1 சாமுயேல் 8:10-22

1 சாமுயேல் 8:10-22 TCV

அப்படியே தங்களுக்கு அரசன் வேண்டும் என்று கூறிய மக்களுக்கு சாமுயேல் யெகோவாவினுடைய வார்த்தைகளையெல்லாம் கூறினான். அவன் அவர்களிடம், “உங்களை ஆளப்போகும் அரசன் செய்யப்போவது இதுவே: உங்கள் மகன்களைத் தன் ரதப்படையிலும், குதிரைப்படையிலும் பணிசெய்யவும், அவனுடைய ரதத்திற்கு முன் ஓடவும் செய்வான். அவன் அவர்களில் சிலரை ஆயிரம்பேருக்குத் தளபதிகளாகவும், ஐம்பது பேருக்குத் தளபதிகளாகவும் நியமிப்பான். வேறு சிலரைத் தன் நிலங்களை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுவடை செய்கிறவர்களாகவும் நியமிப்பான். வேறுசிலரை யுத்த ஆயுதங்களையும், ரதங்களின் உபகரணங்களையும் செய்கிறவர்களாகவும் பணிபுரியும்படி நியமிப்பான். மேலும் உங்கள் மகள்களை நறுமணத்தைலம் தயாரிப்பவர்களாகவும், சமையற்காரிகளாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்வான். அவன் உங்களுக்குச் சொந்தமான வயல்களிலிருந்தும், திராட்சைத் தோட்டங்களிலிருந்தும், ஒலிவத் தோப்புகளிலிருந்தும் சிறந்தவற்றை உங்களிடத்தில் இருந்து எடுத்துக்கொள்வான். அவற்றைத் தன் பணியாட்களுக்குக் கொடுப்பான். உங்கள் தானியத்திலும், திராட்சைப்பழ அறுவடையிலும் பத்தில் ஒரு பங்கை எடுத்துத் தன் அலுவலர்களுக்கும், தன் பணியாட்களுக்கும் கொடுப்பான். அவன் உங்கள் வேலைக்காரர்களையும், வேலைக்காரிகளையும், மாட்டு மந்தைகளிலும், கழுதைகளிலும் சிறந்தவற்றையும் தன் சொந்த வேலைக்கு அமர்த்துவான். அவன் உங்களுடைய செம்மறியாட்டு மந்தைகளில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்வான். நீங்களும் அவனுக்கு அடிமைகளாவீர்கள். அந்த நாள் வருகிறபோது நீங்கள் தெரிந்துகொண்ட அரசனிடம் இருந்து விடுதலை பெறவேண்டும் என்றும் நீங்களே கதறுவீர்கள். ஆனால் அந்நாளில் உங்கள் கூப்பிடுதலுக்கு யெகோவா பதில் கொடுக்கமாட்டார்” என்றான். ஆனாலும் மக்கள் சாமுயேலின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க மறுத்து, அவர்கள்: “அப்படியல்ல, எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும். அப்பொழுது மற்ற நாடுகளில் இருப்பதுபோல, எங்களையும் வழிநடத்தி, எங்களுக்கு முன்சென்று எங்களுக்காக யுத்தம் செய்ய எங்களுக்கும் ஒரு அரசன் இருப்பான்” என்றார்கள். சாமுயேல் மக்கள் சொன்னவற்றையெல்லாம் கேட்டு, அவற்றை யெகோவாவுக்குத் தெரியப்படுத்தினான். அதற்கு யெகோவா சாமுயேலிடம், “நீ அவர்கள் சொன்னதைக் கேட்டு, அவர்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்து” என்றார். அப்பொழுது சாமுயேல், “அனைவரும் தங்கள் பட்டணங்களுக்கு போங்கள்” என்று இஸ்ரயேல் மக்களிடம் சொன்னான்.