நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 34:22-33

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 34:22-33 TAERV

இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் உல்தாள் எனும் தீர்க்கதரிசி பெண்ணிடம் சென்றனர். உல்தாள் சல்லூமின் மனைவி. சல்லூம் திக்வாதின் குமாரன். திக்வாத் அஸ்ராவின் குமாரன். அஸ்ரா ராஜாவின் ஆடைகளுக்குப் பொறுப்பாளன். உல்தாள் எருசலேமின் புதிய பகுதியில் வாழ்ந்து வருகிறாள். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் அவளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். உல்தாள் அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: ராஜாவாகிய யோசியாவிடம் கூறுங்கள்: ‘நான் இந்த இடத்திற்கும், இங்கு வாழும் ஜனங்களுக்கும் தொந்தரவுகளைத் தருவேன். யூதா ராஜாவின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கொடூரமானவற்றையும் கொண்டு வருவேன். ஜனங்கள் என்னைவிட்டு விலகி அந்நிய தெய்வங்களுக்கு நறுமணப் பொருட்களை எரிக்க போய்விட்ட காரணத்தால் நான் இவற்றைச் செய்வேன். தம்முடைய தீயச்செயல்களால் அவர்கள் எனக்கு மிகுதியான கோபத்தை மூட்டிவிட்டார்கள். எனவே நான் இந்த இடத்தில் எனது கோபத்தைக் கொட்டுவேன். நெருப்பைப்போன்று கோபம் அவியாது.’ “ஆனால் யூதாவின் ராஜாவாகிய யோசியாவிடம் கூறு. அவன் உங்களைக் கர்த்தரைக் கேட்குமாறு அனுப்பியிருக்கிறான். சற்று நேரத்திற்கு முன்னர் நீ கேட்டவற்றைப்பற்றி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுதான்: ‘யோசியா நீ மனம் இளகி பணிந்துகொண்டாய், உனது ஆடைகளைக் கிழித்துக்கொண்டாய், எனக்கு முன்பு நீ அழுதாய். இவ்வாறு உன் மனம் இளகியதால், உன் முற்பிதாக்களுடன் இருப்பதற்கு நான் உன்னை அழைத்துச் செல்வேன். நீ உனது கல்லறைக்கு சமாதானத்தோடு போவாய். அதனால் நான் இந்த இடத்துக்கும், இங்குள்ள ஜனங்களுக்கும் கொடுக்கப்போகும் பயங்கரமான துன்பங்களை நீ காணமாட்டாய்’” என்றார். இல்க்கியாவும், ராஜாவின் வேலைக்காரர்களும் இந்த செய்தியை யோசியா ராஜாவிடம் கொண்டுவந்தனர். பிறகு யோசியா யூதா மற்றும் எருசலேமில் உள்ள மூப்பர்களை அழைத்து அவர்களைச் சந்தித்தான். ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். யூதாவிலுள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும் ஆசாரியர்களும், லேவியர்களும், முக்கியமானவர்களும் முக்கியமற்றவர்களும் ராஜாவோடு சென்றனர். உடன்படிக்கைப் புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ராஜா அவர்களுக்கு வாசித்துக் காட்டினான். அப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகம் ஆகும். பிறகு ராஜா தனது இடத்தில் எழுந்து நின்றான். பிறகு அவன் கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்தான். கர்த்தரைப் பின்பற்றுவதாகவும் அவரது கட்டளைகளுக்கும், சட்டங்களுக்கும் அடிபணிவதாகவும் சொன்னான். முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் அவன் கீழ்ப்படிவதற்கு ஒப்புக்கொண்டான். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்துக்கும் அடிபணிவதாக ஒப்புக்கொண்டான். பிறகு யோசியா எருசலேம் மற்றும் பென்யமீன் நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் உடன்படிக்கையை ஒப்புக்கொள்கிற வகையில் வாக்குறுதி தரச் செய்தான். தமது முற்பிதாக்கள் கீழ்ப்படிந்த தேவனுடைய உடன்படிக்கையை எருசலேம் ஜனங்களும் கீழ்ப்படிந்தார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் பல் வேறு நாடுகளிலிருந்து விக்கிரகங்களைக் கொண்டு வந்து வைத்திருந்தனர். ஆனால் யோசியா அந்த கொடூரமான விக்கிரகங்களை எல்லாம் அழித்துவிட்டான். ராஜா இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தேவனாகிய கர்த்தருக்குச் சேவைசெய்யுமாறுச் செய்தான். யோசியா உயிரோடு இருந்தவரை ஜனங்கள் தமது முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்தனர்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 34:22-33