2 நாளாகமம் 34:22-33

2 நாளாகமம் 34:22-33 TCV

இல்க்கியாவும், அரசன் அவனோடு அனுப்பியவர்களும் இறைவாக்கினள் உல்தாளிடம் பேசும்படி போனார்கள். இவள் ஆலய உடைகளைக் காவல் செய்பவனான சல்லூமின் மனைவி. சல்லூம் அஸ்ராவின் மகனான தோக்காத்தின் மகன். உல்தாள் எருசலேமில் இரண்டாம் வட்டாரத்தில் வாழ்ந்தாள். அவள் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பிய மனிதனிடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே, நான் இந்த இடத்தின்மேலும், இதன் மக்கள்மேலும் பேரழிவைக் கொண்டுவரப் போகிறேன். யூதாவின் அரசனுக்கு முன்னால் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா சாபங்களையும் கொண்டுவருவேன். ஏனெனில் அவர்கள் என்னைக் கைவிட்டு, மற்றத் தெய்வங்களுக்குத் தூபம் எரித்தார்கள். தங்கள் கரங்களினால் செய்த எல்லாவற்றினாலும் எனக்கு கோபமூட்டினார்கள். ஆதலால் எனது கோபம் இந்த இடத்தின்மேல் ஊற்றப்படும். அது தணியாது’ என்றாள். யெகோவாவிடம் விசாரிக்கும்படி உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் சொல்லவேண்டியதாவது: ‘நீர் கேட்ட வார்த்தைகளைப்பற்றி இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: இறைவன் இந்த இடத்திற்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசியதை நீ கேட்டபோது, உன் இருதயம் அதைக் கருத்தில் கொண்டது. நீயும் இறைவனுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தினாய். நீ எனக்கு முன்னால் உன்னைத் தாழ்த்தி, உன் மேலாடைகளைக் கிழித்து, எனக்குமுன் அழுதாய். அதனால் நான் உனக்குச் செவிகொடுத்தேன் என்று யெகோவா சொல்கிறார். இப்பொழுது நான் உன்னை உன் தந்தையருடன் சேர்த்துக்கொள்ளப் போகிறேன். நீ சமாதானத்துடன் அடக்கம் செய்யப்படுவாய். நான் இந்த இடத்தின்மேலும் இங்கு வாழ்வோர்மேலும் கொண்டுவரப்போகும் பேரழிவை உன் கண்கள் காணமாட்டாது’ என்று சொல்கிறார்” என்றாள். எனவே அவளது பதிலைக் கொண்டு அவர்கள் அரசனிடம் போனார்கள். அப்பொழுது அரசன், யூதாவின் முதியவர்களையும், எருசலேமின் முதியவர்களையும் ஒன்றாக கூடிவரச் செய்தான். அரசன் யூதாவின் மனிதர், எருசலேமின் மக்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகிய சிறியோர் பெரியோர் அனைவருடனும் யெகோவாவின் ஆலயத்திற்குப் போனான். அவன் யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தில் இருந்த எல்லா வார்த்தைகளையும் அவர்கள் கேட்கும்படி வாசித்தான். அரசன் தனது தூணின் அருகே நின்று, யெகோவாவின் முன்னால் உடன்படிக்கையைப் புதுப்பித்தான். யெகோவாவைப் பின்பற்றுவதற்கும், அவரது கட்டளைகளையும், நியமங்களையும், விதிமுறைகளையும் தனது முழு இருதயத்துடனும், முழு ஆத்துமாவோடும் கைக்கொள்வதற்கும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா உடன்படிக்கையின் வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவதற்கும் உடன்பட்டான். அதன்பின் எருசலேமிலும், பென்யமீனிலுமுள்ள ஒவ்வொருவரையும் உடன்படும்படி தூண்டினான். எருசலேம் மக்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய இறைவனின் உடன்படிக்கையின்படியே இதைச் செய்தார்கள். யோசியா இஸ்ரயேலின் ஆட்சிக்குட்பட்ட அதற்குச் சொந்தமான பகுதிகளிலிருந்த எல்லா அருவருக்கத்தக்க விக்கிரகங்களையும் அகற்றினான். இஸ்ரயேலில் உள்ள எல்லோரையும் இறைவனாகிய தங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்யும்படி செய்தான். அவன் வாழ்ந்த காலம் ழுழுவதும் அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைப் பின்பற்றுவதில் தவறவேயில்லை.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 நாளாகமம் 34:22-33