2 நாளாகமம் 11:1-10

2 நாளாகமம் 11:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரரான லட்சத்து எண்பதினாயிரம்பேரைக் கூட்டினான். தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி. அவர் சொன்னது: நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ரவேலரையும் நோக்கி: நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான். அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும், பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும், காத்தும், மரேஷாவும், சீப்பும், அதோராயீமும், லாகீசும், அசேக்காவும், சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அரணிப்பான பட்டணங்களைக் கட்டி

2 நாளாகமம் 11:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ரெகொபெயாம் எருசலேமை வந்தடைந்தபோது, யூதா, பென்யமீன் குடும்பத்தில் 1,80,000 போர்வீரரை ஒன்றுகூட்டினான். இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டு முழு அரசையும் தனது ஆட்சிக்குட்படுத்தவே அவர்கள் திரட்டப்பட்டனர். ஆனால் இறைவனின் மனிதன் செமாயாவுக்கு இந்த யெகோவாவின் வார்த்தை வந்தது: “நீ யூதாவின் அரசனான சாலொமோனின் மகன் ரெகொபெயாமுக்கும், யூதாவிலும் பென்யமீனிலுமுள்ள எல்லா இஸ்ரயேலருக்கும் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே: உங்கள் சக இஸ்ரயேலர்களுக்கு எதிராக யுத்தம்செய்யப் போகவேண்டாம். இது எனது செயல்; நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்கிறார்’ ” என்றான். எனவே அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு எதிராக அணிவகுத்துச் செல்வதைவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்து, யூதாவில் பாதுகாப்பிற்கென பட்டணங்களைக் கட்டினான். பெத்லெகேம், ஏத்தாம், தெக்கோவா, பெத்சூர், சோக்கோ, அதுல்லாம், காத், மரேஷா, சீப், அதோராயீம், லாகீசு, அசேக்கா, சோரா, ஆயலோன், எப்ரோன் ஆகிய அரணான பட்டணங்களை பென்யமீனிலும் யூதாவிலும் கட்டினான்.

2 நாளாகமம் 11:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு போர்செய்யவும், ராஜ்ஜியத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட போர்வீரரான ஒருலட்சத்து எண்பதாயிரம்பேரைக் கூட்டினான். தேவனுடைய மனிதனாகிய செமாயாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி. அவர் சொன்னது: நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் மகனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அனைத்து இஸ்ரவேலரையும் நோக்கி: நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு போர்செய்யாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் யெகோவாவுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாக போர்செய்வதைத் தவிர்த்துத் திரும்பிப் போய்விட்டார்கள். ரெகொபெயாம் எருசலேமில் குடியிருந்து, யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான். அவன் பெத்லெகேமும், ஏத்தாமும், தெக்கோவாவும், பெத்சூரும், சோக்கோவும், அதுல்லாமும், காத்தும், மரேஷாவும், சீப்பும், அதோராயீமும், லாகீசும், அசேக்காவும், சோராவும், ஆயலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டி

2 நாளாகமம் 11:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

ரெகொபெயாம் எருசலேம் வந்தபோது 1,80,000 சிறந்த வீரர்களை அணி திரட்டினான். இவ்வீரர்களை யூதா மற்றும் பென்யமீன் ஆகிய கோத்திரங்களிடமிருந்து அணி திரட்டினான். இஸ்ரவேலர்களுக்கு எதிராகச் சண்டையிடவே அவர்களை அணி திரட்டினான். இதன் மூலம் அவர்களை தன் ஆட்சிக்குள் வைத்திருக்க முடியும் என்று நம்பினான். ஆனால் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தி செமாயாவிற்கு வந்தது. அவன் தேவனுடைய மனிதன். கர்த்தர் அவனிடம், “யூதாவின் ராஜாவாகிய சாலொமோனின் குமாரன் ரெகொபெயாமிடமும், இஸ்ரவேலிலும், யூதாவிலும், பென்யமீனிலும் உள்ள ஜனங்களிடமும் கூறு என்று கர்த்தர் சொன்ன செய்திகள் இவை தான்: ‘உன் சகோதரர்களோடு நீ சண்டை போடாதே! ஒவ்வொருவரையும் தம் சொந்த வீட்டுக்குப் போகவிடு. நான் இவ்வாறு நிகழும்படிச் செய்தேன்.’” எனவே ரெகொபெயாமும் அவனது படையும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து திரும்பி வந்தது. அவர்கள் யெரொபெயாமைத் தாக்கவில்லை. ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்தான். தாக்குதல்களில் இருந்து தப்பிக்க யூதாவில் அவன் பலமான நகரங்களை நிர்மாணித்தான். அவன் பெத்லேகம், ஏத்தாம், தெக்கோவா, பெத்சூர், சோகோ, அதுல்லாம், காத்து, மரேஷா, சீப்பு அதோராயீம், லாகீசு, அசேக்கா, சோரா, ஆயிலோன், எப்ரோன் ஆகிய நகரங்களைச் செப்பனிட்டான். யூதாவிலும் பென்யமீனிலுமிருந்த இந்த நகரங்கள் பலப்படுத்தப்பட்டன.