2 நாளாகமம் 34:1-21

2 நாளாகமம் 34:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான். அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான். அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், தான் இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள், தோப்புகள், சுரூபங்கள், விக்கிரகங்கள் ஆகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும், எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான். அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின்மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரகத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி, பூஜாசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பீடங்களின்மேல் சுட்டெரித்து, இவ்விதமாய் யூதாவையும் எருசலேமையும் சுத்திகரித்தான். அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டணங்களிலும், நப்தலிமட்டும், பாழான அவைகளின் சுற்றுப்புறங்களிலும் செய்தான். அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும் விக்கிரகத் தோப்புகளையும் தகர்த்து, விக்கிரகங்களை நொறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்டபின்பு எருசலேமுக்குத் திரும்பினான். அவன் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின்பு, அவன் தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே, அத்சலியாவின் குமாரனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் குமாரனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான். அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, வாசற்படியைக் காக்கிற லேவியர் மனாசேயிலும் எப்பிராயீமிலும் இஸ்ரவேலில் மீதியானவர்களெல்லாரின் கையிலும் யூதா பென்யமீன் எங்கும் சேர்த்து, எருசலேமுக்குத் திரும்பி தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்த பணத்தை ஒப்புவித்து, வேலையைச் செய்விக்கும்படி, கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரரானவர்களின் கையில் அதைக் கொடுத்தார்கள்; இவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்துச் சீர்ப்படுத்துகிறதற்கு ஆலயத்தில் வேலை செய்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள். அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பாவுகிறதற்குப் பலகைகளையும் வாங்கத் தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள். இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும், கோகாதியரின் புத்திரரில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள். அவர்கள் சுமைகாரரை விசாரிக்கிறவர்களாயும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லாரையும் கண்காணிக்கிறவர்களாயும் இருந்தார்கள்; லேவியரில் இன்னும் சிலர் கணக்கரும் மணியக்காரரும் வாசற்காவலாளருமாயிருந்தார்கள். கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிறபோது மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான். அப்பொழுது இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப்புஸ்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பான் கையில் கொடுத்தான். சாப்பான் அந்தப் புஸ்தகத்தை ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய், அவனை நோக்கி: உம்முடைய ஊழியக்காரருக்கு கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். கர்த்தருடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர் கையிலும், வேலை செய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்தி சொன்னதும் அல்லாமல், ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான். நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனாகிய அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது: கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதேபோனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.

