2 இராஜாக்கள் 19:1-14

2 இராஜாக்கள் 19:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்தின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்துக்கு இரட்டு உடுத்திக்கொண்டவர்களாக அனுப்பினான். இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைபேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை. ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள். இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள். அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும். இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான். அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான். இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே. இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ? என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும், அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ? ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயிம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே? என்று சொல்லுங்கள் என்றான். எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப்போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து

2 இராஜாக்கள் 19:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எசேக்கியா அரசன் இதைக் கேட்டபோது, தனது உடையைக் கிழித்து, துக்கவுடை உடுத்தி, யெகோவாவின் ஆலயத்திற்குச் சென்றான். அவன் அரண்மனை நிர்வாகியான எலியாக்கீமையும், செயலாளராகிய செப்னாவையும், பிரதம ஆசாரியர்களையும், துக்கவுடை உடுத்தியவர்களாக ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயாவிடம் அனுப்பினான். அவர்கள் அவனிடம், “எசேக்கியா அரசன் கூறுவது இதுவே: இன்றைய நாள் துயரமும், கண்டனமும், அவமானமும் நிறைந்த நாளாய் இருக்கிறது. பிரசவ வேளையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கப் பெலனில்லாதவர்களைப்போல நாங்கள் இருக்கிறோம். உயிருள்ள இறைவனை நிந்திக்கும்படி, அசீரிய அரசன் அனுப்பிய படைத்தளபதி ரப்சாக்கேயின் வார்த்தைகளையெல்லாம், உமது இறைவனாகிய யெகோவா கேட்டிருக்கக்கூடும். அதனால் உமது இறைவனாகிய யெகோவா, தான் கேட்ட வார்த்தைகளுக்காக அவனைத் தண்டிக்கவும் கூடும். ஆகவே நீர் இன்னும் மீதமிருக்கும் மக்களுக்காக வேண்டுதல் செய்யும்” என்றார்கள். எசேக்கியா அரசனின் அதிகாரிகள் ஏசாயாவிடம் வந்தபோது, ஏசாயா அவர்களிடம், “உங்கள் அரசனிடம் போய், ‘அசீரிய அரசனின் வேலைக்காரர் என்னைத் தூஷித்துப் பேசிய வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்கள்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம். இதோ, அவன் ஒரு குறிப்பிட்ட செய்தியைக் கேட்டவுடன் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகக்கூடிய ஒரு ஆவியை நான் அவனுக்குள் அனுப்புவேன். அவனுடைய சொந்த நாட்டிலேயே அவனை நான் வாளால் வீழ்த்துவேன்’ என்று யெகோவா கூறுகிறார்” என்றான். அசீரிய அரசன் லாகீசிலிருந்து வெளியேறி விட்டான் என்று அந்தப் படைத்தளபதி ரப்சாக்கே கேள்விப்பட்டான். உடனே அவன் அங்கிருந்துபோய், அசீரிய அரசன் லிப்னாவுக்கு விரோதமாய் யுத்தம் செய்வதைக் கண்டான். அவ்வேளையில் எத்தியோப்பிய அரசனான திராக்கா, தன்னை எதிர்த்து யுத்தம் செய்ய வருகிறான் என்று அசீரிய அரசன் சனகெரிப் கேள்விப்பட்டான். எனவே திரும்பவும் எசேக்கியாவிடம் இந்தச் செய்தியுடன் தூதுவரை அனுப்பினான்: “யூதாவின் அரசனான எசேக்கியாவுக்கு நீங்கள் சொல்லவேண்டியதாவது, ‘எருசலேம் அசீரிய அரசன் கையில் ஒப்புக்கொடுக்கப்படாது’ என்று, நீ நம்பியிருக்கிற உன் இறைவன் சொல்லும்போது, அதைக்கேட்டு நீ ஏமாறாதே. அசீரிய அரசர்கள் எல்லா நாடுகளையும் முழுவதும் அழித்து அவற்றிற்குச் செய்ததை நீ நிச்சயம் கேள்விப்பட்டிருப்பாய். அப்படியிருக்க நீ எப்படித் தப்புவாய்? என்னுடைய முற்பிதாக்களால் அழிக்கப்பட்ட நாட்டின் தெய்வங்களான கோசான், ஆரான், ரேசேப் ஆகிய தெய்வங்களால் அவர்களை விடுவிக்க முடிந்ததா? மற்றும் தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும் அவை விடுவித்தனவா? ஆமாத்தின் அரசன் எங்கே? அர்பாத்தின் அரசன் எங்கே? செப்பர்வாயீம், ஏனா, இவ்வா ஆகிய பட்டணங்களின் அரசர்கள் எங்கே? சொல்லுங்கள்.” எசேக்கியா கடிதத்தைத் தூதுவர்களிடமிருந்து வாங்கி அதை வாசித்தான். பின்பு அவன் யெகோவாவினுடைய ஆலயத்திற்குப்போய் யெகோவாவுக்கு முன்பாக அதை விரித்தான்.

