2 நாளாகமம் 11:1-10

2 நாளாகமம் 11:1-10 TCV

ரெகொபெயாம் எருசலேமை வந்தடைந்தபோது, யூதா, பென்யமீன் குடும்பத்தில் 1,80,000 போர்வீரரை ஒன்றுகூட்டினான். இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டு முழு அரசையும் தனது ஆட்சிக்குட்படுத்தவே அவர்கள் திரட்டப்பட்டனர். ஆனால் இறைவனின் மனிதன் செமாயாவுக்கு இந்த யெகோவாவின் வார்த்தை வந்தது: “நீ யூதாவின் அரசனான சாலொமோனின் மகன் ரெகொபெயாமுக்கும், யூதாவிலும் பென்யமீனிலுமுள்ள எல்லா இஸ்ரயேலருக்கும் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே: உங்கள் சக இஸ்ரயேலர்களுக்கு எதிராக யுத்தம்செய்யப் போகவேண்டாம். இது எனது செயல்; நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்கிறார்’ ” என்றான். எனவே அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு எதிராக அணிவகுத்துச் செல்வதைவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்து, யூதாவில் பாதுகாப்பிற்கென பட்டணங்களைக் கட்டினான். பெத்லெகேம், ஏத்தாம், தெக்கோவா, பெத்சூர், சோக்கோ, அதுல்லாம், காத், மரேஷா, சீப், அதோராயீம், லாகீசு, அசேக்கா, சோரா, ஆயலோன், எப்ரோன் ஆகிய அரணான பட்டணங்களை பென்யமீனிலும் யூதாவிலும் கட்டினான்.