமது உயிரை வாங்குவதற்கு உம்மைத் தொடர்ந்தபோதிலும், என் ஆண்டவனுடைய உயிர் உமது இறைவனாகிய யெகோவாவினால் உயிருள்ளோர் தொகையில் பத்திரப்படுத்தப்படும். ஆனாலும் உம்முடைய பகைவரின் உயிர்களையோ கவணில் வைத்து வீசப்படும் கல்லைப்போல் அவர் வீசி விடுவார். யெகோவா உம்மைக் குறித்து வாக்குப்பண்ணிய எல்லா நன்மைகளையும் செய்துமுடித்து, உம்மை இஸ்ரயேலரின் தலைவனாக நியமிப்பார். அப்பொழுது தேவையில்லாத இரத்தம் சிந்திய குற்றமோ, உமக்காகப் பழிவாங்கிய குற்றமோ பாரமாக ஆண்டவனுடைய மனசாட்சியை அழுத்தாதிருக்கட்டும். இப்படியாக யெகோவா என் ஆண்டவனுக்கு வெற்றியைக் கொடுக்கும்போது உம்முடைய அடியாளையும் நினைத்துக்கொள்ளும்” என்றாள். அப்பொழுது தாவீது அபிகாயிலிடம், “இன்று என்னைச் சந்திக்கும்படி உன்னை அனுப்பிய இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. உனது நல்ல நிதானிப்புக்காகவும், நான் இரத்தம் சிந்தாமலும், என் சொந்த கையால் பழிவாங்காமலும் இன்று என்னை நீ தடுத்ததற்கு நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக. நீ என்னைச் சந்திக்க விரைந்து வராதிருந்தால், உனக்குத் தீங்கு செய்யாதபடி என்னைத் தடுத்த இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இருப்பது நிச்சயமெனில், நாளை விடியுமுன் நாபாலின் மனிதரில் ஒரு ஆணும் உயிரோடிருந்திருக்க மாட்டான் என்பதும் நிச்சயம்” என்றான். அபிகாயில் கொண்டு வந்தவற்றையெல்லாம் தாவீது ஏற்றுக்கொண்டு அவளிடம், “நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப்போ. நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டேன். உனது வேண்டுகோளின்படியே செய்வேன்” என்றான்.

1 சாமுவேல் 25:1-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சாமுவேல் இறந்தான். இஸ்ரவேலர்கள் எல்லோரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வீட்டில் அவனை அடக்கம்செய்தார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப் போனான். மாகோனிலே ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனிதன் பெரும் செல்வந்தனாக இருந்தான்; அவனுக்கு 3,000 ஆடும், 1,000 வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன்னுடைய ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான். அந்த மனிதனுக்கு நாபால் என்றும், அவனுடைய மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த பெண் மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தக் கணவனோ முரடனும், தீயவனும், கபடுள்ளவனுமாக இருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான். நாபால் தன்னுடைய ஆடுகளை மயிர் கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது, தாவீது பத்து வாலிபர்களை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என்னுடைய பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து, அவனை பார்த்து: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி, இப்பொழுது ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடு இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமல் போனதும் இல்லை. உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபர்களுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கையில் உள்ளதை உம்முடைய ஊழியக்காரர்களுக்கும், உம்முடைய மகனான தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான். தாவீதின் வாலிபர்கள் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் பெயரினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்பு ஒன்றும் பேசாதிருந்தார்கள். நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பதிலாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு. நான் என்னுடைய அப்பத்தையும், என்னுடைய தண்ணீரையும், என்னுடைய ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல்செய்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனிதருக்கு கொடுப்பேனோ என்றான். தாவீதின் வாலிபர்கள் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது தாவீது தன்னுடைய மனிதர்களை பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன்னுடைய பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய 400 பேர் தாவீதுக்குப் பின்சென்று புறப்பட்டுப்போனார்கள்; 200 பேர் பொருட்கள் அருகில் இருந்து விட்டார்கள். அப்பொழுது வேலைக்காரர்களில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலைப் பார்த்து: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தியை விசாரிக்க தாவீது வனாந்திரத்திலிருந்து தூதுவர்களை அனுப்பினான்; அவர் அவர்கள்மேல் கோபம்கொண்டார். அந்த மனிதர்களோ எங்களுக்கு மிகவும் நல்லவர்களாக இருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமல் போனதுமில்லை. நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாக இருந்தார்கள். இப்பொழுது நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார்கள் எல்லோர்மேலும், நிச்சயமாய் ஒரு தீங்கு வருகிறதாக இருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடி, மதிப்பற்ற மகனாக இருக்கிறார் என்றான். அப்பொழுது அபிகாயில் வேகமாக 200 அப்பங்களையும் இரண்டு தோல்பை திராட்சை ரசத்தையும், சமையல்செய்யப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்துபடி வறுத்த பயிற்றையும், வற்றலாக்கப்பட்ட 100 திராட்சை குலைகளையும், வற்றலான 200 அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி, தன்னுடைய வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன்னுடைய கணவனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை. அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவரும்போது, இதோ, தாவீதும் அவனுடைய மனிதர்களும் அவளுக்கு எதிராக இறங்கி வந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள். தாவீது தன்னுடைய மக்களைப் பார்த்து: அவனுக்கு வனாந்திரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமல்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமை செய்தான். அவனுக்கு உண்டான எல்லாவற்றிலும் சுவரில் நீர்விடும் ஒரு நாய் முதற்கொண்டு பொழுதுவிடியும்வரை நான் உயிரோடே வைத்தால், தேவன் தாவீதின் எதிரிகளுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று சொல்லியிருந்தான். அபிகாயில் தாவீதைப் பார்க்கும்போது, விரைந்து கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து, அவனுடைய பாதத்திலே விழுந்து: என்னுடைய ஆண்டவனே, இந்தப்பழி என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்படி உம்முடைய அடியாள் உமது செவி கேட்கப் பேசவேண்டும். என்னுடைய ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்த மதிப்பற்ற மனிதனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவனுடைய பேர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவனுடைய பெயர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என்னுடைய ஆண்டவன் அனுப்பின வாலிபர்களைக் காணவில்லை. இப்பொழுதும் என்னுடைய ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், யெகோவா உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் யெகோவாடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய எதிரிகளும், என்னுடைய ஆண்டவனுக்கு விரோதமாகத் தீங்கு தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகட்டும். இப்போதும் உமது அடியாள் என்னுடைய ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என்னுடைய ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபர்களுக்கு கொடுப்பீராக. உமது அடியாளின் மீறுதலை மன்னியும், யெகோவா என்னுடைய ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என்னுடைய ஆண்டவன் யெகோவாவுடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு தீங்கும் உம்மிலே காணப்படாமலிருப்பதாக. உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வழிதேடவும், ஒரு மனிதன் எழுந்தாலும் என்னுடைய ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய யெகோவாவின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய எதிரிகளின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்படும். யெகோவா உம்மைக்குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என்னுடைய ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நியமிக்கும்போது, நீர் காரணமில்லாமல் இரத்தம் சிந்தாமலும், என்னுடைய ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என்னுடைய ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இருக்காது, மனவருத்தமும் இருக்காது; யெகோவா என்னுடைய ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள். அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம். நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடியும், என்னுடைய கையே பழிவாங்காதபடியும், நீ இன்றையதினம் எனக்குத் தடைசெய்ததால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக. நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியும் வரை நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குத் தீங்குசெய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் ஜீவனைக்கொண்டு உண்மையாய்ச் சொல்கிறேன் என்று சொல்லி, அவள் தனக்குக் கொண்டு வந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடு உன்னுடைய வீட்டுக்குப் போ; இதோ, நான் உன்னுடைய சொல்லைக்கேட்டு, உன்னுடைய முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.