2 நாளாகமம் 34:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோசியா அரசனானபோது எட்டு வயதுடையவனாயிருந்தான், அவன் எருசலேமில் முப்பத்தொரு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவன் யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்து தன் தந்தையான தாவீதின் வழியில் நடந்தான். அவன் வலது புறமாவது, இடது புறமாவது விலகவில்லை. அவனுடைய ஆட்சியின் எட்டாம் வருடத்தில் அவன் இன்னும் இளமையாய் இருக்கையிலே தன் தகப்பன் தாவீதின் இறைவனைத் தேடத் தொடங்கினான். ஆட்சியின் பன்னிரண்டாம் வருடத்தில் அங்கிருந்த உயர்ந்த மேடைகளையும், அசேரா விக்கிரக தூண்களையும், செதுக்கிய விக்கிரகங்களையும், வார்ப்பிக்கப்பட்ட உருவச்சிலைகளையும் அகற்றி யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான். அவனுடைய கட்டளையின்கீழ், பாகால்களின் மேடைகள் எல்லாம் இடித்து வீழ்த்தப்பட்டன. அவன் அவற்றிற்கு மேலாக இருந்த தூபபீடங்களையெல்லாம் உடைத்துத் துண்டுதுண்டாக்கினான். அசேரா விக்கிரக தூண்களையும், விக்கிரகங்களையும், உருவச்சிலைகளையும் நொருக்கிப் போட்டான். அவன் இவற்றையெல்லாம் உடைத்துத் தூளாக்கி அவற்றிற்கு பலியிட்டவர்களின் கல்லறைகளின்மேல் தூவிவிட்டான். அவன் பூசாரிகளின் எலும்புகளை அதன்மேல் எரித்தான். இவ்வாறு யூதாவையும், எருசலேமையும் தூய்மைப்படுத்தினான். நப்தலி வரையுள்ள மனாசே, எப்பிராயீம், சிமியோன் பட்டணங்களிலும் அவற்றைச் சுற்றியிருந்த பாழிடங்களிலும் இப்படிச் செய்தான். அவன் இஸ்ரயேல் முழுவதிலும் இருந்த மேடைகளையும், அசேரா விக்கிரக தூண்களையும் உடைத்து வீழ்த்தி, விக்கிரகங்களை உடைத்துத் தூளாக்கி எல்லாத் தூபபீடங்களையும் துண்டு துண்டாக்கிப் போட்டான். பின் அவன் எருசலேமுக்குத் திரும்பினான். யோசியாவின் ஆட்சியின் பதினெட்டாம் வருடத்தில், அவன் நாட்டையும் எருசலேமையும் தூய்மைப்படுத்துவதற்காக அத்சலியாவின் மகன் சாப்பான், பட்டணத்தின் ஆளுநனான மாசெயா, பதிவாளனான யோவகாஸின் மகன் யோவாக் ஆகியோரை அவனுடைய இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தைத் திருத்துவதற்காக அனுப்பினான். அவர்கள் தலைமை ஆசாரியன் இல்க்கியாவிடம் போய், இறைவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவனிடம் கொடுத்தார்கள். அப்பணம் வாசல் காவலாளர்களாயிருந்த லேவியர்களால் மனாசே, எப்பிராயீம் மக்களிடமிருந்தும், இஸ்ரயேலில் எஞ்சியிருந்த எல்லா மக்களிடமிருந்தும், யூதா, பென்யமீன் மக்களான எல்லோரிடமிருந்தும், எருசலேமின் குடிகளிடமிருந்தும் சேர்க்கப்பட்டதாகும். அவர்கள் யெகோவாவின் ஆலய வேலையை மேற்பார்வை செய்வதற்கென நியமிக்கப்பட்ட மனிதரிடம் அதைக் கொடுத்தார்கள். அவர்கள் அதிலிருந்து ஆலயத்தைப் பழுதுபார்த்து, திரும்பக்கட்டிய வேலையாட்களுக்குச் சம்பளம் கொடுத்தனர். அத்துடன் அவர்கள் தச்சர்களுக்கும், கட்டடங்களைக் கட்டுபவர்களுக்கும், பொழியப்பட்ட கற்களையும், வளை மரங்களையும், இணைப்பு மரங்களையும் செய்வதற்கான மரங்களை வாங்குவதற்குமென பணம் கொடுத்தார்கள். அந்தக் கட்டடங்கள் யூதாவின் அரசர்களால் பாழாகும்படி விடப்பட்டிருந்தனவாகும். மனிதர்கள் உண்மையுடன் வேலைசெய்தார்கள். அவர்களுக்குத் தலைமைதாங்கி, அவர்களை வழிநடத்துவதற்கு மெராரி வழிவந்த லேவியர்களான யாகாத்தும், ஒபதியாவும், கோகாத்தின் வழிவந்த சகரியா, மெசுல்லாவும் இருந்தனர். லேவியர்கள் எல்லோரும் இசைக்கருவிகளை வாசிப்பதில் திறமை வாய்ந்தவர்கள். இவர்கள் தொழிலாளர்களுக்குப் பொறுப்பாயிருந்து, ஒவ்வொரு வேலையிலும் ஈடுபட்டிருந்த வேலையாட்களை மேற்பார்வை செய்தார்கள். சில லேவியர்கள் செயலாளர்களாகவும், வேதப்பிரதியாளர்களாகவும், வாசல் காப்போர்களாகவும் இருந்தனர். யெகோவாவின் ஆலயத்திற்குள் இருந்த பணம் வெளியே எடுத்துக்கொண்டு வரப்பட்டது. அப்போது ஆசாரியன் இல்க்கியா மோசே மூலம் கொடுக்கப்பட்ட யெகோவாவின் சட்டப் புத்தகத்தைக் கண்டெடுத்தான். இல்க்கியா செயலாளராகிய சாப்பானிடம், “யெகோவாவின் ஆலயத்தில் நான் சட்டப் புத்தகத்தைக் கண்டெடுத்தேன்” என்று சொன்னான். அவன் அதைச் சாப்பானிடம் கொடுத்தான். அப்பொழுது சாப்பான் அந்தப் புத்தகத்தை அரசனிடம் கொண்டுபோய், அவனுக்கு விவரித்துச் சொன்னதாவது, “உமது அதிகாரிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்தில் இருந்த பணத்தை, மேற்பார்வையாளருக்கும், வேலையாட்களுக்கும் என கொடுத்துவிட்டார்கள்” என்றான். பின்பு செயலாளராகிய சாப்பான் அரசனிடம், “ஆசாரியன் இல்க்கியா என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்கிறான்” என்று சொல்லி அதை அரசன்முன் வாசித்தான். அரசன் சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தனது ஆடைகளைக் கிழித்தான். பின்பு அரசன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகன் அகீக்காமுக்கும், மீகாவின் மகன் அப்தோனுக்கும், செயலாளன் சாப்பானுக்கும், அரச ஏவலாளனான அசாயாவுக்கும் கட்டளையிட்டதாவது: “நீங்கள் போய் கண்டெடுக்கப்பட்ட இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றைப் பற்றி, எனக்காகவும், இஸ்ரயேலிலும், யூதாவிலும் இருக்கிறவர்களுக்காகவும் யெகோவாவிடம் கேளுங்கள். நமது முற்பிதாக்கள் யெகோவாவின் வார்த்தையைக் கைக்கொள்ளாததினால் தானே நம்மேல் ஊற்றப்பட்ட யெகோவாவின் கோபம் பெரிதாயிருக்கிறது. அவர்கள் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாவற்றின்படியும் செயல்படவில்லையே” என்றான்.

