2 இராஜாக்கள் 9:30-37

2 இராஜாக்கள் 9:30-37 TCV

யெகூ யெஸ்ரயேலுக்குப் போனான். யேசபேல் அதைக் கேள்விப்பட்டபோது, அவள் தன் கண்களுக்கு மை பூசி தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னலருகே பார்த்துக்கொண்டு நின்றாள். யெகூ வாசலுக்கு வந்தபோது யேசபேல் அவனைப் பார்த்து, “கொலைகாரனே! தன் எஜமானைக் கொலைசெய்த சிம்ரியைப் போன்றவனே! சமாதானத்துடன் வருகிறாயா” என்று கேட்டாள். யெகூ மேலே நிமிர்ந்து ஜன்னலைப் பார்த்து, “எனக்குச் சார்பாக இருப்பவர்கள் யார்?” என்றான். இரண்டு மூன்று அதிகாரிகள் வெளியே அவனை எட்டிப் பார்த்தார்கள். அப்பொழுது யெகூ அவர்களிடம், “அவளைத் தூக்கி கீழே எறிந்துவிடுங்கள்” என்றான். அவர்கள் அவளைக் கீழே எறிந்தார்கள். அவளுடைய இரத்தம் சுவரிலும், குதிரைகளிலும் தெறித்தது. யெகூ அவளுக்கு மேலாக தேரைச் செலுத்தினான். அவன் உள்ளே போய் சாப்பிட்டுக் குடித்து, “இந்தச் சபிக்கப்பட்ட பெண்ணை எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணுங்கள். அவள் ஒரு அரசனின் மகள்” என்று கூறினான். ஆனால் அவளை அடக்கம்பண்ணுவதற்குப் போனபோது அவளுடைய மண்டையோட்டையும், கால்களையும், கைகளையும் தவிர வேறெதையும் காணவில்லை. அவர்கள் திரும்பிப்போய் அதை யெகூவுக்கு அறிவித்தபோது அவன் பதிலாக, “திஸ்பிய ஊரைச்சேர்ந்த யெகோவாவின் பணியாளன் எலியாவின் மூலம் யெகோவா கூறிய வார்த்தை இதுவே: யெஸ்ரயேலின் வெளிநிலத்தில் யேசபேலின் சதையை நாய்கள் தின்னும். யேசபேலின் உடல் யெஸ்ரயேல் நிலத்தின் வயல்வெளியின் எருவைப்போல கிடக்கும். அதைப் பார்க்கும் யாரும், ‘அது யேசபேல்’ என்று கூற முடியாமலிருக்கும் என்று சொல்லியிருந்தாரே” என்றான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 2 இராஜாக்கள் 9:30-37