2 இராஜாக்கள் 22:1-10

2 இராஜாக்கள் 22:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள். அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான். ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி: நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல் காக்கிறவர்கள் ஜனத்தின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து, பிற்பாடு அவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்து, அவர்கள் அதைக் கர்த்தரின் ஆலயத்தைப் பழுது பார்க்கிறதற்காக அதிலிருக்கிற வேலைக்காரராகிய, தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி வேண்டிய மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும். ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாய் நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின் கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டுபிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான். அப்பொழுது சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு மறுஉத்தரவு சொல்லி, ஆலயத்திலே தொகையிட்டுக் கண்ட பணத்தை உமது அடியார் சேர்த்துக் கட்டி, அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள் என்று சொன்னான். சம்பிரதியாகிய சாப்பான் பின்னையும் ராஜாவை நோக்கி: ஆசாரியனாகிய இல்க்கியா என்னிடத்தில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்று அறிவித்து, அதை ராஜாவுக்கு முன்பாக வாசித்தான்.

2 இராஜாக்கள் 22:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யோசியா அரசனானபோது எட்டு வயதுடையவனாயிருந்தான். இவன் எருசலேமில் முப்பத்தொரு வருடங்கள் ஆட்சிசெய்தான்; இவனுடைய தாயின் பெயர் எதிதாள். இவள் போஸ்காத் நாட்டைச் சேர்ந்த அதாயாவின் மகள். அவன் யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்து, தன் தந்தையான தாவீதின் எல்லா வழிகளிலும் நடந்தான். அவன் இடது புறமாவது வலது புறமாவது விலகவில்லை. யோசியா அரசன் தன் ஆட்சியின் பதினெட்டாம் வருடத்தில், மெசுல்லாமின் மகனான அத்சலியாவின் மகனாகிய சாப்பான் என்கிற செயலாளரை யெகோவாவின் ஆலயத்துக்கு அனுப்பினான். யோசியா அவனிடம், “நீ பிரதான ஆசாரியனான இல்க்கியாவிடம் போய், மக்களிடமிருந்து வாசல் காவலாளர் சேகரித்து யெகோவாவின் ஆலயத்திற்குள் கொண்டுவந்த பணத்தை ஆயத்தப்படுத்தும்படி சொல். யெகோவாவினுடைய ஆலய வேலையை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டவர்களிடம் அதை ஒப்புவி. அதை யெகோவாவினுடைய ஆலயத்தைப் பழுதுபார்ப்பவர்களுக்குக் கூலியாகக் கொடுக்கும்படி சொல். இதைச் தச்சர், கட்டிட வேலையாட்கள், கொல்லரிடமும் கொடுக்கச்சொல். அதைக்கொண்டு ஆலயத் திருத்த வேலைக்கு வேண்டிய மரங்களையும், வெட்டப்பட்ட கற்களையும் வாங்கும் படியும் சொல். ஆனாலும் அவர்கள் நேர்மையாய் நடப்பவர்கள் என்பதால், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்துக்கு அவர்கள் செலவு விபரம் காட்டவேண்டியதில்லை என்றும் இல்க்கியாவிடம் சொல்” என்றான். அப்பொழுது ஆசாரியன் இல்க்கியா செயலாளரிடம், “நான் சட்டப் புத்தகத்தை யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுத்தேன்” என்றான். இல்க்கியா சாப்பானிடம் அதைக் கொடுக்க, சாப்பான் அதை வாசித்தான். அப்பொழுது செயலாளராகிய சாப்பான் அரசனிடம் போய், “உம்முடைய அதிகாரிகள் ஆலயத்திலிருந்த பணத்தை எடுத்து யெகோவாவினுடைய ஆலய வேலையை செய்பவர்களிடமும், மேற்பார்வை செய்பவர்களிடமும் ஒப்படைத்துள்ளார்கள்” என்று அறிவித்தான். மேலும் செயலாளராகிய சாப்பான், “ஆசாரியன் இல்க்கியா எனக்கு ஒரு புத்தகத்தை தந்திருக்கிறான்” என்று சொல்லி அரசனுக்கு முன்பாக அதை வாசித்தான்.

