1 சாமுவேல் 8:10-22

1 சாமுவேல் 8:10-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்படியே தங்களுக்கு அரசன் வேண்டும் என்று கூறிய மக்களுக்கு சாமுயேல் யெகோவாவினுடைய வார்த்தைகளையெல்லாம் கூறினான். அவன் அவர்களிடம், “உங்களை ஆளப்போகும் அரசன் செய்யப்போவது இதுவே: உங்கள் மகன்களைத் தன் ரதப்படையிலும், குதிரைப்படையிலும் பணிசெய்யவும், அவனுடைய ரதத்திற்கு முன் ஓடவும் செய்வான். அவன் அவர்களில் சிலரை ஆயிரம்பேருக்குத் தளபதிகளாகவும், ஐம்பது பேருக்குத் தளபதிகளாகவும் நியமிப்பான். வேறு சிலரைத் தன் நிலங்களை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுவடை செய்கிறவர்களாகவும் நியமிப்பான். வேறுசிலரை யுத்த ஆயுதங்களையும், ரதங்களின் உபகரணங்களையும் செய்கிறவர்களாகவும் பணிபுரியும்படி நியமிப்பான். மேலும் உங்கள் மகள்களை நறுமணத்தைலம் தயாரிப்பவர்களாகவும், சமையற்காரிகளாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்வான். அவன் உங்களுக்குச் சொந்தமான வயல்களிலிருந்தும், திராட்சைத் தோட்டங்களிலிருந்தும், ஒலிவத் தோப்புகளிலிருந்தும் சிறந்தவற்றை உங்களிடத்தில் இருந்து எடுத்துக்கொள்வான். அவற்றைத் தன் பணியாட்களுக்குக் கொடுப்பான். உங்கள் தானியத்திலும், திராட்சைப்பழ அறுவடையிலும் பத்தில் ஒரு பங்கை எடுத்துத் தன் அலுவலர்களுக்கும், தன் பணியாட்களுக்கும் கொடுப்பான். அவன் உங்கள் வேலைக்காரர்களையும், வேலைக்காரிகளையும், மாட்டு மந்தைகளிலும், கழுதைகளிலும் சிறந்தவற்றையும் தன் சொந்த வேலைக்கு அமர்த்துவான். அவன் உங்களுடைய செம்மறியாட்டு மந்தைகளில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்வான். நீங்களும் அவனுக்கு அடிமைகளாவீர்கள். அந்த நாள் வருகிறபோது நீங்கள் தெரிந்துகொண்ட அரசனிடம் இருந்து விடுதலை பெறவேண்டும் என்றும் நீங்களே கதறுவீர்கள். ஆனால் அந்நாளில் உங்கள் கூப்பிடுதலுக்கு யெகோவா பதில் கொடுக்கமாட்டார்” என்றான். ஆனாலும் மக்கள் சாமுயேலின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க மறுத்து, அவர்கள்: “அப்படியல்ல, எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும். அப்பொழுது மற்ற நாடுகளில் இருப்பதுபோல, எங்களையும் வழிநடத்தி, எங்களுக்கு முன்சென்று எங்களுக்காக யுத்தம் செய்ய எங்களுக்கும் ஒரு அரசன் இருப்பான்” என்றார்கள். சாமுயேல் மக்கள் சொன்னவற்றையெல்லாம் கேட்டு, அவற்றை யெகோவாவுக்குத் தெரியப்படுத்தினான். அதற்கு யெகோவா சாமுயேலிடம், “நீ அவர்கள் சொன்னதைக் கேட்டு, அவர்களுக்கு ஒரு அரசனை ஏற்படுத்து” என்றார். அப்பொழுது சாமுயேல், “அனைவரும் தங்கள் பட்டணங்களுக்கு போங்கள்” என்று இஸ்ரயேல் மக்களிடம் சொன்னான்.

1 சாமுவேல் 8:10-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட மக்களுக்குக் யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி: உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன்னுடைய ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் மகன்களை எடுத்து, தன்னுடைய ரதங்களை ஓட்டுபவர்களாகவும் தன்னுடைய குதிரை வீரர்களாகவும் வைத்துக்கொள்ளுவான். 1,000 பேருக்கும் 50 பேருக்கும் தலைவராகவும், தன்னுடைய நிலத்தை உழுகிறவர்களாகவும், தன்னுடைய விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன்னுடைய யுத்த ஆயுதங்களையும் தன்னுடைய ரதங்களின் உபகரணங்களையும் செய்கிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான். உங்கள் மகள்களைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல்செய்கிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான். உங்களுடைய வயல்களிலும், உங்களுடைய திராட்சை தோட்டங்களிலும், உங்களுடைய ஒலிவத்தோப்புக்களிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன்னுடைய ஊழியக்காரர்களுக்குக் கொடுப்பான். உங்களுடைய தானியத்திலும் உங்களுடைய திராட்சை பலனிலும் தசமபாகம் வாங்கி, தன்னுடைய அதிகாரிகளுக்கும் தன்னுடைய வேலைக்காரர்களுக்கும் கொடுப்பான். உங்களுடைய வேலைக்காரர்களையும், உங்களுடைய வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபர்களையும், உங்களுடைய கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான். உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள். நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினால் அந்த நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் யெகோவா அந்த நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான். மக்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனம் இல்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும். எல்லா மக்களையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள். சாமுவேல் மக்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் யெகோவாவிடத்தில் தெரியப்படுத்தினான். யெகோவா சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் மக்களைப் பார்த்து: அவரவர்கள் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.