2 நாளாகமம் 34:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். அவன் யெகோவாவுடைய பார்வைக்கு செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான். அவன் தன் அரசாட்சியின் எட்டாம் வருட ஆட்சியில், தான் இன்னும் இளவயதாயிருக்கும்போது, தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருடத்தில் மேடைகள், தோப்புகள், உருவங்கள், சிலைகள் ஆகிய இவைகள் இல்லாமல்போகும்படி, யூதாவையும், எருசலேமையும் தூய்மைப்படுத்தத் தொடங்கினான். அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின்மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரகத் தோப்புகளையும் வார்ப்பு சிலைகளையும் வெட்டப்பட்ட சிலைகளையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்கு பலியிட்டவர்களுடைய கல்லறைகளின்மேல் தூவி, பூசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பலிபீடங்களின்மேல் சுட்டெரித்து, இந்தவிதமாக யூதாவையும் எருசலேமையும் தூய்மைப்படுத்தினான். அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டணங்களிலும், நப்தலிவரையும், பாழான அவைகளின் சுற்றுப்புறங்களிலும் செய்தான். அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும் விக்கிரகத் தோப்புகளையும் இடித்து, சிலைகளை நொறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்டபின்பு எருசலேமுக்குத் திரும்பினான். அவன் தேசத்தையும் ஆலயத்தையும் தூய்மைப்படுத்தியபின்பு, அவன் தன் அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்திலே, அத்சலியாவின் மகனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் மகனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்கு அனுப்பினான். அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, வாசற்படியைக் காக்கிற லேவியர்கள் மனாசேயிலும் எப்பிராயீமிலும் இஸ்ரவேலில் மீதியானவர்களெல்லாரின் கையிலும் யூதா பென்யமீன் எங்கும் சேர்த்து, எருசலேமுக்குத் திரும்பி தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்த பணத்தை ஒப்புவித்து, வேலையைச் செய்யவைக்க, யெகோவாவுடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரரானவர்களின் கையில் அதைக் கொடுத்தார்கள்; இவர்கள் அதைக் யெகோவாவுடைய ஆலயத்தைப் பழுதுபார்த்து ஒழுங்குபடுத்துகிறதற்கு ஆலயத்தில் வேலை செய்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள். அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க, வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பரப்புவதற்குப் பலகைகளையும் வாங்க தச்சர்களுக்கும் சிற்ப ஆசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள். இந்த மனிதர்கள் வேலையை உண்மையாகச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் மக்களில் யாகாத், ஒபதியா என்னும் லேவியர்களும், கோகாத்தியரின் மக்களில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள்; இந்த லேவியர்கள் எல்லோரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள். அவர்கள் சுமைகாரர்களை விசாரிக்கிறவர்களாகவும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லோரையும் கண்காணிக்கிறவர்களாகவும் இருந்தார்கள்; லேவியர்களில் இன்னும் சிலர் செயலாளர்களாகவும், நிர்வாகிகளாகவும், வாசற்காவலாளருமாக இருந்தார்கள். யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிறபோது மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட யெகோவாவுடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான். அப்பொழுது இல்க்கியா, பதிவாளனாகிய சாப்பானை நோக்கி: யெகோவாவுடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புத்தகத்தை சாப்பானுடைய கையில் கொடுத்தான். சாப்பான் அந்த புத்தகத்தை ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய், அவனை நோக்கி: உம்முடைய வேலைக்காரர்களுக்கு கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். யெகோவாவுடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர்கள் கையிலும், வேலை செய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்தி சொன்னதும் அல்லாமல், ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தான் என்பதைப் பதிவாளனாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான். நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகனாகிய அகீக்காமுக்கும், மீகாவின் மகனாகிய அப்தோனுக்கும், பதிவாளனாகிய சாப்பானுக்கும், ராஜாவின் வேலைக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது: கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும், இஸ்ரவேலிலும், யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்கு யெகோவாவுடைய வார்த்தையை நம்முடைய முன்னோர்கள் கைக்கொள்ளாமல் போனதால், நம்மேல் மூண்ட யெகோவாவுடைய கடுங்கோபம் பெரியது என்றான்.

