ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 22:1-10

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 22:1-10 TAERV

யோசியா ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 8 வயது. அவன் எருசலேமில் 31 ஆண்டுகள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் எதிதாள் ஆகும். இவள் போஸ்காத்திலுள்ள அதாயாவின் குமாரத்தி ஆவாள். கர்த்தர் நல்லதென்று சொன்னதன்படியே இவன் வாழ்ந்து வந்தான். தன் முற்பிதாவான தாவீது போலவே தேவனை பின்பற்றினான். யோசியா தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தான். தேவன் விரும்பியவற்றைக் கொஞ்சம் கூட மாற்றவில்லை. தனது 18வது ஆட்சியாண்டில் யோசியா, மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் குமாரனாகிய சாப்பான் என்னும் செயலாளனை கர்த்தருடைய ஆலயத்திற்கு அனுப்பினான். அவனிடம், “நீ தலைமை ஆசாரியனாகிய இல்க்கியாவினிடம் போ. கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் கொண்டு வந்த பணம் அவனிடம் இருக்கும். அது வாயில் காவலர்கள் ஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு சேகரித்துக் கொடுத்த பணம். அதனை கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வரவேண்டும். பிறகு அப்பணத்தை கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும் வேலை செய்கிறவர்களைக் கண்காணிப்பவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அக்கண்காணிப்பாளர்கள் அப்பணத்தை ஆலயத்தில் வேலை செய்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அங்கு தச்சுவேலை செய்பவர்களும், கட்டுபவர்களும், கல் உடைப்பவர்களும் உள்ளனர். அப்பணத்தால் ஆலயத்தைச் செப்பனிட மரமும் கல்லும் வாங்க வேண்டும். வேலைக்காரர்களுக்குக் கொடுக்கும் பணத்துக்குக் கணக்கு கேட்க வேண்டாம். ஏனென்றால் அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சொல்” என்றான். செயலாளராகிய சாப்பானிடம் தலைமை ஆசாரியர் இல்க்கியா, “கர்த்தருடைய ஆலயத்தில் சட்டங்களின் புத்தகத்தை கண்டெடுத்தேன்!” என்று கூறினான். அவன் சாப்பானிடம் அதனைக் கொடுத்தான். சாப்பான் அதனை வாசித்தான். செயலாளராகிய சாப்பான் ராஜாவாகிய யோசியாவிடம் வந்து, “உங்கள் வேலைக்காரர்கள் ஆலயத்திலுள்ள பணத்தையெல்லாம் சேகரித்துவிட்டார்கள். அதனை அவர்கள் வேலையைக் கண்காணிப்பவர்களிடம் கொடுத்துவிட்டார்கள்” என்றான். பிறகு சாப்பான் ராஜாவிடம், “ஆசாரியனான இல்க்கியா என்னிடம் இந்த புத்தகத்தைக் கொடுத்தான்” என்று கூறி ராஜாவுக்கு அதனை வாசித்துக்காட்டினான்.