1 சாமுவேல் 8:10-22 பரிசுத்த பைபிள் (TAERV)

அவர்கள் சாமுவேலிடம் ஒரு ராஜா வேண்டுமெனக் கேட்டிருந்தனர். எனவே சாமுவேல் கர்த்தர் சொன்னவற்றை அவர்களிடம் சொன்னான். அவன் சொன்னது. “உங்களை ஆள்வதற்கு ஒரு ராஜா வந்தால், அவன் செய்வது இதுதான்: அவன் உங்களின் குமாரர்களை எடுத்துக்கொள்வான். அவர்களைத் தனக்கு சேவை செய்யுமாறு பலவந்தப்படுத்துவான். அவர்களை வீரர்கள் ஆகுமாறு கட்டாயப்படுத்துவான். அவர்கள் அவனது தேரிலிருந்து சண்டையிட வேண்டும். அவனது படையில் குதிரை வீரர்களாக வேண்டும். அவர்கள் காவல்காரர்களாகி ராஜாவின் இரதத்துக்கு முன்னால் செல்லவேண்டும். “ராஜா உங்கள் பிள்ளைகளை வீரர்களாகுமாறு வற்புறுத்துவான். சிலர் 1,000 பேருக்கான அதிகாரிகளாகவும், இன்னும் சிலர் 50 பேருக்கான அதிகாரிகளாகவும் ஆவார்கள். “ராஜா உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி தம் வயல்களை உழவும், அறுவடை செய்யவும் ஈடுபடுத்துவான். அவன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி போருக்கான ஆயுதங்களைச் செய்யச் சொல்வான்! அவர்களது தேருக்கான பொருட்களைச் செய்யுமாறு பலவந்தப்படுத்துவான்! “ராஜா உங்கள் பெண் பிள்ளைகளை எடுத்துக்கொள்வான். தனக்கான வாசனைப் பொருட்களைச் செய்யச் சொல்வான். அவர்களில் சிலரை அவனுக்காக சமைக்கவும், பலகாரம் சுடவும் பலவந்தப்படுத்துவான். “ராஜா உங்கள் செழிப்பான வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எடுத்துக் கொள்வான். தன் அதிகாரிகளுக்கு அவற்றைக் கொடுப்பான். உங்கள் தானியங்களிலும் திராட்சையிலும் பத்தில் ஒரு பாகத்தை எடுத்துக் கொள்வான். அவற்றைத் தன் அதிகாரிகளுக்குக் கொடுப்பான். “ராஜா உங்களிலிருந்து வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், தேர்ந்த வாலிபர்களையும் எடுத்துக் கொள்வான். அவன் உங்கள் கழுதைகளையும் எடுத்து தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்வான். உங்கள் மந்தையில் பத்தில் ஒரு பாகத்தையும் எடுத்துக்கொள்வான். “நீங்களோ ராஜாக்களுக்கு அடிமையாவீர்கள், காலம் வரும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த ராஜாவால் கதறி அழுவீர்கள். அப்போது கர்த்தர் உங்களுக்குப் பதில் சொல்லமாட்டார்” என்றான். ஆனால் ஜனங்கள் சாமுவேலுக்கு செவி கொடுக்கவில்லை. அவர்கள், “இல்லை! எங்களை ஆள ஒரு ராஜா வேண்டுமென விரும்புகிறோம். அப்போது நாங்கள் மற்ற நாடுகளைப் போன்று இருப்போம், ராஜா எங்களை வழிநடத்துவான். எங்களோடு வந்து எங்களுக்காகப் போர் செய்வான்” என்றனர். சாமுவேல் ஜனங்கள் சொன்னதைக் கேட்டு கர்த்தரிடம் அவர்கள் வார்த்தைகளைத் திருப்பிச் சொன்னான். கர்த்தரோ, “அவர்கள் சொல்வதைக் கேள்! ஒரு ராஜாவை ஏற்படுத்து” என்றார். பிறகு சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களிடம், “நல்லது! நீங்கள் புதிய ராஜாவை அடைவீர்கள். இப்போது, நீங்கள் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றான்.

1 சாமுவேல் 8:10-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி: உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரை வீரராகவும் வைத்துக்கொள்ளுவான். ஆயிரம் பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான். உங்கள் குமாரத்திகளைப் பரிமளத்தைலம் செய்கிறவர்களாகவும், சமையல்பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான். உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புக்களிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான். உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான். உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான். உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள். நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான். ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும். சகல ஜாதிகளையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள். சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான். கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.