2 நாளாகமம் 34:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)

யோசியா ராஜாவாகும்போது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். யோசியா சரியான செயல்களையே செய்தான். கர்த்தருடைய விருப்பப்படியே நல்ல காரியங்களையே அவன் செய்தான். அவன் தனது முற்பிதாவான தாவீதைப் போன்று நல்ல செயல்களைச் செய்துவந்தான். யோசியா நல்ல காரியங்களைச் செய்வதில் இருந்து திரும்பவே இல்லை. யோசியா ஆட்சிப் பொறுப்பேற்ற எட்டாவது ஆண்டில் அவன் தனது முற்பிதாவான தாவீது தேவனைப் பின்பற்றியது போலவே பின்பற்ற ஆரம்பித்துவிட்டான். யோசியா தேவனைப் பின்பற்றும்போது மிகவும் இளையவனாக இருந்தான். யோசியா ராஜாவாகியப் பன்னிரண்டாம் ஆண்டில் அவன் மேடைகளையும், விக்கிரகங்களையும் அழித்தான். யூதா மற்றும் எருசலேமில் உள்ள அந்நிய விக்கிரகங்களையும் அகற்றினான். பாகால் தெய்வங்களான எல்லா பலி பீடங்களையும் ஜனங்கள் உடைத்தனர். அவர்கள் யோசியாவின் முன்னிலையிலேயே இதனைச் செய்தனர். பிறகு ஜனங்களின் முன்னே உயரமாய் நின்றிருந்த நறுமணப் பொருட்களை எரிக்கும் பீடங்களை யோசியா இடித்தான். செதுக்கப்பட்ட விக்கிரகங்களையும், வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் அவன் உடைத்தான். அவன் அவற்றைத் தூளாக்கி, பாகால் தெய்வங்களை தொழுதுகொண்டு மரித்துப்போனவர்களின் கல்லறைகள் மீது தூவினான். யோசியா பாகால் தெய்வத்துக்கு சேவைசெய்த ஆசாரியர்களின் எலும்புகளை அவர்கள் பலிபீடங்களிலேயே எரித்தான். இவ்வாறு யோசியா யூதா மற்றும் எருசலேமின் விக்கிரகங்களையும், விக்கிரக ஆராதனைகளையும் அழித்தான். மனாசே, எப்பிராயீம், சிமியோன் மற்றும் நப்தலி செல்லும் வழி முழுவதுமான பகுதிகளில் இருந்த ஊர்களுக்கும் யோசியா அதையேச் செய்தான். அந்த ஊர்களுக்கு அருகாமையிலிருந்த பாழடைந்த பகுதிகளுக்கும் அவன் அதையே செய்தான். யோசியா பலிபீடங்களையும், விக்கிரக தோப்புகளையும் அழித்தான். அவன் விக்கிரகங்களைத் தூளாக்குமாறு உடைத்தான். இஸ்ரவேல் நாட்டில் பாகாலை தொழுது கொள்ள வைத்திருந்த அனைத்து பலிபீடங்களையும் நொறுக்கினான். பிறகே அவன் எருசலேமிற்குத் திரும்பினான். யோசியா ஆட்சிப்பொறுப்பேற்ற 18வது ஆண்டில், சாப்பான், மாசெயா மற்றும் யோவா ஆகியோரை தனது தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தை மீண்டும் கட்டி அமைக்க அனுப்பினான். சாப்பானின் தந்தை பெயர் அத்சலியா. மாசெயா என்பவன் நகரத் தலைவன் ஆவான். யோவாவின் தந்தை பெயர் யோவாகாஸ் ஆகும். நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் எழுதுபவன் யோவா ஆவான். (அவன் பதிவு செய்பவன்). எனவே யோசியா ஆலயம் பழுது பார்க்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டான். அதன் மூலம் யூதாவையும், ஆலயத்தையும் சுத்தப்படுத்தலாம் என்று நம்பினான். அவர்கள் தலைமை ஆசாரியனான இல்க்கியாவிடம் வந்தனர். தேவனுடைய ஆலயத்திற்காக ஜனங்கள் கொடுத்த பணத்தை அவர்கள் இலக்கியாவிடம் கொடுத்தனர். வாயிற்காவலர்களான லேவியர்கள் இப்பணத்தை மனாசே, எப்பிராயீம் மற்றும் வெளியேறிய இஸ்ரவேலர் அனைவரிடமிருந்தும் வசூலித்திருந்தனர். அவர்கள் யூதா, பென்யமீன் மற்றும் எருசலேமில் உள்ள அனைத்து ஜனங்களிடமிருந்தும் பணத்தை