2 நாளாகமம் 34:1-21

2 நாளாகமம் 34:1-21 TCV

யோசியா அரசனானபோது எட்டு வயதுடையவனாயிருந்தான், அவன் எருசலேமில் முப்பத்தொரு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவன் யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்து தன் தந்தையான தாவீதின் வழியில் நடந்தான். அவன் வலது புறமாவது, இடது புறமாவது விலகவில்லை. அவனுடைய ஆட்சியின் எட்டாம் வருடத்தில் அவன் இன்னும் இளமையாய் இருக்கையிலே தன் தகப்பன் தாவீதின் இறைவனைத் தேடத் தொடங்கினான். ஆட்சியின் பன்னிரண்டாம் வருடத்தில் அங்கிருந்த உயர்ந்த மேடைகளையும், அசேரா விக்கிரக தூண்களையும், செதுக்கிய விக்கிரகங்களையும், வார்ப்பிக்கப்பட்ட உருவச்சிலைகளையும் அகற்றி யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான். அவனுடைய கட்டளையின்கீழ், பாகால்களின் மேடைகள் எல்லாம் இடித்து வீழ்த்தப்பட்டன. அவன் அவற்றிற்கு மேலாக இருந்த தூபபீடங்களையெல்லாம் உடைத்துத் துண்டுதுண்டாக்கினான். அசேரா விக்கிரக தூண்களையும், விக்கிரகங்களையும், உருவச்சிலைகளையும் நொருக்கிப் போட்டான். அவன் இவற்றையெல்லாம் உடைத்துத் தூளாக்கி அவற்றிற்கு பலியிட்டவர்களின் கல்லறைகளின்மேல் தூவிவிட்டான். அவன் பூசாரிகளின் எலும்புகளை அதன்மேல் எரித்தான். இவ்வாறு யூதாவையும், எருசலேமையும் தூய்மைப்படுத்தினான். நப்தலி வரையுள்ள மனாசே, எப்பிராயீம், சிமியோன் பட்டணங்களிலும் அவற்றைச் சுற்றியிருந்த பாழிடங்களிலும் இப்படிச் செய்தான். அவன் இஸ்ரயேல் முழுவதிலும் இருந்த மேடைகளையும், அசேரா விக்கிரக தூண்களையும் உடைத்து வீழ்த்தி, விக்கிரகங்களை உடைத்துத் தூளாக்கி எல்லாத் தூபபீடங்களையும் துண்டு துண்டாக்கிப் போட்டான். பின் அவன் எருசலேமுக்குத் திரும்பினான். யோசியாவின் ஆட்சியின் பதினெட்டாம் வருடத்தில், அவன் நாட்டையும் எருசலேமையும் தூய்மைப்படுத்துவதற்காக அத்சலியாவின் மகன் சாப்பான், பட்டணத்தின் ஆளுநனான மாசெயா, பதிவாளனான யோவகாஸின் மகன் யோவாக் ஆகியோரை அவனுடைய இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தைத் திருத்துவதற்காக அனுப்பினான். அவர்கள் தலைமை ஆசாரியன் இல்க்கியாவிடம் போய், இறைவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவனிடம் கொடுத்தார்கள். அப்பணம் வாசல் காவலாளர்களாயிருந்த லேவியர்களால் மனாசே, எப்பிராயீம் மக்களிடமிருந்தும், இஸ்ரயேலில் எஞ்சியிருந்த எல்லா மக்களிடமிருந்தும், யூதா, பென்யமீன் மக்களான எல்லோரிடமிருந்தும், எருசலேமின் குடிகளிடமிருந்தும் சேர்க்கப்பட்டதாகும். அவர்கள் யெகோவாவின் ஆலய வேலையை மேற்பார்வை செய்வதற்கென நியமிக்கப்பட்ட மனிதரிடம் அதைக் கொடுத்தார்கள். அவர்கள் அதிலிருந்து ஆலயத்தைப் பழுதுபார்த்து, திரும்பக்கட்டிய வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுத்தனர். அத்துடன் அவர்கள் தச்சர்களுக்கும், கட்டடங்களைக் கட்டுபவர்களுக்கும், பொழியப்பட்ட கற்களையும், வளை மரங்களையும், இணைப்பு மரங்களையும் செய்வதற்கான மரங்களை வாங்குவதற்குமென பணம் கொடுத்தார்கள். அந்தக் கட்டடங்கள் யூதாவின் அரசர்களால் பாழாகும்படி விடப்பட்டிருந்தனவாகும். மனிதர்கள் உண்மையுடன் வேலைசெய்தார்கள். அவர்களுக்குத் தலைமைதாங்கி, அவர்களை வழிநடத்துவதற்கு மெராரி வழிவந்த லேவியர்களான யாகாத்தும், ஒபதியாவும், கோகாத்தின் வழிவந்த சகரியா, மெசுல்லாவும் இருந்தனர். லேவியர்கள் எல்லோரும் இசைக்கருவிகளை வாசிப்பதில் திறமை வாய்ந்தவர்கள். இவர்கள் தொழிலாளர்களுக்குப் பொறுப்பாயிருந்து, ஒவ்வொரு வேலையிலும் ஈடுபட்டிருந்த வேலையாட்களை மேற்பார்வை செய்தார்கள். சில லேவியர்கள் செயலாளர்களாகவும், வேதப்பிரதியாளர்களாகவும், வாசல் காப்போர்களாகவும் இருந்தனர். யெகோவாவின் ஆலயத்திற்குள் இருந்த பணம் வெளியே எடுத்துக்கொண்டு வரப்பட்டது. அப்போது ஆசாரியன் இல்க்கியா மோசே மூலம் கொடுக்கப்பட்ட யெகோவாவின் சட்டப் புத்தகத்தைக் கண்டெடுத்தான். இல்க்கியா செயலாளராகிய சாப்பானிடம், “யெகோவாவின் ஆலயத்தில் நான் சட்டப் புத்தகத்தைக் கண்டெடுத்தேன்” என்று சொன்னான். அவன் அதைச் சாப்பானிடம் கொடுத்தான். அப்பொழுது சாப்பான் அந்தப் புத்தகத்தை அரசனிடம் கொண்டுபோய், அவனுக்கு விவரித்துச் சொன்னதாவது, “உமது அதிகாரிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்தில் இருந்த பணத்தை, மேற்பார்வையாளருக்கும், வேலையாட்களுக்கும் என கொடுத்துவிட்டார்கள்” என்றான். பின்பு செயலாளராகிய சாப்பான் அரசனிடம், “ஆசாரியன் இல்க்கியா என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்கிறான்” என்று சொல்லி அதை அரசன்முன் வாசித்தான். அரசன் சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தனது ஆடைகளைக் கிழித்தான். பின்பு அரசன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகன் அகீக்காமுக்கும், மீகாவின் மகன் அப்தோனுக்கும், செயலாளன் சாப்பானுக்கும், அரச ஏவலாளனான அசாயாவுக்கும் கட்டளையிட்டதாவது: “நீங்கள் போய் கண்டெடுக்கப்பட்ட இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றைப் பற்றி, எனக்காகவும், இஸ்ரயேலிலும், யூதாவிலும் இருக்கிறவர்களுக்காகவும் யெகோவாவிடம் கேளுங்கள். நமது முற்பிதாக்கள் யெகோவாவின் வார்த்தையைக் கைக்கொள்ளாததினால் தானே நம்மேல் ஊற்றப்பட்ட யெகோவாவின் கோபம் பெரிதாயிருக்கிறது. அவர்கள் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாவற்றின்படியும் செயல்படவில்லையே” என்றான்.