ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 19:1-14

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 19:1-14 TAERV

ராஜாவாகிய எசேக்கியா அவற்றைக் கேள்விப்பட்டான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு முரட்டு துணியை அணிந்தான். தனது துக்கத்தையும் பாதிப்பையும் வெளிப்படுத்தினான். பிறகு அவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் சென்றான். அவன் ஆமோத்சின் குமாரனான தீர்க்கதரிசி ஏசாயாவிடம் அரண்மனை விசாரிப்புக்காரனான எலியாக்கீம் என்பவனையும், செயலாளனான செப்னா என்பவனையும், மூத்த ஆசாரியர்களையும் அனுப்பி வைத்தான். அவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தும் முறையில் முரட்டு ஆடையை அணிந்திருந்தனர். அவர்கள் ஏசாயாவிடம், “‘இன்று பிரச்சனைக்குரிய நாள். நாம் தவறாக உள்ளோம் என்பதைக் காட்டும் நாள். இது குழந்தைகளின் பிரசவ காலம் போல உள்ளது. ஆனால் குழந்தையைப் பெறுவதற்கோ பலமில்லை. அசீரிய ராஜாவின் தளபதியால், ஜீவனுள்ள தேவனைப்பற்றிய கெட்டசெய்திகள் சொல்லி அனுப்பப்பட்டன. உங்கள் தேவனாகிய கர்த்தர் இவை எல்லாவற்றையும் கேட்கலாம். ஒருவேளை கர்த்தர் பகைவனைத் தண்டிக்கலாம். இப்போதும் உயிரோடுள்ளவர்களுக்காக வேண்டுதல் செய்க’ என்று எசேக்கியா கூறினார்” என்றான். எசேக்கியா ராஜாவின் அதிகாரிகள் ஏசாயாவிடம் சென்றனர். ஏசாயா அவர்களிடம், “எசேக்கியா என்னும் உங்கள் ராஜாவிடம் இதைக் கூறுங்கள்: ‘என்னைப்பற்றி அசீரியாவின் அதிகாரிகள் வேடிக்கையாகச் சொன்னதைப்பற்றி பயப்படவேண்டாம். நான் அவனில் ஒரு ஆவியை வைப்பேன். அவன் ஒரு வதந்தியைக் கேட்பான். பிறகு அவன் தன் சொந்த நாட்டில் வாளால் கொல்லப்படும்படி செய்வேன்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்று சொன்னான். அசீரிய ராஜா லாகீசை விட்டுப் புறப்பட்டுவிட்டதை அசீரிய தளபதி கேள்விப்பட்டான். அவன் திரும்பி வந்து தனது ராஜா லிப்னாவில் சண்டையிடுவதாக அறிந்தான். அசீரிய ராஜா எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்காப்பற்றி ஒரு வதந்தியைக் கேள்விப்பட்டான். அது, “உனக்கு எதிராக சண்டையிட தீராக்கா வந்துள்ளான்!” என்று சொன்னது. எனவே அசீரிய ராஜா மீண்டும் ஒரு தூதுவனை எசேக்கியாவிடம் அனுப்பினான். அவன் அவர்களிடம் செய்தியைச் சொன்னான். அவன் சொன்னது: யூத ராஜாவாகிய எசேக்கியாவிடம் கூறுங்கள்: “‘நீ நம்புகின்ற தேவன் உன்னை முட்டாளாக்குவதற்கு விடாதே. அவனோ, “அசீரிய ராஜா எருசலேம் நகரை வெல்லமாட்டான்!” என்று சொல்கிறான். அசீரிய ராஜா மற்ற நாடுகளில் செய்துள்ளவற்றைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். நாங்கள் அவற்றை முழுமையாக அழித்துவிட்டோம்! நீ காப்பாற்றப்படுவாயா? இல்லை! அந்நாட்டின் தெய்வங்கள் அந்நாட்டு ஜனங்களைக் காப்பற்றவில்லை. எனது முற்பிதாக்கள் அவர்களை அழித்தனர். கோசான், ஆரான், ரேத்சேப், தெலாசாரிலிருந்த ஏதேனின் ஜனங்கள் ஆகியோரையும் அழித்தனர்! ஆமாத்சின் ராஜா எங்கே? அர்பாத்தின் ராஜா எங்கே? செப்பர் வாயிம் நகர ராஜா எங்கே? ஏனா ஈவா நகரங்களின் ராஜாக்களும் எங்கே? அவர்கள் அழிக்கப்பட்டார்கள்’” என்றான். தூதுவர்களிடமிருந்து கடிதங்களை வாங்கி எசேக்கியா வாசித்துப் பார்த்தான். பிறகு கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். அக்கடிதத்தைக் கர்த்தருக்கு முன்பாக வைத்தான்.