2 கொரிந்தியர் 5:7-15
2 கொரிந்தியர் 5:7-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஏனெனில் நாம் காண்பதினால் அல்ல, விசுவாசிப்பதினாலேயே வாழ்கிறோம். நாங்கள் மனத்தைரியத்துடனே இருக்கிறோம். ஆனால் இந்த உடலைவிட்டு வெளியேறி, கர்த்தரோடு குடியிருக்கவே அதிகமாய் விரும்புகிறோம். எனவே நாங்கள் உடலில் குடியிருந்தாலும், அல்லது உடலைவிட்டு வெளியே போனாலும், அவருக்கு பிரியமாய் வாழ்வதையே எங்கள் குறிக்கோளாகும். ஏனெனில், நாம் எல்லோருமே கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் அரியணைக்கு முன்பாக நிற்கவேண்டும். அப்பொழுது நாம் ஒவ்வொருவரும் உடலில் குடியிருந்தபோது செய்த நன்மையினாலும் தீமையினாலும், அவற்றிற்கு ஏற்ற பலனைப் பெற்றுக்கொள்வோம். ஆகவே நாங்கள், கர்த்தருக்குப் பயப்படுதல் என்றால் என்ன என்பதை அறிந்திருக்கிறபடியால், இறைவனிடம் திரும்பும்படி மனிதரை இணங்கவைக்க முயலுகிறோம். நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று இறைவன் நன்கு அறிவார். அதுபோலவே, உங்களுடைய மனசாட்சிக்கும் தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்களோ மறுபடியும் எங்களை உங்களுக்கு முன்பாக சிபாரிசு செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் எங்களைக் குறித்து நீங்கள் பெருமையடையத்தக்க ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம். அப்போது இருதயத்தில் இருப்பதைப் பார்க்கிலும், வெளித்தோற்றத்தில் காணப்படுவதைக் குறித்து பெருமையடைவோருக்கு நீங்களே தகுந்த பதில் கூறமுடியும். நாங்கள் பைத்தியக்காரராக இருக்கிறோம் என்றால், இறைவனுக்காகவே நாங்கள் அப்படியிருக்கிறோம். நாங்கள் தெளிந்த மனதையுடையவர்களாக இருக்கிறோம் என்றால், உங்களுக்காகவே நாங்கள் அப்படியிருக்கிறோம். கிறிஸ்துவின் அன்பு எங்களை வலியுறுத்தி ஏவுகிறது. ஏனெனில், நம் எல்லோருக்காகவும் ஒருவர் இறந்தார்; இதனால் நாம் எல்லோருமே இறந்தோம் என்று நாங்கள் நிச்சயமாகவே நம்புகிறோம். அவர் எல்லோருக்காகவுமே இறந்தார், இதனால் வாழ்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென வாழக்கூடாது. அவர்கள் தங்களுக்காக இறந்து, மீண்டும் உயிருடன் எழுப்பப்பட்டவருக்காகவே வாழவேண்டும்.
2 கொரிந்தியர் 5:7-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இந்த சரீரத்தில் குடியிருக்கும்போது கர்த்தரிடம் குடியில்லாதவர்களாக இருக்கிறோம் என்று தெரிந்தும், எப்பொழுதும் தைரியமாக இருக்கிறோம். நாம் தைரியமாகவே இருந்து, இந்த சரீரத்தைவிட்டுப் போகவும் கர்த்தரிடம் குடியிருக்கவும் அதிகமாக விரும்புகிறோம். அதினாலேயே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியில்லாமல் போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாக இருக்கவிரும்புகிறோம். ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தகுந்த பலனைப் பெற்றுக்கொள்வதற்காக, நாமெல்லோரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும். எனவே, கர்த்தருக்குப் பயப்படவேண்டும் என்று அறிந்து, மனிதர்களுக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்குமுன்பாக வெளிப்படையாக இருக்கிறோம்; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாக இருக்கிறோம் என்று நம்புகிறேன். இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மீண்டும் பெருமைப்படுத்திக்கொள்ளாமல், இருதயத்தில் இல்லை, வெளிவேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே, எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படி வாய்ப்பை உண்டாக்குகிறோம். நாங்கள் பைத்தியம் பிடித்தவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கிறோம்; தெளிந்த புத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கிறோம். கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது; ஏனென்றால், எல்லோருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லோரும் மரித்தார்கள் என்றும்; வாழ்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று வாழாமல், தங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்தவருக்கென்று வாழ்வதற்காக, அவர் எல்லோருக்காகவும் மரித்தார் என்றும் நிதானிக்கிறோம்.
2 கொரிந்தியர் 5:7-15 பரிசுத்த பைபிள் (TAERV)
நாம் எதை நம்புகிறோமோ அதன்படி வாழ்கிறோம். நாம் எதைப் பார்க்கிறோமோ அதன்படி வாழவில்லை. எனவேதான் நமக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்கிறேன். நாம் உண்மையாகவே இந்த சரீரத்தைவிட்டு விலகி பரலோகத்தில் கர்த்தரோடு இருக்கவே விரும்புகிறோம். தேவனைத் திருப்திப்படுத்துவதே வாழ்க்கையில் நமது ஒரே குறிக்கோள். இங்கே இந்த சரீரத்தில் வாழ்ந்தாலும் அங்கே கர்த்தரோடு இருந்தாலும் தேவனைத் திருப்திப்படுத்தவே விரும்புகிறோம். நியாயந்தீர்க்கப்படுவதற்காக நாம் அனைவரும் கிறிஸ்துவின் முன்பு நிற்க வேண்டும். ஒவ்வொருவனும் அவனவனுக்குரியதைப் பெறுவான். உலகில் சரீரத்துடன் பூமியில் வசிக்கும்போது அவனவன் செய்த நன்மை அல்லது தீமைகளுக்குத் தகுந்தபடியே தீர்ப்பளிக்கப்படுவான். கர்த்தருக்குப் பயப்படுவது என்றால் என்ன பொருள் என நாம் அறிவோம். எனவே மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம். உண்மையில் நாங்கள் யார் என்பது தேவனுக்குத் தெரியும். எங்களைப் பற்றி உங்கள் இதயங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன். நாங்கள் மீண்டும் உங்களுக்கு எங்களை நிரூபித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. ஆனால் எங்களைப் பற்றி நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்வதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறோம். இப்போது வெளிப்படையாய்த் தெரியும் சில காரணங்களுக்காகத் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ளும் சிலருக்குத் தெரிவிக்க உங்களிடம் ஒரு பதில் உள்ளது. ஒரு மனிதனின் இதயத்துக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள் அவர்கள். நாங்கள் பைத்தியம் என்றால் அதுவும் தேவனுக்காகத்தான். நாங்கள் தெளிந்த, சரியான புத்தி உள்ளவர்கள் என்றால் அதுவும் உங்களுக்காகத்தான். கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டிவிடுகிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்குமாக அவர் இறந்தார் என்பது, அனைவருமே இறந்துவிட்டதையே குறிக்கும் என்று நமக்குத் தெரியும். கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்று இராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர் வாழவேண்டும்.
2 கொரிந்தியர் 5:7-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம். நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தைவிட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம். அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம். ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். ஆகையால், கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன். இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல், இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம். நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும்; தெளிந்தபுத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கும். கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.