2 நாளாகமம் 34:22-33

2 நாளாகமம் 34:22-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனார்கள்; அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள். அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது, இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன். அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்கும் என்று கர்த்தர் உரைக்கிறார். கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளபட. நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள். அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து, ராஜாவும், சகல யூதா மனுஷரும், எருசலேமின் குடிகளும், ஆசாரியரும், லேவியரும், பெரியோர்முதல் சிறியோர் மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான். ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தான் செய்வதினாலே, கர்த்தரைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணி, எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு உட்படப்பண்ணினான்; அப்படியே எருசலேமின் குடிகள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய அந்த தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள். யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான்; அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.

2 நாளாகமம் 34:22-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இல்க்கியாவும், அரசன் அவனோடு அனுப்பியவர்களும் இறைவாக்கினள் உல்தாளிடம் பேசும்படி போனார்கள். இவள் ஆலய உடைகளைக் காவல் செய்பவனான சல்லூமின் மனைவி. சல்லூம் அஸ்ராவின் மகனான தோக்காத்தின் மகன். உல்தாள் எருசலேமில் இரண்டாம் வட்டாரத்தில் வாழ்ந்தாள். அவள் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பிய மனிதனிடம் சொல்லவேண்டியதாவது: ‘யெகோவா சொல்வது இதுவே, நான் இந்த இடத்தின்மேலும், இதன் மக்கள்மேலும் பேரழிவைக் கொண்டுவரப் போகிறேன். யூதாவின் அரசனுக்கு முன்னால் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா சாபங்களையும் கொண்டுவருவேன். ஏனெனில் அவர்கள் என்னைக் கைவிட்டு, மற்றத் தெய்வங்களுக்குத் தூபம் எரித்தார்கள். தங்கள் கரங்களினால் செய்த எல்லாவற்றினாலும் எனக்கு கோபமூட்டினார்கள். ஆதலால் எனது கோபம் இந்த இடத்தின்மேல் ஊற்றப்படும். அது தணியாது’ என்றாள். யெகோவாவிடம் விசாரிக்கும்படி உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் சொல்லவேண்டியதாவது: ‘நீர் கேட்ட வார்த்தைகளைப்பற்றி இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: இறைவன் இந்த இடத்திற்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசியதை நீ கேட்டபோது, உன் இருதயம் அதைக் கருத்தில் கொண்டது. நீயும் இறைவனுக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தினாய். நீ எனக்கு முன்னால் உன்னைத் தாழ்த்தி, உன் மேலாடைகளைக் கிழித்து, எனக்குமுன் அழுதாய். அதனால் நான் உனக்குச் செவிகொடுத்தேன் என்று யெகோவா சொல்கிறார். இப்பொழுது நான் உன்னை உன் தந்தையருடன் சேர்த்துக்கொள்ளப் போகிறேன். நீ சமாதானத்துடன் அடக்கம் செய்யப்படுவாய். நான் இந்த இடத்தின்மேலும் இங்கு வாழ்வோர்மேலும் கொண்டுவரப்போகும் பேரழிவை உன் கண்கள் காணமாட்டாது’ என்று சொல்கிறார்” என்றாள். எனவே அவளது பதிலைக் கொண்டு அவர்கள் அரசனிடம் போனார்கள். அப்பொழுது அரசன், யூதாவின் முதியவர்களையும், எருசலேமின் முதியவர்களையும் ஒன்றாக கூடிவரச் செய்தான். அரசன் யூதாவின் மனிதர், எருசலேமின் மக்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் ஆகிய சிறியோர் பெரியோர் அனைவருடனும் யெகோவாவின் ஆலயத்திற்குப் போனான். அவன் யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தில் இருந்த எல்லா வார்த்தைகளையும் அவர்கள் கேட்கும்படி வாசித்தான். அரசன் தனது தூணின் அருகே நின்று, யெகோவாவின் முன்னால் உடன்படிக்கையைப் புதுப்பித்தான். யெகோவாவைப் பின்பற்றுவதற்கும், அவரது கட்டளைகளையும், நியமங்களையும், விதிமுறைகளையும் தனது முழு இருதயத்துடனும், முழு ஆத்துமாவோடும் கைக்கொள்வதற்கும், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா உடன்படிக்கையின் வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவதற்கும் உடன்பட்டான். அதன்பின் எருசலேமிலும், பென்யமீனிலுமுள்ள ஒவ்வொருவரையும் உடன்படும்படி தூண்டினான். எருசலேம் மக்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய இறைவனின் உடன்படிக்கையின்படியே இதைச் செய்தார்கள். யோசியா இஸ்ரயேலின் ஆட்சிக்குட்பட்ட அதற்குச் சொந்தமான பகுதிகளிலிருந்த எல்லா அருவருக்கத்தக்க விக்கிரகங்களையும் அகற்றினான். இஸ்ரயேலில் உள்ள எல்லோரையும் இறைவனாகிய தங்கள் யெகோவாவுக்குப் பணிசெய்யும்படி செய்தான். அவன் வாழ்ந்த காலம் ழுழுவதும் அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவைப் பின்பற்றுவதில் தவறவேயில்லை.

