2 கொரிந்தியர் 5:7-15

2 கொரிந்தியர் 5:7-15 TCV

ஏனெனில் நாம் காண்பதினால் அல்ல, விசுவாசிப்பதினாலேயே வாழ்கிறோம். நாங்கள் மனத்தைரியத்துடனே இருக்கிறோம். ஆனால் இந்த உடலைவிட்டு வெளியேறி, கர்த்தரோடு குடியிருக்கவே அதிகமாய் விரும்புகிறோம். எனவே நாங்கள் உடலில் குடியிருந்தாலும், அல்லது உடலைவிட்டு வெளியே போனாலும், அவருக்கு பிரியமாய் வாழ்வதையே எங்கள் குறிக்கோளாகும். ஏனெனில், நாம் எல்லோருமே கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் அரியணைக்கு முன்பாக நிற்கவேண்டும். அப்பொழுது நாம் ஒவ்வொருவரும் உடலில் குடியிருந்தபோது செய்த நன்மையினாலும் தீமையினாலும், அவற்றிற்கு ஏற்ற பலனைப் பெற்றுக்கொள்வோம். ஆகவே நாங்கள், கர்த்தருக்குப் பயப்படுதல் என்றால் என்ன என்பதை அறிந்திருக்கிறபடியால், இறைவனிடம் திரும்பும்படி மனிதரை இணங்கவைக்க முயலுகிறோம். நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று இறைவன் நன்கு அறிவார். அதுபோலவே, உங்களுடைய மனசாட்சிக்கும் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்களோ மறுபடியும் எங்களை உங்களுக்கு முன்பாக சிபாரிசு செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் எங்களைக் குறித்து நீங்கள் பெருமையடையத்தக்க ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம். அப்போது இருதயத்தில் இருப்பதைப் பார்க்கிலும், வெளித்தோற்றத்தில் காணப்படுவதைக் குறித்து பெருமையடைவோருக்கு நீங்களே தகுந்த பதில் கூறமுடியும். நாங்கள் பைத்தியக்காரராக இருக்கிறோம் என்றால், இறைவனுக்காகவே நாங்கள் அப்படியிருக்கிறோம். நாங்கள் தெளிந்த மனதையுடையவர்களாக இருக்கிறோம் என்றால், உங்களுக்காகவே நாங்கள் அப்படியிருக்கிறோம். கிறிஸ்துவின் அன்பு எங்களை வலியுறுத்தி ஏவுகிறது. ஏனெனில், நம் எல்லோருக்காகவும் ஒருவர் இறந்தார்; இதனால் நாம் எல்லோருமே இறந்தோம் என்று நாங்கள் நிச்சயமாகவே நம்புகிறோம். அவர் எல்லோருக்காகவுமே இறந்தார், இதனால் வாழ்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென வாழக்கூடாது. அவர்கள் தங்களுக்காக இறந்து, மீண்டும் உயிருடன் எழுப்பப்பட்டவருக்காகவே வாழவேண்டும்.