2 இராஜாக்கள் 19:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்து, சணல் ஆடையை அணிந்துகொண்டு, யெகோவவுடைய ஆலயத்தில் பிரவேசித்து, அரண்மனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், எழுத்தனாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பர்களையும், ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு சணல் ஆடையை அணிந்துகொண்டவர்களாக அனுப்பினான். இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கடிந்துகொள்ளுதலும் அவமானமும் அநுபவிக்கிற நாள்; பிரசவநேரம் நெருங்கியிருக்கிறது, பெற்றெடுக்கவோ பெலனில்லை. ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் எஜமானால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிற வார்த்தைகளுக்காக தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாக இருக்கிறவர்களுக்காக விண்ணப்பம்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள். இவ்விதமாக எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர்கள் ஏசாயாவிடம் வந்து சொன்னார்கள். அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் வேலைக்காரர்கள் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும். இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்திற்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழச்செய்வேன் என்று யெகோவா உரைக்கிறார் என்பதை உங்கள் எஜமானிடத்தில் சொல்லுங்கள் என்றான். அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் போர்செய்கிறதைக் கண்டான். இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு போர்செய்யப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை ஏமாற்ற இடம்கொடாதே. இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் அழித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ? என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும், அவர்களுடைய தேவர்கள் தப்புவித்தது உண்டோ? ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயிம், ஏனா, ஈவா பட்டணங்களின் ராஜாக்களும் எங்கே என்று சொல்லுங்கள் என்றான். எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்து கடிதத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் யெகோவாவின் ஆலயத்திற்குப்போய், அதைக் யெகோவாவுக்கு முன்பாக விரித்து

2 இராஜாக்கள் 19:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)

ராஜாவாகிய எசேக்கியா அவற்றைக் கேள்விப்பட்டான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு முரட்டு துணியை அணிந்தான். தனது துக்கத்தையும் பாதிப்பையும் வெளிப்படுத்தினான். பிறகு அவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். அவன் ஆமோத்சின் குமாரனான தீர்க்கதரிசி ஏசாயாவிடம் அரண்மனை விசாரிப்புக்காரனான எலியாக்கீம் என்பவனையும், செயலாளனான செப்னா என்பவனையும், மூத்த ஆசாரியர்களையும் அனுப்பி வைத்தான். அவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தும் முறையில் முரட்டு ஆடையை அணிந்திருந்தனர். அவர்கள் ஏசாயாவிடம், “‘இன்று பிரச்சனைக்குரிய நாள். நாம் தவறாக உள்ளோம் என்பதைக் காட்டும் நாள். இது குழந்தைகளின் பிரசவ காலம் போல உள்ளது. ஆனால் குழந்தையைப் பெறுவதற்கோ பலமில்லை. அசீரிய ராஜாவின் தளபதியால், ஜீவனுள்ள தேவனைப்பற்றிய கெட்டசெய்திகள் சொல்லி அனுப்பப்பட்டன. உங்கள் தேவனாகிய கர்த்தர் இவை எல்லாவற்றையும் கேட்கலாம். ஒருவேளை கர்த்தர் பகைவனைத் தண்டிக்கலாம். இப்போதும் உயிரோடுள்ளவர்களுக்காக வேண்டுதல் செய்க’ என்று எசேக்கியா கூறினார்” என்றான். எசேக்கியா ராஜாவின் அதிகாரிகள் ஏசாயாவிடம் சென்றனர். ஏசாயா அவர்களிடம், “எசேக்கியா என்னும் உங்கள் ராஜாவிடம் இதைக் கூறுங்கள்: ‘என்னைப்பற்றி அசீரியாவின் அதிகாரிகள் வேடிக்கையாகச் சொன்னதைப்பற்றி பயப்படவேண்டாம். நான் அவனில் ஒரு ஆவியை வைப்பேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்பான். பிறகு அவன் தன் சொந்த நாட்டில் வாளால் கொல்லப்படும்படி செய்வேன்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்று சொன்னான். அசீரிய ராஜா லாகீசை விட்டுப் புறப்பட்டுவிட்டதை அசீரிய தளபதி கேள்விப்பட்டான். அவன் திரும்பி வந்து தனது ராஜா லிப்னாவில் சண்டையிடுவதாக அறிந்தான். அசீரிய ராஜா எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்காப்பற்றி ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டான். அது, “உனக்கு எதிராக சண்டையிட தீராக்கா வந்துள்ளான்!” என்று சொன்னது. எனவே அசீரிய ராஜா மீண்டும் ஒரு தூதுவனை எசேக்கியாவிடம் அனுப்பினான். அவன் அவர்களிடம் செய்தியைச் சொன்னான். அவன் சொன்னது: யூத ராஜாவாகிய எசேக்கியாவிடம் கூறுங்கள்: “‘நீ நம்புகின்ற தேவன் உன்னை முட்டாளாக்குவதற்கு விடாதே. அவனோ, “அசீரிய ராஜா எருசலேம் நகரை வெல்லமாட்டான்!” என்று சொல்கிறான். அசீரிய ராஜா மற்ற நாடுகளில் செய்துள்ளவற்றைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். நாங்கள் அவற்றை முழுமையாக அழித்துவிட்டோம்! நீ காப்பாற்றப்படுவாயா? இல்லை! அந்நாட்டின் தெய்வங்கள் அந்நாட்டு ஜனங்களைக் காப்பற்றவில்லை. எனது முற்பிதாக்கள் அவர்களை அழித்தனர். கோசான், ஆரான், ரேத்சேப், தெலாசாரிலிருந்த ஏதேனின் ஜனங்கள் ஆகியோரையும் அழித்தனர்! ஆமாத்சின் ராஜா எங்கே? அர்பாத்தின் ராஜா எங்கே? செப்பர் வாயிம் நகர ராஜா எங்கே? ஏனா ஈவா நகரங்களின் ராஜாக்களும் எங்கே? அவர்கள் அழிக்கப்பட்டார்கள்’” என்றான். தூதுவர்களிடமிருந்து கடிதங்களை வாங்கி எசேக்கியா வாசித்துப் பார்த்தான். பிறகு கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். அக்கடிதத்தைக் கர்த்தருக்கு முன்பாக வைத்தான்.