2 இராஜாக்கள் 22:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; போஸ்காத் ஊரைச் சேர்ந்த அதாயாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் எதிதாள். அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான். ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருட ஆட்சியிலே, ராஜா மெசுல்லாமின் மகனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் எழுத்தனைக் யெகோவாவின் ஆலயத்திற்கு அனுப்பி: நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், யெகோவவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல் காக்கிறவர்கள் மக்களின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து, பின்பு அவர்கள் அதைக் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களின் கையிலே கொடுத்து, அவர்கள் அதைக் யெகோவாவின் ஆலயத்தைப் பழுது பார்க்கிறதற்காக அதிலிருக்கிற வேலைக்காரர்களாகிய, தச்சர்களுக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொல்லர்களுக்கும், ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்குத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும். ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாக நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின் கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா எழுத்தனாகிய சாப்பானை நோக்கி: நான் யெகோவாவின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புத்தகத்தைக் கண்டுபிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புத்தகத்தை சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான். அப்பொழுது சாப்பான் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவிற்கு மறுஉத்திரவு சொல்லி, ஆலயத்திலே தொகையிட்டுக் கிடைத்த பணத்தை உமது அடியார்கள் சேர்த்துக் கட்டி, அதைக் யெகோவாவுடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களின் கையிலே கொடுத்தார்கள் என்று சொன்னான். எழுத்தனாகிய சாப்பான் மேலும் ராஜாவை நோக்கி: ஆசாரியனாகிய இல்க்கியா என்னிடத்தில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தான் என்று அறிவித்து, அதை ராஜாவிற்கு முன்பாக வாசித்தான்.

2 இராஜாக்கள் 22:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

யோசியா ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எதிதாள் ஆகும். இவள் போஸ்காத்திலுள்ள அதாயாவின் குமாரத்தி ஆவாள். கர்த்தர் நல்லதென்று சொன்னதன்படியே இவன் வாழ்ந்து வந்தான். தன் முற்பிதாவான தாவீது போலவே தேவனை பின்பற்றினான். யோசியா தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தான். தேவன் விரும்பியவற்றைக் கொஞ்சம் கூட மாற்றவில்லை. தனது 18வது ஆட்சியாண்டில் யோசியா, மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் குமாரனாகிய சாப்பான் என்னும் செயலாளனை கர்த்தருடைய ஆலயத்திற்கு அனுப்பினான். அவனிடம், “நீ தலைமை ஆசாரியனாகிய இல்க்கியாவினிடம் போ. கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் கொண்டு வந்த பணம் அவனிடம் இருக்கும். அது வாயில் காவலர்கள் ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு சேகரித்துக் கொடுத்த பணம். அதனை கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வரவேண்டும். பிறகு அப்பணத்தை கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும் வேலை செய்கிறவர்களைக் கண்காணிப்பவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அக்கண்காணிப்பாளர்கள் அப்பணத்தை ஆலயத்தில் வேலை செய்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அங்கு தச்சுவேலை செய்பவர்களும், கட்டுபவர்களும், கல் உடைப்பவர்களும் உள்ளனர். அப்பணத்தால் ஆலயத்தைச் செப்பனிட மரமும் கல்லும் வாங்க வேண்டும். வேலைக்காரர்களுக்குக் கொடுக்கும் பணத்துக்குக் கணக்கு கேட்க வேண்டாம். ஏனென்றால் அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சொல்” என்றான். செயலாளராகிய சாப்பானிடம் தலைமை ஆசாரியர் இல்க்கியா, “கர்த்தருடைய ஆலயத்தில் சட்டங்களின் புத்தகத்தை கண்டெடுத்தேன்!” என்று கூறினான். அவன் சாப்பானிடம் அதனைக் கொடுத்தான். சாப்பான் அதனை வாசித்தான். செயலாளராகிய சாப்பான் ராஜாவாகிய யோசியாவிடம் வந்து, “உங்கள் வேலைக்காரர்கள் ஆலயத்திலுள்ள பணத்தையெல்லாம் சேகரித்துவிட்டார்கள். அதனை அவர்கள் வேலையைக் கண்காணிப்பவர்களிடம் கொடுத்துவிட்டார்கள்” என்றான். பிறகு சாப்பான் ராஜாவிடம், “ஆசாரியனான இல்க்கியா என்னிடம் இந்த புத்தகத்தைக் கொடுத்தான்” என்று கூறி ராஜாவுக்கு அதனை வாசித்துக்காட்டினான்.