1 சாமுவேல் 25:1-35 பரிசுத்த பைபிள் (TAERV)

சாமுவேல் மரித்தான். அவனது மரணத்திற்காக அனைத்து இஸ்ரவேலர்களும் கூடித் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டனர். ராமாவில் உள்ள வீட்டில் அவனை அடக்கம் செய்தனர். பின் பாரான் பாலைவனத்துக்கு தாவீது போனான். மாகோனில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனிடம் 3,000 ஆடுகளும் 1,000 வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் இருந்துக் கொண்டு தன் வியாபாரத்தைக் கவனித்து வந்தான். அவன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க அங்கே போய் வருவான். இவனது பெயர் நாபால். இவன் காலேபின் குடும்பத்தவன். இவனது மனைவி அபிகாயில் புத்திசாலித்தனமும் அழகும் கொண்டவள். ஆனால் நாபால் அற்பனாகவும் கொடூரமானவனாகவும் இருந்தான். பாலைவனத்தில் நாபால் தன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பதாக தாவீது அறிந்து கொண்டான். அவனோடு பேச, தாவீது 10 இளைஞர்களை அனுப்பினான். அவர்களிடம், “கர்மேலுக்குப் போங்கள், நாபாலைக் கண்டு எனக்காக வாழ்த்துச் சொல்லுங்கள்” என்றான். தாவீது நாபாலுக்கு இந்த செய்தியையும் சொல்லி அனுப்பினான், “நீயும் உனது குடும்பத்தாரும் நலமென்று நம்புகிறேன். உனக்குரிய அனைத்தும் நலமென்று நம்புகிறேன். நீ மயிர் கத்தரிப்பதாக அறிந்தேன். கொஞ்ச நேரம் உனது மேய்ப்பர்கள் எங்களோடு இருக்கையில், அவர்களுக்கு நாங்கள் தீங்கு செய்யவில்லை. அவர்கள் கர்மேலில் இருக்கும்வரை அவர்களிடமிருந்து எதையும் எடுக்கவில்லை. உன் வேலைக்காரரிடம் கேட்டுப்பார். அவர்கள் உண்மையைக் கூறுவார்கள். என் இளைஞரிடம் கருணையோடு இரு. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உன்னிடம் வந்திருக்கிறோம். உன்னால் முடிந்ததை இவர்களுக்குக் கொடு. இதை எனக்காகவும் உனது நண்பன் தாவீதிற்காகவும் செய்” என்றான். தாவீதின் ஆட்கள் நாபாலிடம் சென்றனர். தாவீதின் செய்தியைச் சொன்னார்கள். ஆனால் நாபால் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டான். அவன், “தாவீது யார்? இந்த ஈசாயின் குமாரன் யார்? இந்நாட்களில் பல அடிமைகள் தம் எஜமானர்களைவிட்டு ஓடிப்போகிறார்கள்! என்னிடம் அப்பமும் தண்ணீரும் உள்ளன. மயிர் கத்தரித்தவர்களுக்காக, நான் ஆட்டைக் கொன்று சமையல் செய்திருக்கிறேன். ஆனால், அதை எனக்கு முன்-பின் அறியாதவர்களுக்காக கொடுக்கமாட்டேன்!” என்றான். தாவீதின் இளைஞர் திரும்பி வந்து நாபால் சொன்னவற்றை சொன்னார்கள். அதற்கு தாவீது, “உங்கள் பட்டயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்!” என்றான். தாவீதும் அவனது ஆட்களும் தங்கள் பட்டயங்களை எடுத்தனர். அவனோடு 400 பேர் சென்றனர். மீதி 200 பேர் தங்கள் பொருட்களுக்கருகில் அங்கேயே தங்கினார்கள். நாபாலின் வேலைக்காரரில் ஒருவன் நாபாலின் மனைவியாகிய அபிகாயிலிடம் பேசி, “நமது எஜமானர் நாபாலைப் பாராட்டும்படி தாவீது தன் தூதுவர்களை அனுப்பினார். ஆனால் நாபால் அவர்களிடம் அற்பமாக நடந்துக்கொண்டான். அவர்கள் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். நாம் வயல்களில் ஊருக்கு வெளியே இருந்தோம். தாவீதின் ஆட்கள் எப்போதும் நம்மோடு தங்கி இருக்கையில் அவர்கள் நமக்கு தீமை செய்யவில்லை! நமக்குரியவற்றை ஒருபோதும் திருடவில்லை! இரவும் பகலும் தாவீதின் ஆட்கள் நம்மைக் காப்பாற்றினார்கள். நம்மைச் சுற்றிலும் அவர்கள் சுவர்களைப் போன்று காவலாக இருந்தார்கள். நாம் மந்தைகளை நடத்திச் செல்லும்போது உதவுவார்கள். இப்போது சிந்தித்துப் பார்த்து நாம் என்ன செய்யலாம் என்று முடிவு செய்யுங்கள். நாபால் தன் காரியங்களைப் பேசினது அறிவீனமாய் இருக்கிறது! இப்போது நமது எஜமானனுக்கும் அவனது வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது” என்றான். இதைக் கேட்டதும், அபிகாயில் அவசரமாக 200 அப்பத்துண்டுகளையும், 2 திராட்சைரசப்பைகளையும், 5 