2 நாளாகமம் 34:22-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் மகனாகிய திக்வாதின் மகனான சல்லூம் என்னும் ஆடைகள் வைக்கும் அறைகளின் கண்காணிப்பாளனின் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடம் போனார்கள்; அவள் எருசலேமில் இரண்டாம் பகுதியிலே குடியிருந்தாள்; அவளோடு அதைக்குறித்துப் பேசினார்கள். அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடம் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறதாவது, இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதியிருக்கிற அனைத்து சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த இடத்தின்மேலும் இதன் மக்களின்மேலும் வரச்செய்வேன். அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் செயல்கள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தெய்வங்களுக்குத் தூபங்காட்டினதால், என் கடுங்கோபம் தணிந்து போகாமலிருக்க இந்த இடத்தின்மேல் இறங்கும் என்று யெகோவா உரைக்கிறார். கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இந்த இடத்திற்கும் அதன் மக்களுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கும்போது, உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுததால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். இதோ, நான் இந்த இடத்தின்மேலும் இதன் மக்களின்மேலும் வரச்செய்யும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்க்கப்பட நான் உன்னை உன் முன்னோர்களுக்கு அருகில் சேரச்செய்வேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள். அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் வரவழைத்துக் கூடிவரச்செய்து, ராஜாவும், அனைத்து யூதா மனிதர்களும், எருசலேமின் மக்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், பெரியோர்முதல் சிறியோர் வரையுள்ள அனைவரும் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போனார்கள்; யெகோவாவுடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான். ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தன் செயல்கள் மூலமாகக் யெகோவாவைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழு இருதயத்தோடும், தன் முழு ஆத்துமாவோடும், அவருடைய கற்பனைகளையும், அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் யெகோவாவுடைய சந்நிதியில் உடன்படிக்கைசெய்து, எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு இணங்கச்செய்தான்; அப்படியே எருசலேமின் மக்கள் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய அந்த தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள். யோசியா இஸ்ரவேல் மக்களுடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி. இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய யெகோவாவை ஆராதிக்கச் செய்தான்; அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவர்கள் தங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவைவிட்டுப் பின்வாங்கினதில்லை.

2 நாளாகமம் 34:22-33 பரிசுத்த பைபிள் (TAERV)

இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் உல்தாள் எனும் தீர்க்கதரிசி பெண்ணிடம் சென்றனர். உல்தாள் சல்லூமின் மனைவி. சல்லூம் திக்வாதின் குமாரன். திக்வாத் அஸ்ராவின் குமாரன். அஸ்ரா ராஜாவின் ஆடைகளுக்குப் பொறுப்பாளன். உல்தாள் எருசலேமின் புதிய பகுதியில் வாழ்ந்து வருகிறாள். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் அவளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். உல்தாள் அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: ராஜாவாகிய யோசியாவிடம் கூறுங்கள்: ‘நான் இந்த இடத்திற்கும், இங்கு வாழும் ஜனங்களுக்கும் தொந்தரவுகளைத் தருவேன். யூதா ராஜாவின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கொடூரமானவற்றையும் கொண்டு வருவேன். ஜனங்கள் என்னைவிட்டு விலகி அந்நிய தெய்வங்களுக்கு நறுமணப் பொருட்களை எரிக்க போய்விட்ட காரணத்தால் நான் இவற்றைச் செய்வேன். தம்முடைய தீயச்செயல்களால் அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை மூட்டிவிட்டார்கள். எனவே நான் இந்த இடத்தில் எனது கோபத்தைக் கொட்டுவேன். நெருப்பைப்போன்று கோபம் அவியாது.’ “ஆனால் யூதாவின் ராஜாவாகிய யோசியாவிடம் கூறு. அவன் உங்களைக் கர்த்தரைக் கேட்குமாறு அனுப்பியிருக்கிறான். சற்று நேரத்திற்கு முன்னர் நீ கேட்டவற்றைப்பற்றி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: ‘யோசியா நீ மனம் இளகி பணிந்துகொண்டாய், உனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டாய், எனக்கு முன்பு நீ அழுதாய். இவ்வாறு உன் மனம் இளகியதால், உன் முற்பிதாக்களுடன் இருப்பதற்கு நான் உன்னை அழைத்துச் செல்வேன். நீ உனது கல்லறைக்கு சமாதானத்தோடு போவாய். அதனால் நான் இந்த இடத்துக்கும், இங்குள்ள ஜனங்களுக்கும் கொடுக்கப்போகும் பயங்கரமான துன்பங்களை நீ காணமாட்டாய்’” என்றார். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் இந்த செய்தியை யோசியா ராஜாவிடம் கொண்டுவந்தனர். பிறகு யோசியா யூதா மற்றும் எருசலேமில் உள்ள மூப்பர்களை அழைத்து அவர்களைச் சந்தித்தான். ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். யூதாவிலுள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் ராஜாவோடு சென்றனர். உடன்படிக்கைப் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ராஜா அவர்களுக்கு வாசித்துக் காட்டினான். அப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகம் ஆகும். பிறகு ராஜா தனது இடத்தில் எழுந்து நின்றான். பிறகு அவன் கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்தான். கர்த்தரைப் பின்பற்றுவதாகவும் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் அடிபணிவதாகவும் சொன்னான். முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் அவன் கீழ்ப்படிவதற்கு ஒப்புக்கொண்டான். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்துக்கும் அடிபணிவதாக ஒப்புக்கொண்டான். பிறகு யோசியா எருசலேம் மற்றும் பென்யமீன் நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் உடன்படிக்கையை ஒப்புக்கொள்கிற வகையில் வாக்குறுதி தரச் செய்தான். தமது முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவனுடைய உடன்படிக்கையை எருசலேம் ஜனங்களும் கீழ்ப்படிந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பல் வேறு நாடுகளிலிருந்து விக்கிரகங்களைக் கொண்டு வந்து வைத்திருந்தனர். ஆனால் யோசியா அந்த கொடூரமான விக்கிரகங்களை எல்லாம் அழித்துவிட்டான். ராஜா இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவனாகிய கர்த்தருக்குச் சேவைசெய்யுமாறுச் செய்தான். யோசியா உயிரோடு இருந்தவரை ஜனங்கள் தமது முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்தனர்.