2 இராஜாக்கள் 22:1-10

2 இராஜாக்கள் 22:1-10 TCV

யோசியா அரசனானபோது எட்டு வயதுடையவனாயிருந்தான். இவன் எருசலேமில் முப்பத்தொரு வருடங்கள் ஆட்சிசெய்தான்; இவனுடைய தாயின் பெயர் எதிதாள். இவள் போஸ்காத் நாட்டைச் சேர்ந்த அதாயாவின் மகள். அவன் யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்து, தன் தந்தையான தாவீதின் எல்லா வழிகளிலும் நடந்தான். அவன் இடது புறமாவது வலது புறமாவது விலகவில்லை. யோசியா அரசன் தன் ஆட்சியின் பதினெட்டாம் வருடத்தில், மெசுல்லாமின் மகனான அத்சலியாவின் மகனாகிய சாப்பான் என்கிற செயலாளரை யெகோவாவின் ஆலயத்துக்கு அனுப்பினான். யோசியா அவனிடம், “நீ பிரதான ஆசாரியனான இல்க்கியாவிடம் போய், மக்களிடமிருந்து வாசல் காவலாளர் சேகரித்து யெகோவாவின் ஆலயத்திற்குள் கொண்டுவந்த பணத்தை ஆயத்தப்படுத்தும்படி சொல். யெகோவாவினுடைய ஆலய வேலையை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டவர்களிடம் அதை ஒப்புவி. அதை யெகோவாவினுடைய ஆலயத்தைப் பழுதுபார்ப்பவர்களுக்குக் கூலியாகக் கொடுக்கும்படி சொல். இதைச் தச்சர், கட்டிட வேலையாட்கள், கொல்லரிடமும் கொடுக்கச்சொல். அதைக்கொண்டு ஆலயத் திருத்த வேலைக்கு வேண்டிய மரங்களையும், வெட்டப்பட்ட கற்களையும் வாங்கும் படியும் சொல். ஆனாலும் அவர்கள் நேர்மையாய் நடப்பவர்கள் என்பதால், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்துக்கு அவர்கள் செலவு விபரம் காட்டவேண்டியதில்லை என்றும் இல்க்கியாவிடம் சொல்” என்றான். அப்பொழுது ஆசாரியன் இல்க்கியா செயலாளரிடம், “நான் சட்டப் புத்தகத்தை யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுத்தேன்” என்றான். இல்க்கியா சாப்பானிடம் அதைக் கொடுக்க, சாப்பான் அதை வாசித்தான். அப்பொழுது செயலாளராகிய சாப்பான் அரசனிடம் போய், “உம்முடைய அதிகாரிகள் ஆலயத்திலிருந்த பணத்தை எடுத்து யெகோவாவினுடைய ஆலய வேலையை செய்பவர்களிடமும், மேற்பார்வை செய்பவர்களிடமும் ஒப்படைத்துள்ளார்கள்” என்று அறிவித்தான். மேலும் செயலாளராகிய சாப்பான், “ஆசாரியன் இல்க்கியா எனக்கு ஒரு புத்தகத்தை தந்திருக்கிறான்” என்று சொல்லி அரசனுக்கு முன்பாக அதை வாசித்தான்.