2 இராஜாக்கள் 19:1-14

2 இராஜாக்கள் 19:1-14 TCV

எசேக்கியா அரசன் இதைக் கேட்டபோது, தனது உடையைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, யெகோவாவின் ஆலயத்திற்குச் சென்றான். அவன் அரண்மனை நிர்வாகியான எலியாக்கீமையும், செயலாளராகிய செப்னாவையும், பிரதம ஆசாரியர்களையும், துக்கவுடை உடுத்தியவர்களாக ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயாவிடம் அனுப்பினான். அவர்கள் அவனிடம், “எசேக்கியா அரசன் கூறுவது இதுவே: இன்றைய நாள் துயரமும், கண்டனமும், அவமானமும் நிறைந்த நாளாய் இருக்கிறது. பிரசவ வேளையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கப் பெலனில்லாதவர்களைப்போல நாங்கள் இருக்கிறோம். உயிருள்ள இறைவனை நிந்திக்கும்படி, அசீரிய அரசன் அனுப்பிய படைத்தளபதி ரப்சாக்கேயின் வார்த்தைகளையெல்லாம், உமது இறைவனாகிய யெகோவா கேட்டிருக்கக்கூடும். அதனால் உமது இறைவனாகிய யெகோவா, தான் கேட்ட வார்த்தைகளுக்காக அவனைத் தண்டிக்கவும் கூடும். ஆகவே நீர் இன்னும் மீதமிருக்கும் மக்களுக்காக வேண்டுதல் செய்யும்” என்றார்கள். எசேக்கியா அரசனின் அதிகாரிகள் ஏசாயாவிடம் வந்தபோது, ஏசாயா அவர்களிடம், “உங்கள் அரசனிடம் போய், ‘அசீரிய அரசனின் வேலைக்காரர் என்னைத் தூஷித்துப் பேசிய வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்கள்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம். இதோ, அவன் ஒரு குறிப்பிட்ட செய்தியைக் கேட்டவுடன் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகக்கூடிய ஒரு ஆவியை நான் அவனுக்குள் அனுப்புவேன். அவனுடைய சொந்த நாட்டிலேயே அவனை நான் வாளால் வீழ்த்துவேன்’ என்று யெகோவா கூறுகிறார்” என்றான். அசீரிய அரசன் லாகீசிலிருந்து வெளியேறி விட்டான் என்று அந்தப் படைத்தளபதி ரப்சாக்கே கேள்விப்பட்டான். உடனே அவன் அங்கிருந்துபோய், அசீரிய அரசன் லிப்னாவுக்கு விரோதமாய் யுத்தம் செய்வதைக் கண்டான். அவ்வேளையில் எத்தியோப்பிய அரசனான திராக்கா, தன்னை எதிர்த்து யுத்தம் செய்ய வருகிறான் என்று அசீரிய அரசன் சனகெரிப் கேள்விப்பட்டான். எனவே திரும்பவும் எசேக்கியாவிடம் இந்தச் செய்தியுடன் தூதுவரை அனுப்பினான்: “யூதாவின் அரசனான எசேக்கியாவுக்கு நீங்கள் சொல்லவேண்டியதாவது, ‘எருசலேம் அசீரிய அரசன் கையில் ஒப்புக்கொடுக்கப்படாது’ என்று, நீ நம்பியிருக்கிற உன் இறைவன் சொல்லும்போது, அதைக்கேட்டு நீ ஏமாறாதே. அசீரிய அரசர்கள் எல்லா நாடுகளையும் முழுவதும் அழித்து அவற்றிற்குச் செய்ததை நீ நிச்சயம் கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ எப்படித் தப்புவாய்? என்னுடைய முற்பிதாக்களால் அழிக்கப்பட்ட நாட்டின் தெய்வங்களான கோசான், ஆரான், ரேசேப் ஆகிய தெய்வங்களால் அவர்களை விடுவிக்க முடிந்ததா? மற்றும் தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும் அவை விடுவித்தனவா? ஆமாத்தின் அரசன் எங்கே? அர்பாத்தின் அரசன் எங்கே? செப்பர்வாயீம், ஏனா, இவ்வா ஆகிய பட்டணங்களின் அரசர்கள் எங்கே? சொல்லுங்கள்.” எசேக்கியா கடிதத்தைத் தூதுவர்களிடமிருந்து வாங்கி அதை வாசித்தான். பின்பு அவன் யெகோவாவினுடைய ஆலயத்திற்குப்போய் யெகோவாவுக்கு முன்பாக அதை விரித்தான்.