சமைத்த ஆடுகளையும், 5 படி வறுத்த பயிரையும், வற்றலான 100 திராட்சைக் குலைகளையும், வற்றலான 200 அத்திப்பழ அடைகளையும் எடுத்துக்கொண்டாள். அவற்றைக் கழுதையின் மேல் ஏற்றினாள். பின் அவள் தன் வேலைக்காரனிடம், “நீ போ. நான் உன்னை பின்தொடர்ந்து வருகிறேன்” என்றாள். ஆனால் அவளோ கணவரிடம் அதைச் சொல்லவில்லை. அவள் கழுதையின் மேல் சவாரி செய்து மலையின் அடுத்தப் பகுதிக்கு வந்தாள். எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த தாவீதையும் அவனது ஆட்களையும் சந்தித்தாள். தாவீது அபிகாயிலை சந்திக்கும் முன், “நான் இந்தப் பாலைவனத்தில் நாபாலின் சொத்துக்களைக் காப்பாற்றினேன். அவனது ஆடுகள் எதுவும் தவறிப்போகாது என நான் உறுதி செய்தேன். நான் பிரதிபலனை எதிர் பார்த்துச் செய்யவில்லை! அவனுக்கு நன்மைகளைச் செய்தேன். ஆனால் அவன் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டான். நாளைக் காலைக்குள் நாபாலின் குடும்பத்தில் உள்ள ஒருவரையாவது உயிரோடுவிட்டு வைத்தால் தேவன் என்னைத் தண்டிப்பார்” என்று சொல்லியிருந்தான். அந்த நேரத்தில் தான் அபிகாயில் வந்து சேர்ந்தாள். அவள் தாவீதைப் பார்த்ததும் கழுதையிலிருந்து இறங்கி தரையில் முகம்படும்படி குனிந்து தாவீதின் முன்பு நின்றாள். அபிகாயில் அவன் காலில் விழுந்து, “ஐயா, உங்களோடு பேச தயவுசெய்து என்னை அனுமதியுங்கள். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். நடந்தவற்றிற்கு என்னைப் பழிவாங்குங்கள். நீங்கள் அனுப்பினவர்களை நான் பார்க்கவில்லை. பயனற்றக் கொடிய மனிதனாகிய நாபாலிடம் கவனம் செலுத்தாதிருங்கள். அவன் தன் பெயரைப் போலவே அறிவீனனாக இருக்கிறான். அப்பாவி ஜனங்களைக் கொல்வதினின்றும் கர்த்தர் உங்களை விலக்கட்டும். கர்த்தருடைய ஜீவன் பேரிலும் உங்கள் ஜீவன் பேரிலும், உங்களுடைய பகைவர்களும், நாபாலைப் போன்று உமக்குத் தீமை செய்பவர்களும் அழிந்து போவார்கள் என நம்புகிறேன். இப்போது, உங்களுக்கு இந்த அன்பளிப்புகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை உங்கள் மனிதர்களுக்கு கொடுங்கள். நான் தவறு செய்தால் மன்னித்துவிடும். உங்கள் குடும்பத்தை கர்த்தர் பெலப்படுத்துவார் என்று எனக்குத் தெரியும். உங்கள் குடும்பத்தில் இருந்து பல ராஜாக்கள் புறப்படுவார்கள். நீங்கள் கர்த்தருக்காகப் போர் செய்து வருவதால் அவர் இதனை உமக்காகச் செய்வார்! நீங்கள் வாழ்கின்ற காலம் வரை ஜனங்கள் உங்களிடம் எந்தக் குறையும் காணமாட்டார்கள். எவராவது உங்களைக் கொல்வதற்குத் தொடர்ந்து வந்தால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார்! ஆனால் உங்கள் பகைவர்களை கர்த்தர் கவணில் உள்ள கல்லைப் போன்று தூர எறிவார்! உங்களுக்குப் பல நன்மைகளைச் செய்யப்போவதாக கர்த்தர் வாக்கு செய்துள்ளார். கர்த்தர் தமது வாக்கைக் காப்பாற்றுவார்! தேவன் உம்மை இஸ்ரவேலரின் தலைவராக்குவார். அப்பாவிகளைக் கொன்றப்பழி உங்களுக்கு வரக்கூடாது. நீங்கள் அந்த வலையில் விழக்கூடாது. கர்த்தர் உமக்கு வெற்றிகளைத் தரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றாள். தாவீது அபிகாயிலிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்று. என்னிடம் உன்னை அனுப்பியதற்காக தேவனைப் போற்று. உனது நல்ல தீர்ப்புக்காக தேவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும். இன்று அப்பாவிகளைக் கொன்றுப்போடாமல் என்னைக் காப்பாற்றினாய். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சத்தியமாகக் கூறுகிறேன். நீ இவ்வளவு விரைவாக வந்து என்னை சந்திக்காமல் இருந்தால் நாளை விடிவதற்குள் நாபாலின் குடும்பத்தில் ஒருவன் கூட உயிரோடு இருந்திருக்கமாட்டார்கள்” என்றான். பிறகு தாவீது, அபிகாயிலின் அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டான். அவளிடம், “வீட்டிற்குச் சமாதானமாகப் போ. உனது வேண்டுகோளை ஏற்று உன் விருப்பபடியே செய்வேன்” என்றான்.