2 கொரிந்தியர் 8
8
தாராள மனதுடையவருக்கு ஊக்குவிப்பு
1இப்பொழுதும் பிரியமானவர்களே, மக்கெதோனியாவிலிருக்கிற திருச்சபைகளுக்கு இறைவன் கொடுத்திருக்கிற கிருபையைக் குறித்து நீங்கள் அறியவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். 2அவர்கள் தாங்கள் அனுபவித்த கடுமையான துன்பத்தின் மத்தியில், வறுமையில் வாடியிருந்தபோதும், அவர்களுடைய சந்தோஷம் பெருகி வழிந்ததினால் அவர்கள் தாராள மனதுடன் கொடுப்பவர்களானார்கள். 3அவர்கள் தங்களால் இயலுமான அளவு கொடுத்தார்கள். அதற்கு அதிகமாயும் கொடுத்தார்கள் என்பதைக்குறித்து நான் சாட்சி கூறுகிறேன். தங்கள் சுய விருப்பத்துடனேயே, 4பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யும், இந்தப் பணியில் பங்குகொள்ளும் சிலாக்கியம், தங்களுக்கும் கிடைக்கவேண்டும் என மிகவும் வருந்தி எங்களிடம் வேண்டிக்கொண்டார்கள். 5நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக, அவர்கள் தங்களை முதன்மையாக கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தார்கள். பின்பு இறைவனுடைய சித்தத்தின்படி, அவர்கள் தங்களை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். 6எனவே உங்கள் அன்பின் செயலாகிய இந்த வேலையைத் தொடங்கிய தீத்துவை, உங்களிடம் திரும்பிவந்து அதை நிறைவேற்றும்படி, நாங்கள் அவனை ஊக்குவித்தோம். 7இப்பொழுதோ நீங்கள் விசுவாசத்திலும், பேசுகின்ற ஆற்றலிலும், அறிவிலும், எல்லாவற்றிலுமுள்ள ஆர்வத்திலும், எங்கள்மேல் கொண்டிருக்கிற அன்பிலும், மேம்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். அப்படியே, இந்த அன்பின் நன்கொடையைக் கொடுப்பதிலும் மேம்பட்டவர்களாயிருக்க பார்த்துக்கொள்ளுங்கள்.
8நான் இதை ஒரு கட்டளையாக உங்களுக்குச் சொல்லவில்லை. உதவி செய்வதில் மற்றவர்கள் எவ்வளவு ஆவலாயிருக்கிறார்கள் என்பதை உங்களுக்குக் காண்பித்து, உங்கள் அன்பு எவ்வளவு உண்மையானது எனக் கண்டறியவே விரும்புகிறேன். 9நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர் செல்வந்தராய் இருந்தபோதும், அவர் உங்களுக்காகவே ஏழையாகினார். அவருடைய ஏழ்மையின் மூலமாக, நீங்கள் செல்வந்தர்களாகும்படியாகவே அவர் ஏழையாகினார்.
10எனவே, இந்த விஷயத்தில் உங்களுக்கு எது சிறந்தது என்பதற்கு நான் கொடுக்கும் ஆலோசனை இதுவே: கடந்த வருடத்திலும் முதலாவதாகக் கொடுத்ததும் நீங்களே, கொடுப்பதற்கு ஆசை கொண்டவர்களும் நீங்களே. 11எனவே இந்த வேலையைத் தொடங்குவதற்கு உங்களுக்கிருந்த ஆர்வத்துடன் அதைச் செய்து முடிக்கவும் வேண்டும். அதனால், உங்களிடம் இருப்பவற்றைக் கொண்டு அதைச் செய்து முடியுங்கள். 12கொடுப்பதற்கு ஆவல் இருந்தால், அந்த நன்கொடை எவ்வளவு என்பது முக்கியமல்ல; கொடுப்பவனிடம் இல்லாததின்படியல்ல, உள்ளதின்படியே கொடுப்பதை இறைவன் விரும்புகிறார்.