வசூலித்திருந்தனர். பிறகு லேவியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் வேலையை மேற்பார்வை செய்பவர்களிடம் பணத்தைக் கொடுத்தனர். மேற்பார்வையாளர்களோ அப்பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்தில் வேலைச் செய்பவர்களுக்குக் கொடுத்தனர். அவர்கள் அப்பணத்தை மரத்தச்சர்களிடமும், கொத்தனார்களிடமும் கொடுத்தனர். சதுரக் கற்களும், மரப்பலகைகளும் வாங்குவதற்காக அப்பணத்தை அவர்களிடம் கொடுத்தனர். மீண்டும் கட்டிடங்களைக் கட்டவும் உத்திரங்களை அமைக்கவும் பயன்பட்டன. முற்காலத்தில் யூதாவின் ராஜாக்கள் எவரும் ஆலயக் கட்டிடத்தைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை. அக்கட்டிடங்கள் பழையதாகி அழிந்துக்கொண்டிருந்தன. எல்லா ஆட்களும் உண்மையாக உழைத்தார்கள். யாகாத்தும், ஒபதியாவும் அவர்களின் மேற்பார்வையாளர்கள். இவர்கள் லேவியர்கள். இவர்கள் மெராரியின் சந்ததியினர். சகரியாவும் மெசுல்லாமும் மேற்பார்வையாளர்கள்தான். இவர்கள் கோகாத்தின் சந்ததியினர். இசைக்கருவிகளை இயக்குவதில் திறமை பெற்ற லேவியர்கள் வேலைச்செய்பவர்களை மேற்பார்வை பார்ப்பதும் மற்ற வேலைகளைச் செய்வதுமாய் இருந்தனர். சில லேவியர்கள் செயலாளர்களாகவும், அதிகாரிகளாகவும் வாயிற் காவலர்களாகவும் இருந்தனர். கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கிற பணத்தை லேவியர்கள் வெளியே கொண்டு வந்தனர். அதே நேரத்தில் இல்க்கியா எனும் ஆசாரியன் கர்த்தருடைய சட்ட புத்தகத்தைக் கண்டுபிடித்தான். அது மோசேயால் கொடுக்கப்பட்டிருந்தது. இல்க்கியா காரியக்காரனான சாப்பானிடம், சட்டப் புத்தகத்தை கர்த்தருடைய ஆலயத்தில் கண்டு எடுத்திருக்கிறேன் என்றான். இல்க்கியா அந்தப் புத்தகத்தைச் சாப்பானிடம் கொடுத்தான். சாப்பான் அந்தப் புத்தகத்தை யோசியா ராஜாவிடம் எடுத்துவந்தான். அவன் ராஜாவிடம், “உங்கள் வேலைக்காரர்கள் நீங்கள் சொன்னது போலவே அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த பணத்தை சேகரித்து அதனை மேற்பார்வையாளர்களுக்கும், வேலைக்காரர்களுக்கும் கொடுக்கின்றனர்” என்றான். மேலும் சாப்பான் ராஜாவிடம், “ஆசாரியனான இல்க்கியா ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்திருக்கிறான்” என்றான். பிறகு சாப்பான் அந்தப் புத்தகத்தை வாசித்துக் காட்டினான். அவன் வாசிக்கும்போது ராஜாவுக்கு முன்பு இருந்தான். யோசியா ராஜா சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது அவன் தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். பிறகு அவன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனான அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனான அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டான். ராஜா, “செல்லுங்கள் எனக்காக கர்த்தரிடம் கேளுங்கள். இஸ்ரவேலிலும், யூதாவிலும் மிச்சமுள்ள ஜனங்களுக்காகக் கேளுங்கள். கண்டுபிடிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சொற்களைப்பற்றி கேளுங்கள். நமது முற்பிதாக்கள் அவரது வார்த்தைகளுக்கு அடிபணியவில்லை என்பதால் கர்த்தர் நம் மீது கோபமாக இருக்கிறார். இந்தப் புத்தகம் செய்ய சொன்னவற்றையெல்லாம் அவர்கள் செய்யவில்லை!” என்றான்.