கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 5:7-15

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 5:7-15 TAERV

நாம் எதை நம்புகிறோமோ அதன்படி வாழ்கிறோம். நாம் எதைப் பார்க்கிறோமோ அதன்படி வாழவில்லை. எனவேதான் நமக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்கிறேன். நாம் உண்மையாகவே இந்த சரீரத்தைவிட்டு விலகி பரலோகத்தில் கர்த்தரோடு இருக்கவே விரும்புகிறோம். தேவனைத் திருப்திப்படுத்துவதே வாழ்க்கையில் நமது ஒரே குறிக்கோள். இங்கே இந்த சரீரத்தில் வாழ்ந்தாலும் அங்கே கர்த்தரோடு இருந்தாலும் தேவனைத் திருப்திப்படுத்தவே விரும்புகிறோம். நியாயந்தீர்க்கப்படுவதற்காக நாம் அனைவரும் கிறிஸ்துவின் முன்பு நிற்க வேண்டும். ஒவ்வொருவனும் அவனவனுக்குரியதைப் பெறுவான். உலகில் சரீரத்துடன் பூமியில் வசிக்கும்போது அவனவன் செய்த நன்மை அல்லது தீமைகளுக்குத் தகுந்தபடியே தீர்ப்பளிக்கப்படுவான். கர்த்தருக்குப் பயப்படுவது என்றால் என்ன பொருள் என நாம் அறிவோம். எனவே மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம். உண்மையில் நாங்கள் யார் என்பது தேவனுக்குத் தெரியும். எங்களைப் பற்றி உங்கள் இதயங்களுக்கும் தெரியும் என்று நம்புகிறேன். நாங்கள் மீண்டும் உங்களுக்கு எங்களை நிரூபித்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை. ஆனால் எங்களைப் பற்றி நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். எங்களைக் குறித்து நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்வதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறோம். இப்போது வெளிப்படையாய்த் தெரியும் சில காரணங்களுக்காகத் தம்மைத்தாமே பாராட்டிக்கொள்ளும் சிலருக்குத் தெரிவிக்க உங்களிடம் ஒரு பதில் உள்ளது. ஒரு மனிதனின் இதயத்துக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிக் கவலை இல்லாதவர்கள் அவர்கள். நாங்கள் பைத்தியம் என்றால் அதுவும் தேவனுக்காகத்தான். நாங்கள் தெளிந்த, சரியான புத்தி உள்ளவர்கள் என்றால் அதுவும் உங்களுக்காகத்தான். கிறிஸ்துவின் அன்பு எங்களைத் தூண்டிவிடுகிறது. ஏனென்றால் ஒவ்வொருவருக்குமாக அவர் இறந்தார் என்பது, அனைவருமே இறந்துவிட்டதையே குறிக்கும் என்று நமக்குத் தெரியும். கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்று இராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர் வாழவேண்டும்.