13உங்கள்மேல் பாரத்தைச் சுமத்தி, மற்றவர்களின் பாரத்தை இலகுவாக்க நாங்கள் விரும்பவில்லை. எல்லோரும் சமநிலையில் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். 14இக்காலத்தில், உங்களுடைய நிறைவு மற்றவர்களின் தேவைகளுக்கு உதவும். அப்படியே, இன்னொருமுறை அவர்களுடைய நிறைவு உங்கள் தேவைக்கு உதவும். இவ்விதமாகவே, உங்களிடையே சமநிலை இருக்கும். 15வேதவசனம் இதைப்பற்றி, “அதிகமாய் சேர்த்தவனிடம், தேவைக்கதிகமாக இருந்ததில்லை. குறைவாய்ச் சேர்த்தவனிடம், போதாமல் இருக்கவுமில்லை”#8:15 யாத். 16:18 என்று சொல்கிறது.
கொரிந்துவில் தீத்து
16உங்கள்மேல் நான் கரிசனையுடையவனாய் இருப்பதுபோலவே, இறைவன் தீத்துவுக்கும் அந்தக் கரிசனையைக் கொடுத்ததினால், இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 17ஏனெனில் தீத்து எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது மட்டுமன்றி, அவனும் உங்களிடம் வருவதற்கு ஆவலுடையவனாய், தன்னுடைய சுயவிருப்பத்தின்படி வருகிறான். 18அவனுடன் நற்செய்தியை பிரசங்கிப்பதில், எல்லாத் திருச்சபைகளின் மத்தியிலும் பெயர்பெற்றவனாகிய மற்றொரு சகோதரனையும் அனுப்புகிறோம். 19அவன் எங்களுடனே காணிக்கைகளைக் கொண்டுபோவதற்காக திருச்சபைகளினால் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறான். கர்த்தருடைய பெயர் மகிமைப்படவும், உதவிசெய்ய எங்களுக்கு உள்ள ஆவல் காண்பிக்கப்படவும், இந்தப் பொறுப்பான வேலையில் அவன் உதவி செய்வான். 20மனமுவந்து கொடுக்கப்பட்ட இந்தக் கொடையை நாங்கள் பகிர்ந்து கொடுக்கும்போது, அதைக்குறித்து யாரும் எங்களைக் குறை சொல்வதைத் தவிர்த்துக்கொள்ள விரும்புகிறோம். 21ஏனெனில் கர்த்தருடைய பார்வையில் மட்டுமல்ல, மனிதருடைய பார்வையிலும் நீதியானதைச் செய்யவே நாங்கள் கடுமையாய் முயற்சிக்கிறோம்.
22மேலும் நாங்கள், வேறொரு சகோதரனை அவர்களுடன் அனுப்புகிறோம். அவன் எப்பொழுதும் உதவிசெய்ய ஆர்வமுடையவனாய் இருப்பதைப் பலவற்றில், பலவிதங்களில் நிரூபித்திருக்கிறான். அவன் இப்பொழுது, உங்களில் மிகுந்த மனவுறுதியுள்ளவனாய் இருப்பதால், உங்களுக்கு உதவிசெய்ய, இன்னும் அதிக ஆவலுடையவனாகவும் இருக்கிறான். 23தீத்துவைப் பொறுத்தமட்டில், அவன் என்னுடைய பங்காளியும், உங்களுக்குப் பணிசெய்வதில், என்னுடைய உடன் ஊழியனுமாய் இருக்கிறான். எங்கள் சகோதரரைப் பொறுத்தமட்டில், அவர்கள் திருச்சபைகளின் பிரதிநிதிகள்; கிறிஸ்துவுக்கு மேன்மையாயிருக்கிறார்கள். 24ஆகவே, இந்த மனிதருக்கு உங்கள் அன்பை நிரூபித்துக் காட்டுங்கள். அப்பொழுதே நாங்கள் உங்களில் கொண்டிருக்கும் பெருமைக்குரிய காரணத்தை திருச்சபைகள் எல்லாம் கண்டுகொள்ளும்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
2 கொரிந்தியர் 8: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.